Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டைகர் பிரபாகர், ராமி ரெட்டி, பிரதீப் சக்தி - இவங்க எல்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே!

ஒற்றைப் பார்வையில், ஒரு க்ளோசப் ஷாட்டில் நம்மை மிரட்டிக் கலங்கவைக்கும் வில்லன்கள் பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தோம். 'சிங்கம்', 'சென்னை 28' போன்ற படங்களுக்கு மட்டும்தான் பார்ட் 2 இருக்குமா என்ன? ஹீரோக்களுக்கு இணையாக கெத்து காட்டி ஹார்ட் பீட்டை எகிறவைக்கும் வில்லன்கள் பற்றிய பார்ட் 2 தொகுப்புதான் இது. ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற ஸ்டார்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதால் லிஸ்ட்டில் அவர்கள் இல்லை.

ராஜன் பி தேவ் :

வில்லன்

90-களில் தொடங்கி 21-ம் நூற்றாண்டின் முதல் எட்டு ஆண்டுகள் வரை தமிழ், மலையாளப் பட உலகத்தினைக் கட்டியாண்ட வில்லன். ஜென்டில்மேனில் அர்ஜுனுக்கு சமமாக வாதாடும் கதர்ச்சட்டை. பின் அதே அர்ஜுனுக்கு வில்லனாக செங்கோட்டையில் மிரட்டினார். உருட்டும் கண்களும், கபடச்சிரிப்பும் ராஜன் ஸ்பெஷல். 'பூமகள் ஊர்வலம்' உள்ளிட்ட நிறையப் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். மலையாளத்தில் மூன்று படங்களை இயக்கிய இயக்குநரும்கூட. கேரளத்தில் கொண்டாடப்பட்ட இந்தக் கலைஞன் 2009-ல் உடல்நலக்குறைவால் காலமானார். 

ராமி ரெட்டி :

தமிழ் ரசிகர்களுக்கு 'சண்டாஆஆஆ' என அலறிக்கொண்டே அம்மனிடம் சண்டை போடும் 'கோரக்'காக பரிச்சயம். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என மொழி பாகுபாடில்லாமல் கெத்துக் கொடியை பறக்கவிட்டார். நடித்தது முக்கால்வாசி தெலுங்கில் என்பதால், டப்பிங் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கதிகலங்க வைத்தார். ஆண்டுக்கு குறைந்தது மூன்று படம் எனத் தொடர்ந்து 20 ஆண்டுகள் பிஸி. கல்லீரல் பிரச்னை காரணமாக 2011-ல் காலமானார் இந்த வெயிட்டான வில்லன்.

பாபு ஆண்டனி :

நெடு நெடு கட்டப்பா. 'பூ விழி வாசலிலே' படத்தில் தொடங்கிய ஆண்டனியின் ஆளுமை தசாப்தங்கள் கடந்தும் தொடர்கிறது. 'சூரியன்', 'நேதாஜி', 'அட்டகாசம்' என அப்போது தொடங்கி 'காக்கா முட்டை' என இந்தத் தலைமுறை கொண்டாடும் படம் வரை ஆண்டனி ஆதிக்கம்தான். இறுகிய முகம், ஆறரை அடி உயரம் என வில்லனுக்கான ட்ரேட்மார்க்குகள் அனைத்தும் ஆண்டனியிடம் கொட்டிக் கிடப்பதுதான் இதற்குக் காரணம். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் பாசமும் கண்டிப்புமான அப்பாவாக ரசிகர்கள் பார்த்தது அவரின் இன்னொரு முகத்தை.

பாப் கிறிஸ்டோ :

ரோலண்ட் கிக்கிங்கர், நாதன் ஜோன்ஸ், ஜானி க்யேன் போன்ற ஹாலிவுட் இறக்குமதிகளுக்கு எல்லாம் சூப்பர் சீனியர் இவர். ஒர்க் பெர்மிட்டுக்காக மும்பை வந்த இந்த ஆஸ்திரேலியரை அலேக்காக அள்ளிக்கொண்டது பாலிவுட். அதன்பின் அமிதாப் படங்களின் ஆஸ்தான வில்லன் பாப் தான். அங்கே அமிதாப் என்றால் இங்கே ரஜினி. ஆஜானுபாகுவாய் முரட்டு வெள்ளைக்கார உருவம் ஒன்று ரஜினியோடு சண்டைக் காட்சிகளில் மோதுமே, அது சாட்சாத் பாப் தான். 'அதிசயப் பிறவி', 'விடுதலை' என 200-க்கும் மேற்பட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்தவர் 2011-ல் மறைந்தார்.

டைகர் பிரபாகர் :

80-களில் சினிமாக்களை விரட்டி விரட்டிப் பார்த்த வெறியர்கள் ஒப்புக்கொள்வார்கள் டைகர் பிரபாகரின் ராஜ்ஜியத்தை. கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் எனக் கலந்து கட்டிப் பொளந்து எடுத்தவர் பிரபாகர். தங்கிலீஷ் போல கன்னடம் - இங்கிலீஷை மிக்ஸ் செய்து கங்லீஷ் பேசி ஃபேமஸானவர். தென்னிந்திய சூப்பர்ஸ்டார்கள் அத்தனைப் பேரோடும் மல்லு கட்டியவர். அதிலும் ரஜினியோடு 'அன்புக்கு நான் அடிமை', 'முத்து', 'அண்ணாமலை', 'பாண்டியன்' என எக்கச்சக்கப் படங்களில் நடித்தார். 80-களில் ஒரு பைக் விபத்தில் சிக்கியவர் 2001-ல் காலமானார்.

பிரதீப் சக்தி :

தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத காக்கிச்சட்டை. சாதாரண சக்திவேலை வேலு நாயக்கராக மாற்றிய மும்பை போலீஸ். அதன்பின் ரஜினிக்கெதிராக வால்பாறை வரதன் அவதாரம் எடுத்தார். 'மைக்கேல் மதன காமராஜன்', 'தளபதி', 'குணா' என அந்தக் கால லேண்ட்மார்க் சினிமாக்கள் அனைத்திலும் பிரதீப்பின் பங்கு இருக்கிறது. தெலுங்கில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். 'பாகுபலி 2' வில் நடித்து வந்தவர் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் காலமானார்.

ஐ.எம் விஜயன் :

'திமிரு', 'கொம்பன்' போன்ற படங்களில் பார்வையாலேயே நம்மை மிரட்டி கதிகலங்க வைத்தவர். நடிப்பு இவருக்கு நன்றாக வரும் என எல்லோருக்குமே தெரியும். ஆனால் நிறையப் பேருக்கு தெரியாத சேதி இவர் இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன். இந்தியாவுக்காக சர்வதேச அளவில் 40 கோல்கள் அடித்திருக்கிறார். பாய்சங் பூட்டியாவோடு இவர் ஜோடி சேர்ந்தால் எதிரணியினர் சிதறி ஓடுவார்கள். மேட்ச் தொடங்கிய 12-வது வினாடியில் இவர் அடித்த கோல்தான் உலக அளவில் மூன்றாவது வேகமான கோல். தமிழ் சினிமாவில் அடிக்கடி தலை காட்டுங்க பாஸ்!

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்