Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அன்பெனும் ஆயுதம் ஏந்தி, போர்க்களமாடும் மெல் கிப்சன் HacksawRidge படம் எப்படி

ப்ரைவேட் டாஸ், ஏன் நீங்க துப்பாக்கிய எடுத்துக்கல?

மன்னிக்கணும் சார்ஜன், நான் துப்பாக்கியை தொட மாட்டேன்...!

பயிற்சி முகாமில் ராணுவ வீரர் டாஸ் தனது உயர் அதிகாரியிடம் சொன்ன வார்த்தைகள் இவை.  இரண்டாம் உலகப்போர் சமயம் அது. இராணுவத்தில் போர் மருத்துவராக சேர்ந்து, போரில் எந்த ஆயுதமும் இல்லாமல் 75 பேரின் உயிரைக் காப்பாற்றிய டெஸ்மன்ட் டாஸ், இறுதியில் 'மெடல் ஆஃப் ஹானர்' பெற்ற வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் 'ஹேக்சா ரிட்ஜ்'. படத்துக்கு ஆஸ்கரில் விருதுகள் காத்திருக்கிறது என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டது ஹாலிவுட். போன வருடம் ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் போலவே இந்தவருடமும் இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து ஹேக்சா ரிட்ஜ். ஆனால், இயக்குநர் மெல் கிப்சன் பத்து வருடங்களுக்குப் பிறகு வித்தியாசமான வார் பயோக்ராஃபி கதையுடன் வந்திருக்கிறார்.

ஹேக்சா ரிட்ஜ்

சிறுவயதில் தன் சகோதரனை தாக்கியதில் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாகும் டாஸ் அதன் பிறகு வன்முறையின் மேல் நம்பிக்கை இழக்கிறான். கூடவே தாயின் பைபிள் போதனைகளும் அன்பை டாஸ் மனதில் ஆழமாக விதைக்கிறது. விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்ததும் தான் உயிர்களைக் காப்பாற்ற பிறந்தவன் என உறுதியாக நம்பத்துவங்குகிறான். விர்ஜினியா பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த தருணம் அது. கொத்துக் கொத்தாக இளைஞர்கள் இரணுவத்தில் சேந்து கொண்டும் இருந்தனர். அப்போது தான் டாஸின் சகோதரணும் இராணுவத்தில் சேந்ததால், நீயாவது வீட்டுக்காக வாழு எனச் சொல்லும் தந்தையின் வார்த்தைகளை மீறி இராணுவத்தில் போர் மருத்துவராக சேர்கிறான். எல்லா பயிற்சிகளையும் தயங்காமல் செய்பவன், ஆயுதப் பயிற்சியை மட்டும் வேண்டாம் என சொல்கிறான். "பைபிள்ல உயிர்களைக் காக்கணும்னு சொல்லியிருக்கு, கொல்ல இல்ல", "ஏழாம் நாள் திருச்சபையை நம்பறவன் நான் சனிக்கிழமை பயிற்சிகளில் கலந்துக்க முடியாது" என டாஸின் செயல்பாடுகள் அதிகாரிகளைக் கடுப்பேற்றுகிறது. அன்பாக, கோபமாக, கண்டிப்பாக, அடித்து எனப் பல விதங்களிலும் ஆயுதத்தை டாஸ் கைகளில் கொடுக்க முயல்கிறது இராணுவம். எதுவும் வேலைக்கு ஆகாததால், இராணுவ நீதி மன்றத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகளை அளவுக்கு மீறி கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. ப்ரைவேட் டாஸ், எந்த வித ஆயுதங்களும் இன்றி போருக்கு செல்லலாம் எனத் தீர்ப்பாகிறது. எந்த ஆயுதமும் இன்றி ஓகிவான போரில் கலந்து கொள்ளும் டாஸ் தனி ஒருவனாக, அடிபட்ட வீரர்களை உயிருடன் மீட்டு வந்த கதையே ஹாக்சா ரிட்ஜ்.

ரத்தமும் சதையுமாக ஒரு போர், ஆயுதம் ஏந்த மறுக்கும் இராணுவ வீரன் பற்றி ஒரு படம், மெல்கிப்சனுக்கு இது புகுந்து விளையாடும் களம். விளையாடியிருக்கிறார் மனிதர். தெறிக்கு ரத்தமும், உருகுலைந்து சிதறும் உடல்களுமாக இறுதியில் வரும் போர் காட்சியை அதன் கோரத்துடன் அப்படியே படமாக்கியிருக்கிறார். போர்களத்தில் அழுகிப் போய், புழுவைத்துக் கிடக்கும் உடல்களைக் காட்டும் காட்சி ஒன்றே போதும் அதன் தத்ரூபத்தை சொல்ல. சைமன் டக்கனின் ஒளிப்பதிவும் போரின் தீவிரத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.

அமேஸிங் ஸ்பைடர் மேன் ஹீரோ ஆண்ட்ரூ க்ராஃபில்ட் தான் டாஸாக நடித்திருக்கிறார். தன் சக வீரர்களைக் காப்பாற்ற செல்லும் இடத்தில் எதிரி படையினர் வந்து விட பதுங்கு குழி ஒன்றின் வழியே செல்வார் தாஸ். வழியில் தொங்கிக் கொண்டிருக்க்கும் பிணத்தைப் பார்த்து கொடுக்கும் ஷாக் ரியாக்‌ஷன், அதே குழியில் உயிருக்குப் போராடும் எதிரி நாட்டு வீரணை சமாதானப்படுத்தி அவனுக்கு மருந்து போட்டுவிட்டு தனது வீரனைத் தேடி செல்வார். அந்த போர்ஷன் முழுக்க  பெர்ஃபாமென்ஸில் வெளுத்திருப்பார் தாஸாக நடித்திருக்கும் ஆண்ட்ரூ. டெசா பால்மருடனான காதல் காட்சிகளிலும் ஆண்ட்ரூ செம. 

உறுதியாக ஆண்ட்ரூவின் நடிப்பிற்கு விருதுகள் காத்திருக்கிறது. ஆஸ்கரில் இந்தப் படத்திற்கு என்னென்ன பிரிவுகளில் விருது கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து தன் பார்க்கவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்