Published:Updated:

சுஜாதாவின் ‘ஆ’ நாவலுக்கும் ‘சைத்தான்’ படத்துக்கும் என்ன லிங்க்? இயக்குநர் பதில்!

Vikatan
சுஜாதாவின் ‘ஆ’ நாவலுக்கும் ‘சைத்தான்’ படத்துக்கும் என்ன லிங்க்? இயக்குநர் பதில்!
சுஜாதாவின் ‘ஆ’ நாவலுக்கும் ‘சைத்தான்’ படத்துக்கும் என்ன லிங்க்? இயக்குநர் பதில்!


ஆனந்தவிகடனில் 1992-ல் சுஜாதா எழுதி, தொடர்கதையாக வந்த கதை ‘ஆ..!’. கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் தினேஷ் குமாரின் மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது அவனுக்கு ஏதோதோ கட்டளைகள் இடுகிறது. அந்தக் குரலின் ஆணைகளுக்கு அவன் செயல்படுகிறான். அந்தக் கதையின் சில பகுதிகளைப் படியுங்கள்.


’என்ன குரல்கள்?’ என்று கேட்டார்.

‘இரண்டு மூன்று வகை இருக்கின்றன. ஒரு குரல் என் குரல் போலவும் இருக்கிறது. கடவுள் குரல் போலவும் இருக்கிறது’

‘நீ கடவுளை நம்புகிறாயா?’

‘தெரியவில்லை. கடவுள் இருந்தால் அவர் குரல் அப்படித்தான் இருக்கும்போல் தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் என்னைக் கட்டாயமாக..’

------------------ 

யானைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தவனை அப்போதுதான் கவனித்தேன். முன் பற்களில் ஒன்றில்லாமல் என்னைப் பார்த்து ரொம்ப சிநேகிதமாகக் கண் சிமிட்டினான். நான் சட்டென்று பார்வையைத் திருப்பினாலும் பத்து செகண்ட் கழித்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் அருகில் வந்திருந்தான்.

‘ஜயலட்சுமியை காணான் வந்நோ..’

’என்ன?’

‘வரு... வரு..’ என்றான். ‘ஞான் காணிக்கும்.. வரு..’ அவன் தலை அடர்த்தியாக இருந்தது. பிச்சைக்காரன் போல இருந்தாலும் நெற்றியில் சந்தனம் வறண்டிருந்தது. காதில் பீடி செருகியிருந்தான். நான் விலகிக்கொள்ள, அவன் ஒட்டிக்கொண்டான். ‘ஒரு நிமிட்டல் காணிக்கும்.

 ‘ஒரு அஞ்ஞி ரூபா தரு...’

நான் ஜிப்பாவுக்குள் பர்சைத் தேடி நிரட, அவன் ‘வேகம் வரு... வேகம் வரு...’ என்று என்னை அழைத்தான். நான் அம்மாவையும் தேவகியையும் பார்த்தேன். அவர்கள் பகவதியின் ஆரத்தியில் மெய் மறந்திருந்தார்கள்.

----------------

தேவகியிடம் சொல்லிவிட்டு கார் வருவதற்கும் சதித்தனமாக மெல்ல இருப்பிடத்தை விட்டுப் புறப்பட்டேன். பஸ் நிலையத்துக்கு வந்து நின்றேன். பஸ் காலியாக வந்து நின்றது. ஏறிக்கொண்டபோது கண்டக்டர் என்னை உள்ளே வாங்கி விசில் கொடுத்தார்.  அவர் இருக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. நானே போய் டிக்கெட் வாங்கிக்கொண்டேன்.

‘எந்த ஸ்டாப்பில்?’ என்று அவர் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. ரொம்பநாள் பழக்கம்போல என்னைப் பார்த்து சிரித்தார். பஸ் பாலத்தின்மேல் போனது. அந்தப் பாலம் இரும்புப் பாலமாக குறுகலாக இருந்தது. ஒருவழி மட்டும்தான் போகமுடிந்தது. 

---------------

இப்போது அந்த ஒன்பது நிமிட ஆரம்ப காட்சிகளைப் பாருங்கள்:-

சுஜாதாவின் ‘ஆ’ நாவலைத் தழுவித்தான் சைத்தான் படம் இருப்பதாக ஆரம்பத்திலேயே பேச்சுகள் உலவின. இரண்டு தினங்களுக்கு முன் வெளியான படத்தின் ஒன்பது நிமிட ஆரம்பக் காட்சிகள் அதை உறுதிப்படுத்துகின்றன. மேலே வருகிற காட்சிகள், திரைமொழிக்கு ஏற்றவாறு அழகாகவே படமாக்கப்பட்டுள்ளது. நாயகன் பெயர் அதே தினேஷ். கதையில் சுஜாதா எழுதியது போலவே, இறந்த நண்பன் பெயர் அதே ரவி. எல்லாவற்றுக்கும் மேலாக அதே ஜயலட்சுமி டீச்சர். பஸ் போகும் காட்சியில் பாலம் காண்பிக்கப்படுவது, விஜய் ஆண்டனியின் கண்ணோரத்தில் ஒரு கண்ணீர்த்துளி ஓடுவது என்று அவரின் எழுத்துகள் அப்படியப்படியே படமாக்கப்பட்டிருக்கிறது.  ‘அந்த அறைக்குள் அழைத்துச் சென்றபோது நிலைப்படி தாழ்வாக இருந்தது. ஜயலட்சுமி உள்ளே உட்கார்ந்திருந்தாள்’ என்று சுஜாதா எழுதியிருப்பார். கீழே உள்ள திரைச்சொட்டைப்  பாருங்கள்;

சுஜாதா இருந்திருந்தால் இப்படி பெர்ஃபெக்டாக படமாக்கியிருக்கியிருக்கிறீர்கள் என்று பாராட்டித்தான் இருப்பார் என்று காட்சிகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. ஆனால் சுஜாதா வாசகர்களுக்குத்தான் புலம்ப ஒரு விஷயம் இருக்கிறது. இதற்கு முன்னர் வெளியிட்ட டிரெய்லர் முடிவில் உள்ள பெயர்களிலோ, இந்த ஃபுல் டைட்டில் ஓடும் வீடியோவில் எந்த இடத்திலுமோ சுஜாதா பெயரைக் காணமுடியவில்லை. ஒருவேளை படத்தின் ஆரம்பத்தில் நன்றியோ, இந்த நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது என்றோ போடக்கூடும்.

டிரெய்லர், ஆரம்பக் காட்சிகள் எல்லாமே முழுமையாக ‘ஆ’ நாவலைப் பிரதிபலித்திருக்கிறது. ஒருவேளை படத்தில் பின்பகுதிகள் மாற்றப்பட்டிருக்கலாம். இன்னொரு பெரிய எதிர்பார்ப்பு எங்களுக்கு, கதையில் கணேஷ், வஸந்த் வருகிறார்கள். படத்தில் யார் கணேஷ்... யார் வஸந்த்? ஏனென்றால் சுஜாதாவின் எபிக் கதாபத்திரங்களான இவர்கள், அவரது வாசகர்களுக்கு ஸ்பெஷலானவர்கள். ப்ரியாவில் வஸந்தாக திடீர் கன்னையாவையெல்லாம் நடிக்கவைத்து காமெடி பண்ணியிருக்கிறார்கள். இதில் யாராக இருக்கும் அந்த கதாபாத்திரங்கள் என்று எதிர்பார்ப்பும் உண்டு. 

இருந்தாலும்... இதை சொல்லியே ஆகணும் பாஸ். இத்தனை பெயர்களை எழுதிருக்கீங்க. சுஜாதா பெயரையும் இதுவரை வெளியிட்ட எதுலயாவது போட்டிருக்கலாமே? இதை இயக்குநரிடமே கேட்கலாம் என்று அழைத்தேன்.

‘ப்ரோ.. நானும் பெரிய சுஜாதா வாசகன்தான். உங்களை மாதிரியே நானும் அவரை மிஸ் பண்றேன்.  ‘ஆ’ படிச்சதுமே பிடிச்சு, அதுல இருந்து சில பகுதிகளை எடுத்துதான் இந்தப் படத்தை எழுதினேன். முன்னாடியே சுஜாதா ரங்கராஜன் மேடத்தை பார்த்து அனுமதியும் வாங்கிட்டோம். இசை வெளியீட்டு விழாவுலயும் ‘சுஜாதா சார் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது’ன்னு குறிப்பிட்டோம். ஆனா, வெறும் 9 நிமிஷம்தான் வந்திருக்கு ப்ரோ. அப்பறமா விஜய் ஆண்டனி சாருக்கு தகுந்த மாதிரி, நிறைய மாற்றங்களோட செம்ம கமர்ஷியலா வந்திருக்கு படம்.  முழுசா பார்ப்போமே..  நம்ம எல்லாருக்குமே பிடிக்கும். பாருங்க”

“சரி.. சுஜாதா சார் பேர் போடுவீங்கதானே..?’

“நிச்சயமா... அவர் நாமல்லாம் பேர் போட்டு சொல்ற உயரங்களையெல்லாம் தாண்டி எங்கயோ நிக்கறார் ப்ரோ!’

கடைசியாக அவரிடம் கேட்டேன்: “சரி.. கணேஷ், வஸந்த் நாவல்ல இருக்காங்களே.. படத்துலயும் இருக்காங்களா? யார் நடிக்கறாங்க.. என்கிட்ட மட்டுமாவது சொல்லுங்க”

அதற்கு இயக்குநர் சொன்ன பதிலைக் கேட்டதும் என் ரியாக்‌ஷன் இப்படி இருந்தது;

‘ஆ!’

-பரிசல் கிருஷ்ணாVikatan