யாழினிக்கு என்ன ஆச்சு? - ‘தி ரிப்போர்ட்டர்’ குறும்படம்!

தி ரிப்போர்ட்டர்

ஆயிரமாயிரம் கனவுகளுடனும், ஆசைகளுடனும் ஒருவன் பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்கிறான். அப்படி பணியில் சேரும் நிருபர்கள், நிஜமாகவே அவர்களுக்கான பணியில் உண்மையாகத்தான் இருக்கிறார்களா?  பெண்கள் முன்னேற்றம் பற்றி எவ்வளவு தான் பேசினாலும், அவர்களுக்கெதிரான பயங்கரவாத சம்பவங்களும், அநீதிகளும் குறைந்துவிட்டனவா என்பது போன்ற கேள்விகளுக்கு வலியுடன் பதிலையும் பதிவுசெய்திருக்கும் குறும்படம் தான் “ தி ரிப்போர்ட்டர்”.  

இரண்டு மணிநேர படத்தைவிட, இணையத்தில் வெளியாகும் இருபது நிமிட வீடியோ நிச்சயம் நமக்குள் வலியை ஏற்படுத்தும். கார்ப்பரேட் நிறுவனங்களில்  புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், சம்பளமும் அதே நிறுவனத்தில் நான்கு வருடங்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு தரப்படுவதில்லை என்ற நிதர்சனமாக உண்மையுடன் குறும்படம் தொடங்குகிறது. அந்த கார்ப்பரேட் வலையில் சிக்கி,  தவிக்கும் நிருபர் தான் கருணா.

துணிச்சலான பெண், எந்த பிரச்னையென்றாலும் தைரியமாக எதிர்கொள்பவர் தான் யாழினி. யாருக்காகவும் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காதவர். ஐபிஎஸ் தேர்வு எழுதிவிட்டு, போலீஸாகிவிடவேண்டும் என்ற கனவுடன் காத்திருப்பவர். யாழினிக்கு நிகழும் கொடூரமான சம்பவத்தால் ஏற்படும் விளைவுகள் தான் கதை.   

“ஹீரோயின் போட்டோஸ் எடுக்குறவனுக்கும், ஹீரோ ஹீரோயின் பத்தி கிசுகிசு எழுதுறவனுக்கு கிடைக்கிற சராசரி மரியாதை கூட, வேலைய நேசிச்சி நேர்மையா பண்ணுற எனக்கு கிடைக்கலைன்னு நினைச்சா தான் செம காண்டாகுது” என்று பிடித்த வேலைக்கு நேர்மையாக இருக்க முயல்கிறார் கருணா.  இந்தியாவையே அதிரடிக்கும் நியூஸ் பிடித்துவிட வேண்டும் என்பதே கருணாவின் விருப்பம். அந்தமாதிரியான சம்பவமும் நிகழ்கிறது. அதை அப்படியே வீடியோவாக பதிவு செய்து, அதிர்வலையையும் ஏற்படுத்திவிடுகிறார்.

யாழினிக்கு என்னதான் ஆச்சி? நிருபராக கருணா அந்த இடத்தில் செய்தது சரிதானா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலுக்கு தி ரிப்போர்ட்டர் குறும்படத்தை பார்க்கவும்!  


Do you like the story?

Please Appreciate the Author by clapping!