Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நியூ ஜென் காமெடி’ நம் கவலையை தீர்த்ததா? கவலை வேண்டாம் விமர்சனம்

"வாழ்க்கை வாழுறதுக்கு இல்லை, கொண்டாடுவதற்கு... தினம் தினம் கொண்டாடு"  மயில்சாமி சொல்லும் இந்த பஞ்ச் தான் இந்தப் படத்தின் டேக் லைன். “யாமிருக்க பயமே” படத்திற்கு பிறகு, டிகே இயக்கி, ஜீவா காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் “கவலை வேண்டாம்”.  படம் பார்த்தவர்களின் கவலை தீர்ந்ததா? 

ஜீவாவும் காஜலும் பள்ளிக்கால நண்பர்கள். வயது ஏற ஏற, நட்பு காதலாகி அதுவே கல்யாணத்தில் முடிகிறது. ஜீவாவின் சேட்டைகளால் இரண்டே நாட்களில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு காஜலுக்கு, பாபிசிம்ஹாவை திருமணம் செய்ய வேண்டிய சூழல். விவாகரத்து பெறுவதற்காக ஜீவாவைத் தேடி வருகிறார் காஜல் அகர்வால்.  விவாகரத்து தருவதற்கு ஜீவா சில கண்டிஷன்களை போடுகிறார். அது என்ன கன்டிஷன், இறுதியில் ஜீவாவுக்கும், காஜலுக்கு விவாகரத்து ஆனதா என்பதே கதை.

கவலை வேண்டாம்

பார்ட்டி, சரக்கு, ஆர்.ஜே.பாலாஜி, பாலசரவணனுடன் எதற்கு கவலைப்படாமல் வாழ்கிறார் ஜீவா. ஜீவாவின் ஒவ்வொரு டயலாக்கும், ஆர்.ஜே. பாலாஜியின் கவுண்ட்டர்களுடனே முடிகிறது. படம் முழுக்க காமெடி சரவெடியால் தடதடக்கிறது. சோக காட்சிகளோ, சண்டையிடும் வில்லன்களோ தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் என்பது தான் படத்தின் ஸ்பெஷல். கழுத்து பட்டன் வரை போட்டுக்கொண்டு ஆர்ஜே பாலாஜி அடிக்கும் லூட்டிகள் அத்தனையும் ‘ஏ’ரகம் என்றாலும் சிரிப்பு கியாரண்டி

காஜல் அகர்வாலுக்கு நடிப்பும், காமெடியும் கலந்த ரோல் தான். ஆனால், முகத்தில் அழகைத் தாண்டி வயது தெரிவது ஏன் என்றுதான் புரியவில்லை. கவலை வேண்டாம் ரிலீஸ் ஆனதும் நேராக தொலைக்காட்சி சீரியலுக்கு போய் விடலாம் என்னும் அளவுக்கு அழுது தீர்க்கிறார். எமோஷன்ஸ் தேவைதான். ஆனால் அதற்கான காரணங்கள் சரிவர இல்லாததால் காஜலின் முயற்சி வீண். சின்ன ரோல் என்றாலும் அழகாய் வந்து போகிறார் சுனைனா. அர்த்தம் புரியாமல் வசனம் பேசும் அந்த ஃப்ரெண்டு ஸ்ருதி ராமகிருஷ்னா பேசும் எதுவுமே லிப் சிங்க் ஆகவில்லை.

இந்தப் படத்திலும் பாபிசிம்ஹாவிற்கு வேலையில்லாத வேலைதான். எந்த அலட்டலும் இல்லாமல், ஸ்பாட்டில் வசனங்களை கேட்டு சொல்லிவிட்டு போய் விட கூடிய கேரக்டர். அதைதான் அவரும் செய்திருக்கிறார். தனது வருங்கால மனைவி விவாகரத்து கேட்டு தங்கும் வீட்டில் இவர் ஏன் தங்க வேண்டும் என்ற ஒரே ஒரு கேள்வியையாவது இவர் இயக்குநரிடம் கேட்டிருக்கலாம்.

“மாயா மாயா போலாமா ஹாயா.. மூக்குக்கு கீழ என்ன வாயா... அதுல ஒன்னு குடுக்க அலையிறேன் நாயா... நாயா... நாயா”னு மயில்சாமியின் காதல் கடிதம், இதனால் போலீஸில் சிக்கி பாபிசிம்ஹா படும்பாடு, புதர்ல அந்த பொண்ண என்ன பண்ணீங்க என போலீஸ் கேட்டதும் செய்து காட்டும் ஆர்.ஜே.பாலாஜியின் ஆக்‌ஷன், நேபாளி காதலியினால் பாலசரவணனுக்கு ஏற்படும் விபரீதம் என எல்லாமே ரகளை. ஆனால், கொஞ்சம் நெளிந்துக் கொண்டே தான் பார்க்க வேண்டும். 

காமெடிக்காகவே ஸ்கிரிப்டில் ஸ்பெஷலாக மெனக்கிட்டிருக்கிறார் இயக்குநர் டிகே. மயில்சாமி முதல் வீட்டில் இருக்கும் கடைசி ஆள் வரை எதாவது ஜோக் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்திலே சுற்றுகிறார்கள். ஆனால், நியூ ஜென் காமெடி என்று இரட்டை அர்த்த வசனங்களையே கொட்டி நிரப்பியிருப்பதுதான் இடிக்கிறது. ட்ரெண்ட் என்றாலே செக்ஸ், மது, இரட்டை அர்த்தங்கள் மட்டும்தானா இயக்குநரே? அதிலும் பெரும்பாலான வசனங்கள், காட்சிகள் 70களிலே தமிழ் சினிமா பார்த்தவைதானே?  சிறு வயது ஜீவா செய்யும் விஷயங்கள் எல்லாம் தேவைதானா? இப்படிப்பட்ட ஒருவன் காதலுக்காக ரசிகன் பதறுவான் என எப்படி எதிர்பார்த்தீர்கள்?

கழிப்பறை காட்சிகளும், கிளி, எலிக்குஞ்சு வசனங்கள் மட்டுமே  இளைஞர்களை எப்போதும் ஈர்த்ததில்லை. எல்லா விளம்பரங்களிலும் ”நியூ ஜென் காமெடி” என அழுத்தி சொல்வதால், நாமும் இதை அழுத்தி சொல்ல வேண்டியிருக்கிறது.

ஃபுல் காமெடி கலாட்டாவாக போய்க்கொண்டிருந்தாலும் க்ளைமேஸில்  “மனசுக்கு பிடிச்சவங்க நம்ம விட்டு போறது வேதனையான விஷயம் தான். ஆனா அவங்களை போகாம பிடிச்சி வைக்கிறது அதைவிட வேதனையான விஷயம்” என்று ஒரே டயலாக்கில் மயில்சாமியும், ஜீவாவும் ஃபீல் பண்ணவும் வைக்கிறார்கள்.

காதல் இருந்தால்..பாட்டில் மட்டும் எட்டி பார்க்கிறார் லியோன் ஜேம்ஸ். பின்னணி இசைதான் காட்சியின் மூடுக்கு ஒட்டாமல் ஏதோ போகிறது. அந்த நீண்ட நெடிய டைட்டில் ஐடியா ரசனை. ஆனால், அதன் இசைதான் ஸ்டார் ஹோட்டலில்  கேட்கும் இசைத்துணுக்கு போல போகிறது.  ஊட்டி, குன்னூர் பகுதிகளை ரசிக்க வைக்கிறது அபிநந்தனின் ஒளிப்பதிவு.

காமெடி, ஜீவா, காஜல் போடும் சண்டை, சுனைனாவின் பர்த்டே ப்ளான் என்று படமே  என்டர்டெயின்மன்ட் தான். நம்ம கவலையை இந்தப் படம் தீர்க்காவிட்டாலும், ஏண்டா வந்தோம் என கவலைப்பட வைக்காது என்பதுதான் ஆறுதல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்