Published:Updated:

கண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனை - பாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு

Vikatan
கண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனை - பாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு
கண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனை - பாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு
கண்ணன் அழைத்துக்கொண்டான் சின்னக் கண்ணனை - பாலமுரளி கிருஷ்ணா சிறப்புப் பதிவு

                       
’ராஜா சார் வந்து என்னை இந்தப் பாட்டைப் பாடச்சொல்லும்போது பயமா இருந்தது. ரொம்ப பெரியவங்கள்லாம் பாடிட்டு இருக்காங்க., சரி.. ‘சின்னக் கண்ணன் தானே.. பாடலாம்’னு பாடறேன்’ - பாலமுரளி கிருஷ்ணா இவ்வாறு சொன்னது 2011ல் என்றென்றும் ராஜா நிகழ்ச்சியின்போது. அப்போது பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் வயது 81. அவர் பாடிய பாடல் கவிக்குயில் படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல். அந்தப் பாடலை அவர் ஒலிப்பதிவில் பாடிய ஆண்டு, 1977. அவரது 47வது வயதில் பாடி மிகப் பிரசித்தி பெற்ற அந்தப் பாடலை, 34 ஆண்டுகள் கழித்து கொஞ்சமும் பிசகாமல் பாடி கைதட்டல்களை அள்ளியிருப்பார் அவர்.


6 ஜூலை 1930-ல் பிறந்தவர், தனது ஆறு வயதில் இருந்து கர்நாடக சங்கீதப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பவர். இவரது பாடல்கள் குறித்தோ, அதன் சங்கீதத்துவம் குறித்தோ எழுதும் தகுதி நிச்சயம் எனக்கில்லை. ஆனால் அவரை நான் பார்த்து  வியந்த விஷயங்கள் நிறைய உண்டு. 

பாடகராக மட்டும் அல்ல. இசைக்கலைஞராகவும் இவர் பல வாத்தியக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்.  செம்பை வைத்தியநாதன் அவர்கள் பாடல்கள் பாடும்போது, இவர் கஞ்சிரா வாசித்திருக்கிறார். வீணை, வயலின், புல்லாங்குழல் மற்றும் வேறு சில கருவிகளும் வாசிக்கத் தெரிந்தவர்.  இவரது தந்தை புல்லாங்குழல் இசைக்கலைஞர். தாயார் வீணை இசைக்கலைஞர். வீணையும் புல்லாங்குழல் இணைந்து பெற்ற சங்கீத வித்வான் இவர். 

கர்நாடக இசைக்கலைஞர்களில் சிலருக்கு  திரைத்துறை என்றால் கொஞ்சம் மாற்றாந்தாய் மனப்பான்மை உண்டு. ஆனால் இவர் திரைத்துறையிலும் கொடிகட்டிப் பறந்தார். இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தேசிய விருது பெற்றவர். 

இவரை அனைவரும் மதித்துப் போற்ற இன்னொரு காரணமும் உண்டு. புஷ்பவனம் குப்புசாமி ஒரு பேட்டியில் சொன்னதுதான் அது:


"இசை  சம்பந்தமாக ஒரு சந்தேகம்னு எப்ப கூப்டாலும் உடனே பதில் சொல்லுவாருங்க. நீங்க யாரு.. எங்கிருந்து பேசறீங்கன்னு ஒரு கேள்வி இருக்காது. இன்னொரு ஆச்சர்யம் என்னன்னா, இதுவரைக்கும் ஒருதடவைகூட ‘இருங்க பார்த்துச் சொல்றேன்’ என்றும் சொன்னதில்லை. கேட்ட உடனே பதில் வரும். இளையராஜாவுக்கு ராகத்துல ஒரு சந்தேகம், இது என்ன ராகம்னு தெரியணும்னா, அவரைக் கூப்பிடுவார். உடனே பதில் டக்னு வந்து விழும். அதுதான் பாலமுரளி கிருஷ்ணா"

பக்தபிரதலாதன் படத்தில் நாரதராக நடித்திருக்கிறார். செவாலியே, பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ உட்பட பல விருதுகள் அவர் பெற்றிருக்கிறார்.  பாரதரத்னா மட்டும் இன்னும் அவர் பெறவில்லை என்பது சக கலைஞர்களின் வருத்தம். ஆனால் அதையெல்லாம் மீறி அவர் தனது பழகும் தன்மையால் பலரையும் கவர்ந்தவர்.

2011ல் ராஜாவின் நிகழ்ச்சியில் சின்னக் கண்ணன் பாடலை கவனித்தீர்களானால் ஒன்று தெரியும்.  ‘புதுமை, இனிமை, இளைமைக்கு ராஜா’ என்றிருப்பார்.  ’புதுமை மலரும் இனிமை..’ என்று பாடலின் வார்த்தைகளிலேயே பாராட்டியிருக்கிறார் என்பது பாடலைக் கேட்கும்போதுதான் புரிந்தது. அதே பாடலைப் பாடும்போது ‘ரகசிய’ என்ற வார்த்தையை ரகசியமாகப் பாடுவது போல நடித்திருப்பார். எழுபதுகளில் பாடிய பாடலை, 2011ன் ரசிகனுக்கேற்றவாறு இப்படியெல்லாம் பாடுவதெல்லாம் அனுபவம் கொடுத்த வரமன்றி வேறென்ன?

தங்கரதம் வந்தது வீதியிலே (கலைக்கோயில்) பாடலும் பலருக்குப் பிடித்தது என்றாலும் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ‘ஒருநாள் போதுமா’ இவரைத் தவிர யாரும் முயன்றுகூட பார்க்கமுடியாத பாடல் என்றே சொல்லலாம். நிறைய ராகங்கள் இடம்பெறும் அந்தப் பாடலில் ஒரு முரண் இருக்கும். இயல்பில் கொஞ்சமும் கர்வம் இல்லாதவர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள். ஆனால் ஒருநாள் போதுமா பாடல், ‘பாட்டுக்கே நான்தான்.. என்னை விட்டா யாருமில்ல’ என்று அந்தத் திரைக் கதாபாத்திரம் பாடவேண்டிய பாடல். இவரது இயல்புக்கு எதிரான தொனியில் பாடி அசத்தியிருப்பார் பாலமுரளி கிருஷ்ணா. 

கே.பாலசந்தர் அபூர்வராகங்கள் என்ற படம் எடுத்தபோது, பாடலில் இதுவரை இல்லாத ஒரு ராகம் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அவர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்ல, எம்.எஸ்.வி. தொடர்பு கொண்டது பாலமுரளி கிருஷ்ணாவை. சாதாரணமாக ஒரு ராகத்திற்கு ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும். இவர் நான்கு ஸ்வரங்களை மட்டுமே கொண்ட ‘மகதி’ ராகத்தை உருவாக்கினார். அது பாடலாகவும் பிரபலமானது.  ‘அதிசய ராகம்.. ஆனந்த ராகம்’ என்ற பாடல்தான் அது.

‘பசங்க’ படத்தில்கூட ஒரு பாடலைப் பாடியிருப்பார். ஜேம்ஸ் வசந்தன் இசையில், பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய ‘அன்பாலே அழகாகும் வீடு’ என்ற பாடல் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய பாடல். கேட்டுப் பாருங்கள். ஒரு மனிதன் தன் 80 வயதில் பாடிய பாடலா இது என்று உங்களுக்கு நிச்சயம் ஆச்சர்யம் வரும்.


   

உச்சஸ்தாயியில் பாடவேண்டிய இடமாகட்டும்,  ஆலாப் ஆகட்டும் அவரது குரலில் அதைப் பாடிய சிரமம் தெரியவே தெரியாது. இதை அவரது மிகப்பெரிய பலம் என்பார்கள் அவரது சீடர்கள். கழுத்து நரம்பு புடைக்க உச்சஸ்தாயி எல்லாம் பாடமாட்டாராம். முகத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் எளிமையாக பாடுவார்.

இதுவரை யார் ஒருவரையும் அவர் விமர்சித்ததில்லை. அனைவரையும் பாராட்டி, வாழ்த்தியே பழக்கப்பட்டவர். சமீபத்தில் ஒரு 10 வயது சிறுமியை வாழ்த்த சக்கர நாற்காலியில் வந்தார். இந்த வயதில் வரமுடியாது என்கிற எந்த மறுப்பும் அவருக்கு இல்லை. எளிமை என்பதற்கு உண்மையான உதாரணமாக இருந்தார்.

பலமொழிகளில் பாடியவர். ராகங்களைக் கண்டுபிடித்தவர். அத்தனை விருதுகளை அள்ளியவர். புகழின் உச்சிகளை, தன் திறமையால் அடைந்தவர் என்பதெல்லாம் மீறி, எளிமையாக இருப்பதே தனக்குப் பெருமை என்பதை உணர்ந்தவர். அதனால்தான் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மறைவு ரசிகர்கள், சக கலைஞர்கள் என்று அனைவரையும் உலுக்கியிருக்கிறது.

அந்தக் கண்ணன் அழைத்துக் கொண்டான் இந்தச் சின்னக் கண்ணனை என்று தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நிச்சயம் உங்கள் இன்மையை உணர்கிறோம் ஐயா!

-பரிசல் கிருஷ்ணா 


 


 

Vikatan