Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவிற்கு திரை பிரபலங்களின் இரங்கல்... முழுமையான தொகுப்பு!

இரங்கல்

ஒட்டுமொத்த தமிழகமுமே சோகத்தில் நிறைந்திருக்கிறது. சினிமாவில் வாழ்க்கையைத் தொடங்கியவர் அரசியலில் தடம் பதித்து  தன்னுடைய பயணத்தை முடித்திருக்கிறார். அரசியலில் இருந்தாலும் சினிமாவிலிருந்து என்றும் இவரைப் பிரித்துவிடமுடியாது. இவருக்காக ஒட்டுமொத்த திரையுலகமே கண்ணீர் சிந்தியது. மறைந்த ஜெயலலிதாவிற்காக, திரை பிரபலங்கள் தங்களுடைய இரங்கல் செய்தியை  அறிக்கையாகவும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்கள். அதன் ஒட்டுமொத்த தொகுப்பு இது... 

ரஜினிகாந்த்: 

தமிழ்நாடு மட்டுமல்ல. இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம்முதல்வரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

கமல்ஹாசன்: 

சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

வைரமுத்து: 

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்... ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.  மேலும் படிக்க:

விஜய்: 

அதிகாலையிலேயே ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்துவிட்டார் விஜய்.  அவரின் உயிரற்ற உடலைப் பார்த்ததுமே கண்ணீர் சிந்தினார். பின், சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டார். 

அஜித்குமார்: 

மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு இன்னல்களை கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என்று நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழக மக்களுக்கும் இந்த பிரிவைத் தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஸ்ரீதேவி: 

மிகப்பெரிய தலைவர், அதீத மரியாதையும், அன்பையும் மக்களால் பெற்று ஆராதிக்கபட்டவர்.  இந்தியா நிச்சயம் ஜெயலலிதா அவர்கள் இல்லாத குறையை உணரும். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்” 

மகேஷ்பாபு: 

ஜெயலலிதா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. அவரது குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தமிழகமும் இந்த அசாதாரண சூழலைத்தாங்கும் சக்தியை இந்த நேரம் பெறவேண்டும். 

சிவகார்த்திகேயன்: 

நிகரில்லாபெண்மணி ஜெயலலிதாவின் மறைவு மனதிற்குள் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆன்மா சாந்தியடையட்டும்... 

ராம்கோபால் வர்மா: 

ஜெயலலிதா இல்லாத தமிழ்நாட்டை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கமுடியவில்லை. நட்சத்திர நடிகையில் தொடங்கி, நட்சத்திர அரசியல்வாதி அவர். என்ன ஒரு அற்புதமான பயணம்?

அமிதாப் பச்சன்: 

இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு விழாவை எல்லா மொழிகளுக்கும் கொண்டாடிய முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. மிகவும் மதிப்பு வாய்ந்தவர்.

ஹேமாமாலினி: 

ஜெயலலிதாவின் இறப்பு எங்களை வருதத்தில் ஆழ்த்தியுள்ளது. மன வலிமையும் உறுதியும் கொண்டவர். அதுவே அவரை சிறந்த அரசியல்வாதியாக்கியது. நாங்கள் மதிக்கும் மிகச்சிறந்த தலைவி. ஆண்களின் மத்தியில் தனக்கான உலகத்தை உருவாக்கியவர். 

நாகார்ஜூனா

எனக்கு நினைவிருக்கிறது... என்னுடைய தந்தை அவரைப்பற்றி பேசும்பொழுதெல்லாம் அவருக்குள் மிகுந்த மரியாதையும் பாசமும் இருக்கும். “மே ரெஸ்ட் இன் பீஸ்...”

ஜீவா: 

மன உறுதிகொண்ட தலைவரின் மறைவைக் கேட்டு வருத்தம் அடைகிறேன். 

டி.ராஜேந்தர்: 

தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துவிட்டார்.  

குஷ்பு: 

தமிழகத்தை தாங்கிய கோபுரம் சாய்ந்தது.  உங்களைப் போன்ற தலைவர்கள் மறைவதில்லை. நித்திய வாழ்வு காண்பீர்கள். நீங்கள் எப்பொழுதுமே ஒவ்வொரு மக்களின் இதயத்திலும் வாழ்வீர்கள். உங்களை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நெடியும், நீங்கள் இல்லாததை நினைத்து தவிப்போம். 

ஷாருக்கான்: 

ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு வருந்துகிறேன். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். 

சுதீப்: 

துணிவு, மரியாதை, எதிர்கால சிந்தனை, சக்தி, அறிவு ஆகியவற்றின் மறு உருவம்.. அத்தகைய தலைவர்கள் பிறப்பது அரிது. மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

அனுபம் கெர்: 

மிகப்பெரிய கூட்டத்தையும் கவர்ந்திழுக்கும் மாபெரும் தலைவர் ஜெயலலிதாவின் மறைவு என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

த்ரிஷா:

எனக்கு மிகவும் பிடித்தமானவர் மறைந்துவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் படித்த பள்ளியிலேயே நானும் படித்திருக்கிறேன் என்பதில் பெருமையடைகிறேன்.  

சுஹாசினி: 

இதயம் உடைந்து நொறுங்கிப்போய்விட்டது. வருத்தத்தையும் துக்கத்தையும் கண்ணீரால் விளக்கமுடியாது. 

வெற்றிமாறன்: 

ஆன்மா சாந்தியடையட்டும்...! 

ஆர்.ஜே.பாலாஜி: 

என் தாயார் விடாமல் அழுதுகொண்டிருக்கிறார். என்னுடைய குடும்பத்தில் ஒருவரை இழந்ததாகத் தான் உணர்கிறேன். அதுபோலத்தான் ஒட்டுமொத்த தமிழகமும் வருந்திக்கொண்டிருக்கும். இவரைப் போல இன்னொரு அம்மா இனி வரவும் முடியாது... மிஸ் யூ அம்மா.....! 

விக்ரம்: 

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த செய்தியை ஆழந்த வருத்ததுடனும், அதிர்ச்சியுடனும் கேட்டேன். அவர் ஒரு உயர்ந்த தலைவர் மட்டுமல்ல, என்னைப்போன்ற லட்சக்கணக்கானவர்களின் கண்களுக்கு சகாப்தமாகத் தெரிந்தவர். அவரது சொல்வன்மையை மறக்கவே முடியாது. தமிழகத்துக்கு மட்டுமல்ல, தேசத்துக்கே இது மிகப்பெரிய இழப்பு. கடவுள் அவர் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்

தனுஷ்: 

தமிழ்நாடு அரசியலின் உத்வேகத்தின் காவியம் முடிந்துவிட்டது. வெற்றிடத்தை விட்டுச்சென்றுவிட்டீர்! #அயர்ன் லேடி #உடைந்துநெறுங்கிவிட்டேன் #இருண்டநாள்! 

தென்னிந்திய நடிகர் சங்கம்: 

நம்மை விட்டு சென்றது ஒரு தனி மனிதர் அல்ல சகாப்தம். ஒரு சரித்திரம் முடிந்திருக்கிறது. ஒரு நடனமணியாக , ஒரு நடிகராக , ஒரு கட்சியின் தலைவராக , அரசின் தலைமையாக அவர் கால் வைத்த எல்லா துறைகளிலும் உட்சாணியை தொட்டு இருக்கிறார். பல்லாண்டு காலம் அடிமைபட்டிருந்த பெண் இனத்தில் ஒரு பெண் நினைத்தால் , தைரியத்துடன் முன் சென்றால் எந்த அளவிற்கு செல்லலாம் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறார். எங்கள் நடிகர் சமூகத்திற்கு ஒரு மரகத மணி போல் அவர் ஒலித்து கொண்டு இருக்கிறார். எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்திருக்கிறார் , எங்கள் சங்கத்தின் பால் ,மிக அக்கறை கொண்டு இருந்திருக்கிறார். அவருடைய சக்தி , அவருடைய செயல் எங்களை முன்னெடுத்து செல்லும். இந்த தருணத்தில் அவரை பிரிந்து வாடும்  அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நடிகர் சமூகத்தின் சார்பாகவும் , எங்கள் திரையுலகத்தின் சார்பாகவும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். என்றென்றும் அவர்கள் நினைவோடு , அவர்கள் செயல்பாட்டில் நடிகர் சங்கம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: 

மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவா்களது இழப்பு ஒட்டு மொத்த திரையுலகையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்த்திரையுலகம் சார்பில் இன்று ஒருநாள் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தொகுப்பு: பி.எஸ்.முத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்