“வர்தா புயலை மறக்கடிக்கும் வைகைப்புயலின் மீம்ஸ்!”

‘கத்தி சண்டை’ படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.  பின்பு பல தேதி மாற்றங்கள் செய்தப்பின்னர், பொங்கல் ரிலீஸ் என்று  அறிவித்தனர். பிறகு டிசம்பர்-23ஆம் தேதி என்று ரிலீஸை உறுதி செய்தது  படக்குழு. சென்னை பிரசாத் லேப்பில் மரம் ஒன்றை நட்ட விஷால், அதன்பின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு பேசியதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

இயக்குநர் சுராஜ்:

“தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போனதால், டிசம்பர்-2ஆம் தேதிக்கு ரிலீஸை மாற்றினோம். ஆனால், அப்போது பண மதிப்பு நீக்கம் காரணமாக மக்கள்  அவதிப்பட்டு வந்ததால், இந்த பிரச்னை எல்லாம் முடியட்டும் அதுக்கப்பறம் ரிலீஸ்  பண்ணலாம்னு பொங்கலுக்கு ரிலீஸ் தேதியை மாற்றினோம். ஆனால், அதற்குள்  வர்தா புயல் வந்து மக்கள் மனதை அதிகம் பாதித்து விட்டது. வர்தா புயலினால்  ஏற்பட்ட சோகத்தை வைகைப்புயலால் தான் மறக்கடிக்க முடியும். அதனால், டிசம்பர்-23ம் தேதி படத்தை ரிலீஸ் பண்ணவுள்ளோம். கண்டிப்பாக சோகத்தை  மறந்து கலகலப்பாக இருக்க இந்த படம் உதவும்.”

வடிவேலு:

“நான் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைதளங்களிலும்,  டிவிகளிலும் அடிக்கடி மக்கள் என் முகத்தை பார்த்துட்டு இருக்காங்க. என்னை  மறக்காமலும் இருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட மத்தப் படத்துல வந்த வசனங்களை எப்படி இன்னும் மக்கள் பயன்படுத்துறாங்களோ,  அதே மாதிரி இந்த படத்தில் வர வசனங்கள் மீம்ஸ் போட உதவும். இந்த  படத்தில் வித்தியாசமான கெட்டப்பில், டாக்டராக நடிச்சிருக்கேன். விஷாலையும்  தமன்னாவையும் சேர்ந்து வைக்கிற மாதிரி ஒரு காட்சி இந்த படத்தில் வரும்.  அதில், ‘விஷாலுக்கு ஒரு முத்தம் கொடுத்தா அவர் பொழச்சிடுவார். ஒரு  முத்தம் மட்டும் கொடும்மா’னு சொல்லுவேன். அதுக்கு, ‘யோவ் நீ டாக்டரா  இல்ல வேற யாருமா..?’னு அந்த பொண்ணு கேட்கும். அதுக்கு நான், ‘இதுவும்  ட்ரீட்மெண்ட் தானமா’னு சொல்லுவேன். இந்த ‘ட்ரீட்மெண்ட் தானே’கிற வசனம்  படத்துல அங்க அங்க வரும். அது எல்லாமே கலகலப்பா இருக்கும்.”

விஷால்:

“பத்து வருஷம் கழிச்சு நானும் வடிவேலு அண்ணனும் சேர்ந்து நடிக்கிறதனாலையும், ரொம்ப  நாள் கழிச்சு வடிவேலு அண்ணன்  படத்தில் நடிக்கிறதனாலையும் இந்த படம் ஏதாவதொரு  சாதாரண நாள்ல ரிலீஸானா நல்லா இருக்காதுனு முடிவு பண்ணினோம்.  அதுனால தான் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணமுடியலைனு பொங்கலுக்கு ரிலீஸ்  பண்ண முடிவு பண்ணினோம். பொங்கலுக்கு விஜய் படம் வருது, அதுனால  அந்த படத்தோடு என் படத்தை ரிலீஸ் பண்ணணும்னு நான் நினைக்கலை. பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸானா விடுமுறை நாட்கள் அதிகமாக கிடைக்கும்.  வடிவேலு அண்ணனின் படத்தை பார்க்க ஏராளமானவர்கள் வருவாங்க.  அதுனால தான் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால், சிங்கம்-3 படம் டிசம்பர்-23ம் தேதி ரிலீஸாகாததால் இந்த விடுமுறை நாட்களை  ஏன் மிஸ் பண்ணணும்னு இந்த நாள்ல ரிலீஸ் பண்றோம். மற்றப்படி வேற எந்த  எண்ணமும் இல்லை. ஒரே படத்தில் வடிவேலு, சூரியோட நடித்தது எனக்கு  ரொம்ப பெருமைமா இருக்கு. ‘கத்தி சண்டை’ நிகழ்ச்சிகளுக்கு ஏன் சூரி  வரலை..? அவரை யார் வரக்கூடாதுன்னு சொன்னா..?னு கேட்கிறாங்க. அப்படி  யாரும் அவரை வரக்கூடாதுன்னு சொல்லலை. இதுக்கு முந்தைய நிகழ்ச்சியின்  போது சூரி ஷூட்டிங்கில் இருந்தார். பொங்கலுக்கு ரிலீஸ் என்று முடிவு செய்திருந்ததால், அந்த டைம்ல சூரியின் டேட்ஸ் வாங்கியிருந்தோம். இன்று  நிகழ்ச்சி திடீர் என்று முடிவு செய்ததால், அவரால் வர முடியவில்லை. தேனியில்  ஷூட்டிங்கில் இருக்கிறார். அதனால் தான் சூரி வர முடியவில்லை. வேறு எந்த  காரணமும் இல்லை.”

மா.பாண்டியராஜன்

படங்கள்:அருணசுபா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!