ஜெயலலிதா - அஜித் இடையிலான நெகிழ்ச்சித் தருணங்கள்..! | Actor Ajith pays tribute to Jayalalithaa

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (07/12/2016)

கடைசி தொடர்பு:09:51 (08/12/2016)

ஜெயலலிதா - அஜித் இடையிலான நெகிழ்ச்சித் தருணங்கள்..!

கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்கிற செய்தி அப்போலோ வெளியிட்டது. இந்த துயர செய்தி தமிழகம் மட்டுமல்ல... இந்தியா மட்டுமல்ல உலகையே உலுக்கியது. அஜித் தனது 57-வது படத்தின், படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் இருந்தார். அங்கே வெளி உலக செய்திகள் தெரியாத ஒரு பனிக்குகைக்குள் அஜித் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அங்கே படப்பிடிப்பில் யூனிட்டில் இருந்த அத்தனை பேர் செல்போன்களிலும் நெட் ஒர்க் செயல்படவில்லை. அதனால் ஜெயலலிதா இறந்த செய்தி அஜித்-க்கு போய் சேரவில்லை. அங்கே படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த பிறகே அஜித்-க்கு ஜெயலலிதா இறந்த செய்தி தெரியவந்தது.

மனிதர் நொறுங்கி விட்டார். பல்கேரியாவில் இருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு வருவதற்கு எவ்வளவோ கடும் முயற்சி செய்தார். அப்படி இருந்தும் அவரால் ஜெயலலிதாவுக்கு குறித்த நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. பல்கேரியாவில் இருந்து சின்ன சின்ன விமானங்களில் மாறி மாறி பயணம் செய்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தவர் தன் வீட்டிற்கு செல்லவில்லை.

அங்கே காத்திருந்த மனைவி ஷாலினி, மைத்துனர் ரிச்சர்ட், மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோருடன் காரில் புறப்பட்டு மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கே நேற்று அடக்கம் செய்யப்பட்டு இருந்த ஜெ. சமாதியின் முன்னால் மலர்வளையம் வைத்து கண்ணீர் கலங்க தன் ஆத்மார்த்த அஞ்சலியை செலுத்தினார். அதன் பின் வெளியே வந்தபோது துக்ளக் ஆசிரியர் சோ இறந்த செய்தி அஜித்க்கு தெரியவந்தது. உடனே அங்கிருந்து சோ சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று அங்கே சோவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜெ.வுக்கும் அஜித்துக்கும் உள்ள அன்பு என்ன? ஒரு சின்ன ஃபிளாஷ் பேக். அஜித் தனது திருமணத்துக்கான அழைப்பிதழை சினிமா உலக விஐபிகளுக்கு தானே சென்று வழங்கி வந்தார். அப்போது ஒருவர் ''ஜெயலலிதா மேடத்துக்கு இன்வெடேஷன் கொடுத்தால் நல்லா இருக்கும்" என்று சொல்ல உடனடியாக போயஸ் கார்டனில் தொடர்பு கொண்டு அப்பாய்ன்மென்ட் கேட்க, அனுமதியும் கிடைத்தது. அப்போது அஜித் வளர்ந்து வளரும் நடிகர். அந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவை சந்தித்து கல்யாண அழைப்பிதழை கொடுத்தார். அப்போது அஜித்திடம் அன்பாக பேசிய ஜெ. அவர் நடித்த படங்கள் பற்றி வரிசையாக லிஸ்ட் போட்டு சொல்ல ஜெ.வின் ஞாபகத் திறன் கண்டு திகைத்து போனார் அஜித். அதன் பின் கன்னிமாரவில் நடந்த அஜித் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார்.

வழக்கமாக ஜெயலலிதாவை கண்டால் எல்லோரும் கரம் கூப்பி வணங்குவது வழக்கம். ஜெ. மேடையில் ஏறி அஜித்துக்கு வாழ்த்து சொல்ல அருகில் வந்த போது தீடீரென்று அஜித் கை கொடுப்பதற்காக கரங்கள் நீட்ட திகைத்துப் போன ஜெ.பின்னர் சிரித்துகொண்டே கை கொடுத்து வாழ்த்து சொன்னார்.

அப்போது இருந்தே சினிமா நடிகர்களிலேயே அஜித் மீது தனி அன்பு செலுத்தி வந்தார் ஜெயலலிதா. இது அஜித்திற்கும் நன்றாகவே தெரியும். இந்த அன்பின் துடிப்புதான் பல்கேரியாவில் இருந்த அஜித்தை சென்னைக்கு வரவழைத்து  ஜெயலலிதா சமாதியில் தனியாக சென்று அஞ்சலி செலுத்த வைத்து இருக்கிறது.

-சத்யாபதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்