ஸ்டான்லி குப்ரிக் படத்துடன் தொடங்கியது திருப்பூரில் உலகத் திரைப்பட விழா!

திரைப்பட விழா

உற்சாகமாகத் தொடங்கியது திருப்பூர் உலகத் திரைப்பட விழா. 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவை 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் நடத்துகின்றனர். 5-வது ஆண்டாக இன்று தொடங்கப் போகும் விழா, திருப்பூரில் நடப்பது இதுவே முதல்முறை. சென்னையில் பல உலக திரைப்பட விழாக்கள் நடந்தாலும், மற்ற ஊர்களில் நடப்பது அரிது.

முதல் இரண்டாண்டுகள் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவுடன் இணைந்து நடத்தப்பட்டது. பின்பு நகரங்களைத் தாண்டியும் உலக திரைப்படங்களைக் கொண்டு செல்லும் நோக்கில் அடுத்த இரண்டு ஆண்டுகள் பட்டுக்கோட்டையிலும், கம்பத்திலும் முறையே நடத்தப் பட்டது.

இப்போது இந்த ஆண்டு தொழில் நகரமான திருப்பூருக்கு வந்துள்ளது. மாவட்ட அளவில் மட்டுமல்லாது தமிழ்நாடு அளவிலும் முக்கியமான எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் வருவார்கள் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவின் முக்கிய ஒருங்கிணைப்பாளரும், தமுஎகச தலைவருமான எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் விழா பற்றி கூறுகையில், "தொடர்ந்து ஐந்நாவது வருடமாக திருப்பூரில் இன்று திரைப்பட விழா தொடங்குகிறது. சினிமா நமது சிந்தனைத் தளத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருந்தும் அது தமிழ் வாழ்வை பிரதிபலிக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். முதலில் நல்ல சினிமா என்றாலே இங்கே பலருக்கும் தெரியாது. வாழ்வை பேசும் படங்களே நல்ல சினிமா. மேலும் இங்கு சினிமா என்பது தொடர்ந்து நம் சிந்தனைத் தளத்தை பாதிக்கக் கூடிய ஒன்றாகவும் இருந்து வந்துள்ளது. இப்படியான சூழலில் நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதே இந்த விழாவின் நோக்கம்" என்றார்.

திரைப்பட விழாவின் முதல் நாளான இன்றைய நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையான எடிட்டர் லெனின் துவக்கி வைக்கிறார்.

முதல் படமாக "ஸ்பார்டகஸ்" திரைப்படம் காலை 10 மணிக்கு திரையிடப்பட்டது. உலக திரைப்பட இயக்குநர்களில் தன் திரைவாழ்கையில் அனைத்து விதமான உச்சங்களையும் தொட்டவரென புகழப்படும் ஸ்டான்லி குப்ரிக் இயக்கியிருக்கும் இந்தப் படம் "உலக சினிமா வரலாற்றில் முதல் காவியப் படம்"என அடையாளப்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் என 12 நாடுகளைச் சேர்ந்த 23 படங்கள் திரையிடப்படுகிறது. நுழைவுக் கட்டணமாக ஒரு நாளுக்கு ₹200 என்றும், ஐந்து நாளுக்கும் சேர்த்து ₹1000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கபிலன். இல, செந்தமிழ் செல்வன்

மாணவப் பத்திரிகையாளர்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!