வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (28/11/2016)

கடைசி தொடர்பு:18:55 (13/03/2017)

நடிகர் சங்கப் பொதுக்குழு... திட்டமிட்டது முதல் களேபரம் வரை... நடந்தது என்ன? #1MinuteRead

நவம்பர்-27ம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நடைபெறும் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து நேற்று பொதுக்குழு நடந்து முடிந்தது வரை பல களேபரங்கள் நிகழ்ந்தேறியிருக்கிறது. அவைகளின் தொகுப்பு இதோ... 

பொதுக்குழு கூட்ட ஆல்பத்தை காண க்ளிக் செய்க...

*கல்லூரியில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என பொதுக்குழுவிற்கு எதிராக பொதுநலவழக்கு வழக்கு போடப்பபட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியதால் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு லயோலா கல்லூரியில் நடிக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. 

*பொதுக்குழு நடத்தக்கூடாது என நடிகர் சங்கத்திற்கு தொடர்ந்து மிரட்டல்கள் வரவே, ‘எங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’ என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை நவம்பர்-22ஆம் தேதி நடிகர் சங்கத்தினர் கொடுத்தனர்

*வழக்கு, மிரட்டல் என எதற்கும் நடிகர் சங்கம் பின் வாங்காமல் இருந்ததால், பொதுக்குழு நடப்பதற்கு ஒரு நாள் முன்பு சில மர்ம நபர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். அதனால், பொதுக்குழுவிற்கு கொடுத்த அனுமதியை நிராகரித்தது கல்லூரி நிர்வாகம். 

*நாளை மதியம் 2 மணிக்கு பொதுக்குழு, ஆனால், இன்று மாலை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தவர்களுக்கு, கமல் கூறிய அறிவுரை நினைவுக்கு வந்திருக்கிறது. பொதுக்குழுவை லயோலா கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம் என்று கமலுக்கு நடிகர் சங்கத்தினர் தெரியப்படுத்தியபோது, ‘எதை நடத்தினாலும் நம்ம இடத்துலயே நடந்துங்கப்பா’ என்று கூறியிருக்கிறார். அதனால் அவசர அவசரமாக நடிகர் சங்க மைதானத்தை பொதுக்குழுவிற்காக தயார் செய்துள்ளனர். அந்த மைதானத்தில் சுமார் 6 அடிக்கு வளர்ந்து நின்ற புற்களை எல்லாம் அகற்றி மேடையை போட்டுள்ளனர்

*பல பிரச்னைகளை சந்தித்தாலும் சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் பொதுக்குழுவை தொடங்கினர். ஆனால் தொடக்கம் முதலே பல பிரச்னைகளும் ஆரம்பித்தன. நடிகர் சங்கத்தில் இருந்து  இடைக்கால நீக்கம் செய்யப்பட்ட சங்கையா, பாலாஜி உட்பட சுமார் 15 பேர், பொதுக்குழு நடக்கும் அரங்கிற்குள் நுழைய முற்பட்டனர்

*நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்த, நீக்கம் செய்யப்பட்டவர்களில் இருந்த சில பெண்கள் முண்டியடித்துக் கொண்டு கூட்டத்தில் நுழைய, பெண்களை எப்படி பிடித்து நிறுத்தமுடியும் என்று தயங்கியுள்ளனர். பெண்கள் எல்லாரும் தரையில் படுத்து, உருண்டெல்லாம் பிரச்னை பண்ணியுள்ளவர். பாதுகாப்பு கொடுக்க வந்த போலீஸ்களிலும் பெண் போலீஸார் இல்லாததால் சற்று நேரம் நீடித்தது இந்த தள்ளுமுள்ளு போராட்டம். பிறகு ஒரு வழியாக அவர்கள் அரங்கத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர். 

*வெளியே சென்றாலும் அவர்கள் பிரச்னையை நிறுத்தவில்லை. கருணாஸின் கார் கண்ணாடியை உடைத்ததோடு, ‘விஷால், நீ ஒரு ஆம்பளையா...’ என்று ஆரம்பித்து பல பீப் வார்த்தைகளால் விஷாலை மட்டும் கட்டம் கட்டி திட்டியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் வடபழனியில் இருக்கும் விஷாலின் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் உள்ளே நின்று கொண்டிருந்த காரையும் தாக்கியுள்ளனர். இவர்கள் செய்த பிரச்னை, பேசிய வார்த்தைகள் எல்லாம் கேமிராவில் பதிவானதால், அதை ஆதாரமாக வைத்து அன்று மாலையே அவர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

*பொதுக்குழு நடக்கும் போது வீடியோ கால் மூலம் பேசிய கமல், ‘நான் ஆசைப்பட்டது போல் நம்ம இடத்துலயே கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சி’ என்றும் அதற்காக உழைத்த அனைவரும் நன்றி என்று கூறிவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார். 

* நடிகராக இல்லாமல் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சிலரை நீக்கம் செய்ய பொதுக்குழுவில் பேசி முடிவு எடுத்துள்ளனர். அதோடு நடிகர்களின் ஊதியத்தை உயர்த்தவும் முயற்சிகள் எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர். 

பொதுக்குழு கூட்ட ஆல்பத்தை காண க்ளிக் செய்க...

*விழாவில் விஷால் பேசும் போது, “நான் ஸ்கூல் படிக்கும் போதும், காலேஜ் படிக்கும் போதும் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள், ‘நாலு பேருக்கு நல்லது பண்ணு’னு தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஆனால், நான் நல்லது பண்ணணும்னு நினைக்கும் போது ஏன் பல பிரச்னைகள் வருதுன்னு தெரியலை. என்னை பொறுத்தவரை, மேல சாமி... கீழ பூமி... நடுவுல நீங்க மட்டும் தான். என் உடம்புல சத்து இருக்குற வரை, எனக்கு எவ்வளவு பிரச்னை வந்தாலும் மிரட்டல்கள் வந்தாலும் உங்களுக்காக கடைசி வரை போராடுவேன்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார். 

*பல மூத்த நடிகர்கள், பல நாடக நடிகர்கள் என இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் யாரும் கூட்டம் முடியும் வரை கிளம்பவில்லை. கூட்டம் மாலை 5.45 மணிக்கு முடிவடைந்தது என்பது குறிப்பிடதக்கது! 

மா.பாண்டியராஜன்


டிரெண்டிங் @ விகடன்