பங்களாதேஷ், ஜப்பான், ரஷ்யால ரீமேக்கான தமிழ் படங்கள் என்னென்ன தெரியுமா?

என்னதான் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரீமேக் படங்கள் வந்திருந்தாலும், தமிழ் சினிமாவில் இருந்தும் மற்ற மொழிகளுக்கு சில படங்கள் ரீமேக் ஆகியிருக்குனு தெரிஞ்சுக்கும்போது மகிழ்ச்சியா தானே இருக்கும். அப்படி, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் சினிமாவின் பட்டியல் இது...

ரீமேக் ஆன படத்தின் போஸ்டர்களைப் பார்க்க அம்புக்குறியை க்ளிக் செய்யவும்...

பொல்லாதவன் :

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி கொடுத்த முதல் சினிமா. பல்சரின் உதவியோடு படம் தீபாவளி ரேஸில் விஜய், சூர்யா படங்களையும் முந்தி முன்னால் வந்து நின்றது. நல்ல விமர்சனங்களையும், வசூலையும் குவித்த இந்தப் படம் சிங்களம் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

 

 

 

சார்லி சாப்ளின் :

சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் பிரபு , பிரபுதேவா மற்றும் லிவிங்ஸ்டன் இணைந்து கலக்கிய செம காமெடி சினிமா. கமர்ஷியலாக தாறுமாறு ஹிட் அடித்த இந்தப் படம் ஆறு மொழிகளில் ரீமேக் செய்யபட்டுள்ளது. அம்மோவ்...

 

 

தூள் : 

விக்ரம் - தரணி டீம் கொடுத்த பக்கா மாஸ் படம். ஆக்‌ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், ரொமான்ஸ் என எல்லாம் சரிவிகதத்தில் அமைய, படம் செமத்தியான ஹிட் ஆனது. இந்தப் படம் நான்கு மொழிகளில் ரீமேக் செய்யபட்டுள்ளது. இந்தியில் ரீமேக் ஆகவிருந்து, சில காரணங்களால் ஆகவில்லை.

 

 

 

காதல் கொண்டேன் : 

செல்வராகவன் இயக்கிய முதல் படம். தனுஷை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தை வேறு ஒரு லெவலுக்கு எடுத்துச் சென்றது யுவன் சங்கர் ராஜாவின் இசை. இந்தப் படம் பங்களாதேஷ் நாட்டிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த பங்களாதேஷ் வெர்ஷனைப் பார்த்து 'இது 'காதல் கொண்டேன்' ' எனச் சொன்னால் செல்வராகவனே நம்ப மாட்டார்.

 

 

நாடோடிகள் :

சசிகுமார் - சமுத்திரகனி நண்பர்கள் கொடுத்த பட்டாசு சினிமா. ஏழு கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் வெளியாகி கிட்டதட்ட 35 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. நட்பையும், காதலையும் பற்றிப் பேசிய இந்த சினிமா இந்தி உட்பட ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யபட்டுள்ளது. இந்தி வெர்ஷனை ரீமேக்கியது இயக்குநர் ப்ரியதர்ஷன்.

 

 

பாசமலர் :

இந்தப் படத்திற்கு அறிமுகமே தேவையில்லை. 1961-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிங்களம் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் மட்டும் இரண்டு முறை ரீமேக் ஆகியுள்ளது. எல்லாப் பயலுகளுக்கும் இளகிய மனசுதான் போல...

 

 

ரமணா :

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர் சினிமா. விஜயகாந்த் 'தமிழ்நாட்டுல மொத்தம் ...' என ஆரம்பித்து புள்ளிவிபரம் சொல்லும் வசனமெல்லாம் தெறி லெவல். நல்ல விமர்சனங்களையும், வசூலையும் வாரிக் குவித்த இந்தப் படம், இந்தி உட்பட நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

 

 

சாமி : 

விக்ரம் - ஹரி கூட்டணியின் சூப்பர் டூப்பர் போலீஸ் ஸ்டோரி. வெளியாகி நான்கே நாட்களில் பட்ஜெட்டை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்தப் படம் நான்கு மொழிகள் ரீமேக்கானது. இதன் இந்தி ரீமேக்கில் சஞ்சய் தத் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார்.

 

 

சட்டம் ஒரு இருட்டறை :

எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன இந்தப் படம், நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்தி வெர்ஷனில் ரஜினியும், மலையாள வெர்ஷனில் கமலும், தெலுங்கு வெர்ஷனில் சிரஞ்சீவியும் நடித்திருப்பது கூடுதல் ஆச்சரியம். இந்தப் படம் தமிழிலும் 2012-ம் ஆண்டு மறுபடியும் ரீமேக் செய்யப்பட்டு பப்படம் ஆனது.

 

 

சிகப்பு ரோஜாக்கள் :

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய சைக்கலாஜிகல் த்ரில்லர் சினிமா. கமல் - ஶ்ரீதேவி இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் 'எர்ரா குலாபிலு' எனத் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்தியில் 'ரெட் ரோஸ்' என்ற பெயரில் ரீமேக் ஆன இந்தப் படம், கண்டங்கள் தாண்டி ரஷ்யாவிலும், ஜப்பானிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக விக்கி கூறுகிறது. ஆனால், படத்தின் காட்சிகளோ, போஸ்டர்களோ கிடைக்கவில்லை.

 

- ப.சூரியராஜ்

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!