'பிளாக் மணி உலகில் கமல் மட்டும்தான் வொயிட்!' - சிலாகிக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் | Only person who receives salary in white is Kamal, says Aascar V. Ravichandran

வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (22/11/2016)

கடைசி தொடர்பு:11:45 (24/11/2016)

'பிளாக் மணி உலகில் கமல் மட்டும்தான் வொயிட்!' - சிலாகிக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன்

 

நரேந்திர மோடி அறிவிப்பு நாட்டு மக்களை மட்டுமல்ல தமிழ் சினிமாவையே கடும் உலுக்கு உலுக்கி இருக்கிறது.  ஆயிரம், ஐநூறு ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பால் வெளியூரில் நடந்த படப்பிடிப்புகள், சென்னையில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகள் அனைத்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது  மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின்  படப்பிடிப்பும், சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் 'ஓடி ஓடி உழைக்கணும்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் மட்டுமே நடந்து வருகிறது. விஜய் நடிக்கும் 'பைரவா' படமும், சூர்யாவின் 'சிங்கம் -3' படங்களின்  போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. 

இந்திய, தமிழ் சினிமாவில் நடித்துவரும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலும் தனது சம்பளத்தில் பாதிப் பணத்தை வெள்ளையாகவும், மீதி பணத்தை கறுப்புப் பணமாகவும் வாங்கி வருவது தொன்று தொட்டு நடந்துவரும் சங்கதி. அரசாங்கத்துக்கு கணக்கு காட்டும் பணத்துக்கு மட்டுமே வரி கட்டி வருகின்றனர்.  அந்த வரி பணத்தையும் சரியாக கட்டாத நட்சத்திரங்கள் பட்டியலில் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் இருக்கிறது.  

அதுசரி தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகளில் சரியாக அரசாங்கத்துக்கு வருமான வரியை கட்டிவரும் நடிகர்கள் யார் யார்?' என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டோம். '' எனக்கு தெரிந்து  ஆயிரம் ரூபாய் பணமாக இருந்தாலும் நாம் கொடுத்தால்  கை நீட்டி வாங்க மாட்டார், கமல்சார். எல்லா பணமும் முறையாக வங்கி கணக்குப்படி காசோலை வழியாக  மட்டுமே தனது சம்பளத் தொகையை பெறுவது கமல்சாரின் வழக்கம். 

இப்போது கூட 'விஸ்வரூபம் -2' படத்துக்காக பலகோடி ரூபாய் பணத்தை வெள்ளைப் பணமாக காசோலை வாயிலாகத்தான் கொடுத்தேன் அவரும் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமல்ல அவர் செலவு செய்யும்  காபி, டீ செலவுக்குகூட முறையாக வரவு- செலவுகள் கணக்குகளை  ராஜ்கமல் பிலிம்ஸ் ஆபீஸில் பைல் பைல்களாக கமல்சாரின் அண்ணன் சந்திரஹாசன் கவனமாக வைத்து இருப்பதை நான் கண்கூடாக பார்த்து வியந்து இருக்கிறேன் " என்று பெருமை பொங்க சொன்னார்.

- சத்யாபதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close