ஷாரூக்கானின் ரயீஸ் படம் யாரைப் பற்றிய கதை தெரியுமா?

"நீ என்ன, இதைத் தொழில்னு சொல்ற? ஆக்ச்சுச்சுவலி இது ஒரு க்ரைம்! நீ இதை நிறுத்திடு. இல்ல நீ சுவாசிக்கறதையே நிறுத்திடுவேன்.

இந்த தொழில் குஜராத்தின் காற்றில் கலந்திருக்கு சார். நீங்க என் சுவாசத்தை நிறுத்தலாம். காற்றை எப்படி நிறுத்துவீங்க?" 

ரயீஸ் பட டிரெய்லரில் இடம்பெறும் வசனம் இது. ஷாரூக் கான், நவாசுதீன் சித்திக், மையீரா கான் நடித்திருக்கும் படம் ரயீஸ். அப்துல் லத்தீஃப் என்கிற குற்றாவாளியின் வாழ்க்கையைத் தழுவிஉருவாகியிருக்கிறது இந்தப் படம். பாலிவுட்டில் இது குற்றப்பின்னணி உள்ளவர்களைப் பற்றி படமாக்கும் சீசன் போல. இதற்கு முன் ராமன் ராகவ் 2.0, இப்போது ரயீஸ், இதற்கடுத்து டாடி என ரகளை செய்கிறார்கள் இந்திவாலாக்கள்.

ரயீஸ்

அப்துல் லத்தீஃப் மேல் இன்னும் 97 வழக்குகள் நிலுவையிலேயே இருக்கிறது. யார் இந்த லத்தீஃப்? 

குஜராத்தின் போபட்டியாவாட் பகுதியில் வளர்ந்தவன் அப்துல் லத்தீஃப். தன் சிறுவயதிலேயே சூதாட்ட விடுதிகளில் மது ஊற்றிக் கொடுக்கும் சர்வராக வாழ்வை துவங்கினான். அதன் பின் கள்ளச்சாராய கடத்தலை துவங்கியவன் அதன் மூலம் பிரபலமானான். சூதாட்டக் கூடம், ஹவாலா, நிலப் பஞ்சாயத்து, கொலை என வளர்ந்து ஆட்டிபடைத்தான். 1985ல் மும்பையின் பதன் கும்பலைச் சேர்ந்த அலாம்ஸெப் உடன் சேர்ந்து தனக்குப் போட்டியாக இருந்தவரை அழித்து பின்பு தாவூத் இப்ரஹிமின் உதவியுடன் அலாம்ஸெப்பையும் அழித்து, குஜராத்தின் அசைக்க முடியாத ஆளானான். 40 கொலை வழக்குகள், 50க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் வழக்குகள், தாவூத் இப்ரஹிமுடன் கூட்டு, 1993ல் மும்பை தொடர்குண்டு வெடிப்பில் தொடர்பு... என விரிகிறது லத்தீஃபின் க்ரைம் லிஸ்ட். 1997ல் சிறையிலிருந்து தப்ப முயன்ற லத்தீஃபை சுட்டுக் கொன்றது போலீஸ். 

 

 

இது லத்தீஃப் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் படம் கிடையாது. இதற்கு முன் 2011ல் ஷாரிக்யூ மின்ஹாஜ் இயக்கத்தில் 'என்கௌண்டர் லத்தீஃப்' என்கிற படம் அறிவிக்கப்பட்டு அது 2014ல் லத்தீஃப்: தி கிங் ஆஃப் க்ரைம்' என்கிற பெயரில் வெளியானது. இப்போது  'ரயீஸ்' மூலமாக மறுபடி படமாகியிருக்கிறது லத்தீஃப் வாழ்க்கை. 2017 ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டாலும், அப்துல் லத்தீஃப் மகன் முஷ்தக், 'யாரைக் கேட்டு என் தந்தையின் கதையைப் படமாக எடுக்கிறீர்கள்?' என அனுப்பிய நீதிமன்ற நோட்டீஸ், பாகிஸ்தான் நடிகை மையிரா கானை நடிக்க வைத்திருப்பது எனப்  படத்தை சுற்றி சில சர்ச்சைகள் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. 

சஞ்சய் தத் நடிப்பில் 'லம்ஹா' படத்தை இயக்கிய ராகுல் துலக்யா தான் ரயீஸ் படத்தின் இயக்குநர். அனுராக் காஷ்யப் இயக்கிய 'ராமன் ராகவ் 2.0' படத்திற்கு இசையமைத்த ராம் சம்பத் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தின் டிரெய்லரைப் பார்க்கையில், லத்தீஃபின் வாழ்க்கையிலிருந்து சாராய வியாபாரம், அதைத் தடுக்கவரும் போலீஸ் அத்தியாயைம் மட்டும் எடுத்துக் கொண்டு படமாக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. சாராய வியாபாரி ரயீஸாக ஷாரூக் கான், அவரைத் தடுக்க வரும் ஏசிபி குலாம் படேலாக நவாஸுதீன் சித்திக் நடித்திருக்கிறார்கள். இதனை உறுதி செய்து கொள்ள கட்டுரையின் முதல் வரியை மறுபடி படிக்கவும்.

- பா.ஜான்ஸன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!