Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைசூரு அம்முவை தமிழ் சினிமாவின் தங்கத்தாரகை ஆக்கிய படங்கள் இவைதான்!

சினிமா

மற்ற படங்களின் போஸ்டர்களை காண க்ளிக் செய்யவும்

ஜெயலலிதா - தமிழ் சினிமாவின் கோல்டன் லேடி. சில்வர் ஜுப்ளி, கோல்டன் ஜுப்ளி எல்லாம் இவர் கேரியரில் சர்வ சாதாரணம். 1965 முதல் 1980 வரை ஹீரோக்களுக்கு இணையாகப் போட்டி போட்டு நடித்த சிங்கிள் சிங்கம். மிடுக்கு, துடுக்கு, அழகு, அறிவு என சகலமும் சரிவிகிதத்தில் கலந்த திறமை நடிகை. இந்தக் கலவையை சில படங்களில் கச்சிதமாக வெளிக்காட்டியிருப்பார் ஜெயலலிதா. மைசூரு கோமளவள்ளியைத் தமிழ்நாட்டின் தங்கத் தாரகையாக மாற்றிய அந்தப் படங்களின் லிஸ்ட்தான் இது.

வெண்ணிற ஆடை:

ஹீரோயினாக முதலில் அறிமுகமானது 'சின்னட கோம்பே' என்ற கன்னடப் படத்தில் என்றாலும் முதல் தமிழ்ப் படமான 'வெண்ணிற ஆடை' வழியாகவே இன்று வரை நினைவு கூறப்படுகிறார். இதில் விபத்தில் காயமடைந்து சித்த சுவாதீனம் இழந்து சிகிச்சை பெறும் அப்பாவிப் பெண்ணாக நடித்திருப்பார் ஜெ. 17 வயதில் நடித்த படம் என்பதால் முகத்தில் அவ்வளவு குழந்தைத்தனம் தெரியும். 'என்ன என்ன வார்த்தைகளோ' என்ற எவர்க்ரீன் பாடல் இந்தப் படத்தில்தான். க்ளைமாக்ஸில் 'எல்லாம் விதி' என அவர் சொல்லும்போது கலங்கித் துடித்தார்கள் ரசிகர்கள். படம் சூப்பர் ஹிட்டானது. தமிழின் பெருமைக்குரிய அறிமுகமானார் ஜெ.

ஆயிரத்தில் ஒருவன்:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் ஜோடியான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முதன்முதலில் ஜோடி சேர்ந்த படம். அழகுக்கேற்றார் போல இதில் ஜெ.வுக்கு இளவரசி வேடம். பெரிய ஹீரோவோடு நடிக்கிறோம் என்ற பதட்டமே தெரியாமல் அசத்தினார் ஜெ. 'ஆடாமல் ஆடுகிறேன்', 'பருவம் எனது பாடல்', 'உன்னை நான் சந்தித்தேன்' என இந்தப் படத்தில் ஜெ. வரும் அத்தனை பாடல்களும் இமாலய ஹிட். தலையில் மெல்லிய வலை ஒன்றை மாட்டிக்கொண்டு வரும் அவரின் தோற்றத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இரண்டாவது படத்திலேயே ட்ரெண்ட்செட்டர் ஆனார் ஜெயலலிதா.

யார் நீ:

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த படம். அந்தக் காலத்திலேயே ரசிகர்களை மிரள வைத்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இதில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார் ஜெ. பொதுவாக இரட்டையர்கள் என்றால் ஒரு கேரக்டரிலிருந்து மற்றொரு கேரக்டரை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டியது இருக்கும். ஆனால் இது வித்தியாசமான கதை என்பதால் ஜெ. கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருந்தது. இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க இதன் தெலுங்கு ரீமேக்கிலும் நாயகியானார்.

அரச கட்டளை:

எம்.ஜி.ஆர் அவரின் அண்ணன் எம்.ஜி சக்கரபாணி இயக்கத்தில் நடித்த படம். இதில் மீண்டும் இளவரசியாக மகுடம் தரித்தார் ஜெ. இன்னொரு ஹீரோயினாக சரோஜா தேவி இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மின்னினார்.  இந்தப் படம் அந்தக் காலத்தில் வசனங்களுக்காக பேசப்பட்டது. அதில் ஜெ.க்கும் பங்கு உண்டு. துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் ரிலீஸான படம் என்பதால் ஜெ. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் இது மறக்க முடியாத படம்தான்.

காவல்காரன்:

அரச கட்டளை வெளியான அதே ஆண்டில் ரிலீஸான படம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அசோகன், ஆர்.எஸ் மனோகர் கூட்டணி சேர்ந்தாலே படம் சூப்பர் ஹிட்டாகும் என கோலிவுட் நம்பத் தொடங்கியிருந்தது. அந்த நம்பிக்கையை இந்தப் படமும் காப்பாற்றியிருந்தது. பணக்கார ஹீரோயின், ஏழை ஹீரோ, அவர்களுக்குள் காதல் என்ற ஃபார்முலாவை தாங்கி வந்த ஆரம்ப கால சினிமா. சிவாஜி கணேசனோடு மட்டுமே நடித்துக்கொண்டிருந்த சிவகுமார் இதில் முதன்முறையாக எம்.ஜிஆரோடு இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் ஜெ. எடுத்தது அல்ட்ரா மாடர்ன் யுவதி அவதாரம்.

கந்தன் கருணை:

சிவாஜி, ஜெமினி கணேசன், சிவகுமார், சாவித்திரி, ஜெயலலிதா, கே.ஆர் விஜயா, அசோகன், கே.பி சுந்தராம்பாள், மனோரமா, நாகேஷ் என அந்த நாளில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த அத்தனை பேரும் ஒன்றாகக் களமிறங்கிய படம். இதில் ஜெயலலிதாவுக்கு அழகே உருவான வள்ளி வேடம். கடைசி 45 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் தெள்ளிய தமிழில் வெளுத்து வாங்கி ரசிகர்களை அசர வைத்தார் ஜெ. இசைக்காகத் தேசிய விருது வாங்கிய இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் அபிநயங்கள் க்ளாஸ் ரகம்.

குடியிருந்த கோயில்:

எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் கலக்கிய படம். இதில் நல்ல எம்.ஜி.ஆர் ஆனந்தின் ஜோடியாக நடித்திருப்பார் ஜெயலலிதா. காஸ்ட்யூம், மேக்கப், டான்ஸ் என சகலவற்றிலும் அடுத்த லெவல் ஜெயலலிதாவை இதில் பார்த்தார்கள் ரசிகர்கள். 'என்னைத் தெரியுமா'. 'நீயேதான் எனக்கு, 'குங்குமப் பொட்டின் மங்களம்' என எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்த அத்தனைப் பாடல்களும் ஹிட். டைட்டில் கார்டில் 'குடியிருந்த கோயில்' என்பதற்குப் பின்னால் வரும் முதல் பெயர் ஜெயலலிதாதான். இது அந்த நாளில் மிகப்பெரிய கௌரவம்.

ரகசிய போலீஸ் 115:

மேலை நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஜேம்ஸ் பாண்ட் 007 சாயலில் தமிழில் வெளியான படம். இதில் ரா அதிகாரியாக நடித்திருப்பார் எம்.ஜி.ஆர். அவர் அண்டர்கவர் ஆபிசராகச் செல்லும் நாடகக் கம்பெனியின் உரிமையாளராக நடித்திருப்பார் ஜெ. மிடுக்காய், அலட்டலாய் ஜெ. கெத்து காட்டிய ரோல்களில் இதுவும் ஒன்று. எம்.ஜி.ஆர் - ஜெ. இடையிலான காதல் காட்சிகள் அந்தக் காலத்தில் வெகுவாக ரசிக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு சுசீலா பாடும் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாகும். அந்த வகையில் இந்தப் படத்தின் 'கண்ணே கனியே' பாடல் பட்டி தொடி எங்கும் ஹிட்.

நம் நாடு:

எம்.ஜி.ஆரின் கேரியரில் மிக முக்கியமான படம். அவரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய பூஸ்ட் அளித்த இந்தப் படம் ஜெயலலிதாவுக்கும் மைல்கல் சினிமா. தெலுங்கில் என்.டி.ராமாராவ் நடிப்பில் வெளியான படத்தின் ரீமேக் இது. தெலுங்கிலும் ஜெ. தான் ஹீரோயின். இதில் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆராகவே (மெட்ரோ கோல்ட் ராபர்ட்) நடித்திருப்பார். ஜெ.வும் அம்முவாகவே (அலமேலு) நடித்திருப்பார். சிம்பிளான தாவணி, கழுத்தில் கறுப்புக் கயிறு. மொத்தப் படத்திலும் ஜெ.வுக்கு இவ்வளவுதான் அலங்காரம். ஆனால், அவற்றை எல்லாம் தாண்டி நடிப்பில் மின்னினார்.

அடிமைப் பெண்:

அதுவரைக்கும் இருந்த ரெக்கார்ட்களை எல்லாம் உடைத்தெறிந்த படம். ஜெ.வின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் இந்தப் படம். இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஜெ. அதுவும் ஹீரோயின் மற்றும் வில்லி வேடங்கள். ஹீரோயின் ஜீவாவைப் பார்த்து கிறங்கிய ரசிகர்கள் வில்லி பவளவள்ளியை பார்த்து மிரண்டுதான் போனார்கள். மாநில அரசின் விருது, ஃபிலிம்பேர் விருது என எக்கச்சக்க விருதுகளை ஜெயலலிதாவுக்குப் பெற்றுத் தந்தது அடிமைப் பெண். ஜெ. தமிழ் சினிமாவின் ராணியானார்.

நீரும் நெருப்பும்:

பிரெஞ்சு நாவலான கார்சிஷியன் பிரதர்ஸ் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதிலும் எம்.ஜி.ஆருக்கு டபுள் கெட்டப். நீர் மணிவண்ணன், நெருப்பு கரிகாலன் என இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர் அசத்த, அவருக்கு கொஞ்சமும் சளைக்காத காஞ்சனையாகப் பின்னிப் பெடலெடுத்தார் ஜெ. அண்ணன் மணிவண்ணனுக்குத்தான் ஜெ. ஜோடி. அண்ணன், தம்பி பிரச்னையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் அபலைப் பெண் வேடத்தில் நடிப்பைக் கொட்டியிருந்தார் அவர். படமும் வசூல் வேட்டையில் சாதனை படைத்தது.

பட்டிக்காடா பட்டணமா:

சிவாஜி முதன்முதலில் நடித்த கிராமத்து சப்ஜெக்ட். கிராமத்து கணவருக்கும் நகரத்தின் மாடர்ன் மனைவிக்கும் இடையில் நடக்கும் பிரச்னைகள்தான் கதை. அவற்றை அப்படியே கண் முன் கொண்டுவந்தது சிவாஜி - ஜெ. ஜோடி. கதை, நடிகர்கள் என அனைவரும் பாராட்டு மழையில் நனைந்தார்கள். பாராட்டிய வி.ஐ.பிக்களுள் முன்னாள் முதல்வர் காமராஜரும் அடக்கம். சிறந்த படத்திற்காகத் தேசிய விருது பெற்றது. 

மற்ற படங்களின் போஸ்டர்களை காண க்ளிக் செய்யவும்

-நித்திஷ்  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்