வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (22/11/2016)

கடைசி தொடர்பு:16:11 (22/11/2016)

60 லட்சத்துக்கும் மேல் ஊழல் செய்திருக்கிறார்கள்!- பி.சி. ஸ்ரீராம்

ஸ்ரீராம்

தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தேர்தல், 10 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புதிய தலைவராக பொறுப்பேற்றார். பதவிஏற்ற புதிய உறுப்பினர்கள், இதற்கு முன் பொறுப்பில் இருந்த பெப்சி சிவாவின்  மீது இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், “ 2008 முதல் 2014 வரைக்குமான சங்கத்தின் கணக்குகள் சரியாக ஒப்படைக்கப்படவில்லை. அடுத்ததாக, 2015ல் மலேசியாவில் நடந்த SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு செலவு செய்துவிட்டு, அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது, அது சம்பந்தமாக பலமுறை, கணக்குகளை கேட்டும், பெப்சி சிவா தரவில்லை. இதனால் விருது நிகழ்ச்சியை ஒளிபரப்பு உரிமம் பெற்ற சன் TV-வின் TDS பணமான 37.5 லட்சத்தை திரும்ப பெற முடியாத நிலையில் இருக்கிறது. மற்றும் சாலிகிராமத்தில் நில மதிப்புக்கு மீறி 1.25 கோடி ரூபாயை முன் பணமாக செலுத்தி, மேலும் 80 லட்சம் ரூபாய் அந்த நிலத்திற்கு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து, SICA சங்கத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும், பாரம்பரியமிக்க இச்சங்கத்திற்கு அவப்பெயரை சிவா (முன்னால் பொது செயலாளர்) ஏற்படுத்தி விட்டார். 8 வருடமாக முறையாக வருமான வரி செலுத்தாதனால்,இந்த ஆண்டு 80(G)யின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியவில்லை, அதனால், சங்கத்திற்கு வரவேண்டிய நன்கொடைகள் பெற முடியாத நிலை இருக்கிறது, அதனால் மூத்த உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித் தொகை மற்றும் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாமல் இருக்கிறது” என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 

பி.சி.ஸ்ரீராம்

கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க பி.சி.ஸ்ரீராம், வேல்ராஜ், அருள்தாஸ், சுகுமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர். புகார் அளித்துவிட்டு திரும்பி பி.சி.ஸ்ரீராமிடம் கேட்டபோது, “ கணத்த இதயத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிவர தாக்கல் செய்யாததால் இந்த முறை ஆடிட்டிங் செல்லும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இது குறித்து பலமுறை அவரிடம் விளக்கம் கேட்டோம். எந்த பதிலும் தராததால் இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்று SICA உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்தப்பின்னரே, இன்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். 

அவர்மீது மோசடி வழக்கு பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென புகார் அளித்துள்ளோம். சுமார் 60 லட்சத்திற்கும் மேல் சங்கத்தில் மோசடி நடந்துள்ளது. இந்த புகாரினால் திரையுலக படப்பிடிப்புகள் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது சங்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை மட்டுமே. சங்கத்தை தூய்மைப்படுத்தவே புதிய உறுப்பினர்கள் கொண்ட அணி கடந்த 10 மாதத்திற்கு முன்பு பதவியேற்றது.  அதன்மீதான நடவடிக்கை தான், தற்பொழுது கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார்” இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் கூறினார். 

படங்கள் : ஆ.முத்துக்குமார்

-பிரம்மா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்