Published:Updated:

தில் லேடி... ஜாலி கேடி...நயன்தாராவை ஏன் நமக்குப் பிடிக்குது தெரியுமா? #HBDNayanthara

Vikatan
தில் லேடி... ஜாலி கேடி...நயன்தாராவை ஏன் நமக்குப் பிடிக்குது தெரியுமா?  #HBDNayanthara
தில் லேடி... ஜாலி கேடி...நயன்தாராவை ஏன் நமக்குப் பிடிக்குது தெரியுமா? #HBDNayanthara

“கதைகள் நிறைய வரும், அதுல எனக்குப் பிடிச்ச கதையில் தான் நான் நடிப்பேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாட்டாலும் நல்ல கதைன்னா, நிச்சயம் நயன்தாரா அந்த படத்தில் இருப்பாள்”

திரைக்கு வந்த சமயத்தில் நயன்தாரா சொன்ன வார்த்தைகள். இன்றுவரையிலும் பின்பற்றுவதே நயனின் அழகு. யாருக்குத்தான் பாஸ் நயன்தாராவை பிடிக்காமல் இருக்கும். எத்தனை பிரச்னைகள், கிசுகிசுகள் என்று அனைத்தையும் அசால்ட்டாக தாண்டி, சிக்ஸர் அடிக்கும் க்யூட் குயின் நயன்தாரா.  அழகு மட்டுமில்லை, தைரியமும், எடுத்த முடிவில் உறுதியும்தான் 11 வருட திரையுலகில் இன்றும் நம்பர் 1 நடிகை. ரசிகனுக்கு இந்த அளவுக்கு ஏன் நயனை பிடிக்கிறது?

லேடி சூப்பர் ஸ்டார்!

குடும்பம், நண்பர்கள், நடிப்பு என்று ஜாலியாக தன்னுடைய சினிமாவைத் தொடங்கினார் நயன். 2005ல் சரத்குமாருடன் நயன்தாரா நடித்த “ஐயா”,  தமிழ் சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு. அடுத்தப் படமே, ரஜினியுடன் சந்திரமுகி, தெறி லெவல் ஹிட். கஜினியில் இரண்டாவது நாயகியாக நடித்தார். விஜய்யின் சிவகாசியில் குத்துப்பாட்டுக்கு நடனம் என நயனுக்கு தமிழில்  மார்கெட் குறைகிறது. அந்த நேரத்தில் இவரை இரண்டு புயல் தொரத்தியடிக்கிறது. முதலில், வல்லவனில் சிம்புவுடன் கிசுகிசு. அதிலிருந்து மீண்டுவரும் நயன், தனுஷின் யாரடி நீ மோகினி, பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு படத்திலும் நடிக்கிறார். அந்த சமயத்தில் மீண்டும் காதல், அதனால் இந்துவாக மதமாற்றம், என்று பல பிரச்னைகள். இதற்கு நடுவே படங்களும் சரிவர அமையாத நிலை. இவற்றையெல்லாம் உடைத்தெறிந்து, ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டுவந்த நயனுக்கு கைகொடுத்த படங்கள்தான் அஜித்துடன் ஆரம்பம், ஆர்யாவுடன் ராஜா ராணி.  நடிப்பு வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருந்தவர், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைக்காக அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்றெல்லாம் குழப்பிக்கொள்ள மாட்டார். 11 வருட திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். எந்த பிரச்னை வந்தாலும் வருடத்துக்கு ஒரு படமாவது நடித்துவிடும் போல்ட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.  

எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர் நயன்! 

மலையாளிப் பொண்ணு, அப்பா விமானப்படையில் அதிகாரியாக இருந்ததால் வட இந்தியாவில் தான் படித்து வளர்ந்தார். சினிமாவில் சாதிக்க வேண்டும், நடிகையாகவேண்டும் என்ற கனவுகளெல்லாம் நயனுக்கு ஆரம்பத்தில் கிடையாது. கல்லூரி படிக்கும்போது விளையாட்டாக நடிக்கலாம் என்று முயற்சிக்கிறார். 2003ல் ஜெயராம் ஜோடியாக, தாய்மொழியான மலையாளத்தில் முதல் படம்  “மனசினகாரே”. இப்படத்தில் நடிக்கவருவதற்கு முன்பு வரையிலும் ஷூட்டிங் ஸ்பாட் கூட பார்த்ததில்லை.  முதல் நாள், முதல் காட்சி... அன்றிலிருந்து இன்று வரை நடிப்புக்காக எந்தவித சிரமமும் கொண்டதில்லை.  தாவணி முதல் ஆக்‌ஷன் வரை எந்த கேரக்டர் என்றாலும் அசால்டாக நடிப்பது நயன் ஸ்டைல். 

பாசக்காரி! 

ஒருவரைப் பிடித்துவிட்டால், அவருக்காக எதையும் செய்வது நயனின் குணம். நயனுக்கு சினிமாவில் எக்கச்சக்க நண்பர்கள், எந்த நேரத்தில் உதவியென்றாலும் மறுக்காமல் செய்பவர்.  மேக்கப் ஆர்டிஸ்டையே தங்கமாக பார்த்துக்கொள்ளும் பாசக்காரி நயன். யாரையும் எளிதில் உதாசினப்படுத்தமாட்டார். ஓவர் சீன்னெல்லாம் இல்லாமல், படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், எல்லோரிடமும் ஜாலியாக பேசுவதே நயனுக்கு பிடிக்கும். ஆனால் ஒருவரை வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால், அவ்வளவு தான். திரும்பிப் பார்க்க மாட்டார். 

நடிப்பில் நயனின் பார்முலா! 

ஒரு காலத்தில் நயனிடம் கதைச்சொல்லி, அவரை நடிக்க வைப்பது சிரமம். பல பெரிய இயக்குநர்கள் வரிசையில் நின்ற காலம். ஆனால் இப்பொழுதெல்லாம், கதை பிடித்திருந்தால் அறிமுக இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க நயன் ரெடி.  அதுமட்டுமில்லை, லேடி சூப்பர் ஸ்டாராக பதவியேற்றாகிவிட்டது, இனி சின்ன நடிகர்களுடன் நடிக்கமாட்டேன் என்று பந்தா பேர்வழியும் கிடையாது. கதை பிடித்திருந்தால், யாருடனும் நடிப்பதுதான் நயனின் பார்முலா.  ஒவ்வொருமுறையும் வதந்தியில் சிக்கி மீளும்போதும், அவரின் சம்பளமும் உயர்ந்தது. கோடிகளில் சம்பளம் வாங்கிவந்தாலும், பட்ஜெட்டுக்கு ஏற்ற சம்பளத்தில் கரிசனம் காட்டுவார். குறிப்பாக மலையாளத்தில் நடிக்கும்போது லட்சங்களிலேயே சம்பளமும் பெறுவார்.  ஆறு படங்கள் வீதம், இந்த இரண்டு வருடத்தில் 12 படங்கள் நடித்துவிட்டார். இவர் நடித்தாலே ஹிட் தான் என்பதால் சினிமா வட்டாரத்தில் லக்கி கேர்ளாக வலம் வருகிறார்.  

ரசிகர்களின் குயின்! 

ஒவ்வொரு படத்துக்கும், தன்னுடைய நடிப்பு ஸ்டைலை மாற்றிக்கொண்டே இருப்பது நயன் ப்ளஸ். ஒரே நேர்கோட்டில் நடிக்காமல், ஜாலியாக ஒரு படமென்றால் படுசீரியஸாக மற்றொரு படம் என வெரைட்டியாக நடிப்பவர். சுடிதார் முதல் பிகினி வரை எந்த கேரக்டர் என்றாலும் ரசிகர்களை அரசடிக்கும் கில்லி.  என்னதான் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், எவ்வளவு தான் கிசுகிசுக்களில் சிக்கினாலும் நயன், ரசிகர்களின் மனதில் என்றுமே குயின்தான். பேச்சிலும், நடிப்பிலும், குணத்திலும் இனிமையாவர். தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகை. இவரின் வாழ்க்கை, மற்ற நடிகைகளுக்கு நிச்சயம் இன்ஸ்பெரேஷன் தான்.  அழகு மட்டுமல்ல, மனதிலும் இளமையான நயனிடம் ரசிகர்கள் கேட்பது ஒன்று மட்டுமே... இன்னும் நிறைய படங்கள்... அவ்வளவுதான் காதும்மா.... 

பிறந்த நாள் வாழ்த்துகள் நயன்!

- பி.எஸ்.முத்து- 

Vikatan