Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2016-ன் மிஸ் பண்ணக்கூடாத தெலுங்குப் படங்கள்! #2016Rewind

வழக்கம் போலவே தெலுங்கு படங்களில் இந்த வருடமும் நிறைய மசாலா படங்கள் வந்தது. ஆச்சர்யமாக சில புது முயற்சிகளும் வந்தது. அவற்றில் எந்தெந்தப் படம் எப்படி? அந்த ஆச்சர்ய வரவுகள் என்ன என்ற லிஸ்ட் இதோ....

12.கல்யாண வைபோகமே:

படங்கள்

சௌரியாவுக்கு அமெரிக்காவில் வேலைக்கு சேர விருப்பம், திவ்யாவுக்கு டாக்டாராக இன்னும் ஏதோ சாதிக்க விருப்பம். இருவருக்கும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது மட்டும் பொதுவான ஒற்றுமை. இருவரும் ஒருவரை ஒருவர் வேண்டாம் என்று சொல்லியும் குடும்பத்தில் வரன் பார்ப்பது மட்டும் முடியவில்லை. இதைப் பார்க்கும் இருவரும், முதலில் திருமணம் செய்து கொள்ளலாம் பிறகு எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை என விவாகரத்து செய்துவிடலாம் எனத் திட்டமிட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணமான பின் இவர்களின் திட்டம் என்ன ஆகிறது என்பது கதை. அலா மொதலாய்ந்தி (தமிழில் 'என்னமோ ஏதோ'), ஜபர்தாஸ்த் ('பேண்ட் பஜா பாரத்'ன் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக்) படங்கள் இயக்கிய நந்தினி ரெட்டி வழக்கம் போல் தன் காமெடி மேக்கிங்கில் ஆடியன்ஸை கவர்ந்தார். க்யூட் ரொமான்ஸ் என வரவேற்பையும் பெற்றது படம்.

11.ஊப்பிரி:

கழுத்திற்கு கீழ் உடல் செயழிலந்த பணக்காரர், அவரின் கேர்டேக்கராக வரும் முன்னாள் ஜெயில் கைதி இவர்களுக்குள்ளான ஒரு நட்பு அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்கிற லைனில் பயணித்த கதை பலருக்கும் பிடித்துப் போனது. கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா என தமிழை விட தெலுங்கிற்கு மிகக் கச்சிதமான கதாப்பாத்திரத் தேர்வுகளே படத்தின் கவர்ச்சியை அதிகப்படுத்தியிருந்தது. 'த இன்டச்சபிள்ஸ்' என்கிற ஃப்ரென்ச் படத்தின் ரீமேக்காக இயக்கியிருந்தார் வம்சி. முழுமையான ரீமேக்கா என்ற கேள்விகளுக்குள் செல்லாமல் வெறுமனே பார்க்கும் பார்வையாளர்களுக்கு நிச்சயமான பொழுதுபோக்கை எந்தக் குறையும் இன்றி வழங்கியது படம். 

10.துருவா:

பொதுவாக ரீமேக் படங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் ஒரிஜினல் அளவுக்கு இல்லை என்பது. நேரம் படத்தின் ரீமேக்கான ரன், பிரேமம் ரீமேக், விக்கி டோனர் ரீமேக்கான 'நருடா டோனருடா' என இந்த வருடம் மற்ற மொழியிலிருந்து தெலுங்கில் ரீமேக்கான படங்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தது, துருவாவுக்கும் இருந்தது. சில பிரச்சனைகள் இருந்தாலும், கதாப்பாத்திரத் தேர்வு, மேக்கிங், 'தனி ஒருவன்' கொடுத்த த்ரில்லை ரீமேக்கிலும் கொண்டு வந்திருந்தது என நல்ல ரீமேக்கராக ஜெயித்தார் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. 

9.க்ரிஷ்ணகாடி வீர ப்ரேம கதா:

க்ருஷ்ணா (நானி) மகாலக்‌ஷ்மி (மெஹீர்) இருவருக்கும் காதல். மகாலக்‌ஷ்மி ஊரில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண். இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள். மகாலக்‌ஷ்மியின் குடும்பத்துக்கு எதிரிகளால் சில பிரச்சனைகள் வருகிறது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு நானியிடம் வருகிறது. கொஞ்சமும் அலுப்பூட்டாமல் நகரும் காமெடி+ரொமாண்டிக் கதை செம கலாட்டாவாக இருக்கும். 

8.எக்கடிக்கி போத்தாவு சின்னவாடா:

ஹாரர் வகையரா படத்தில் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான முயற்சி எக்கடிக்கி போத்தாவு சின்னவாடா. காதல் தோல்வியாகி நான்கு வருடங்கலுக்குப் பிறகு, அர்ஜுன் (நிகில்) கிராஃபிக் டிசைனராக வேலை செய்கிறார். உடன் வேலை செய்யும் நண்பனுக்கு தன் உடலில் ஆவி புகுந்து விட்டது என சந்தேகம் வர கேரளாவில் உள்ள மஹிசாசுர மர்தினி ஆலயத்துக்கு அழைத்துச் செல்கிறார் அர்ஜுன். அங்கு அமலாவை (ஹெபா படேல்) சந்திக்க அவருடன் காதல். திடீரென்று ஒரு நாள் அமலா அங்கிருந்து ஹைதிராபாத் கிளம்பிவிட அவரைத் தேடிச் செல்லும் அர்ஜுனுக்கு அதிர்ச்சி. அமலா சில வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. அமலாவின் சாயலிலேயே ஒரு பெண்ணை சந்திக்கிறார் ஆனால் அவரின் பெயர் வேறு, அதே தினத்தில் அமலாவிடமிருந்து போனில் அழைப்பு வருகிறது. யார் இந்த அமலா? ஏன் இப்படி நடக்கிறது என்பது கதை. தமிழில் அப்புச்சி கிராமம் படம் இயக்கிய வி.ஐ.ஆனந்த் தான் இப்படத்தை இயக்கியிருந்தார். சின்னச் சின்ன சொதப்பல்கள் இருந்தாலும் என்கேஜிங்கான கதை சொல்லலால் கவனிக்கப்பட்டது படம். 

7.நேனு ஷைலஜா:

ஹரி (ராம்), காதலை சொல்லும் எல்லா பெண்களும் மறுக்க காதலே வேண்டாம் என்கிற முடிவுக்கு வருகிறார். ஷைலஜாவைப் (கீர்த்தி சுரேஷ்) பார்த்ததும்  முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் காதலிக்கத் துவங்குகிறார். இந்தக் காதல் இணைகிறதா என்ற இன்னொரு ரொமாண்டிக் காமெடி படம் தான் நேனு ஷைலஜா. வழக்கமான அதே பழைய கதை தான் இருந்தாலும் புது காட்சிகள், காமெடிகள் என சுவாரஸ்யமாக்கியிருந்தார் இயக்குநர் கிஷோர் திருமலா.

6.அ ஆ:

இது த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஸ்பெஷல்! சுலோசனா ரானி எழுதிய மீனா நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு 1973ல் கிருஷ்ணா, விஜய நிர்மலா நடிப்பில் உருவான படம் மீனா. அதே நாவலைத் தழுவி கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு 'அ ஆ'வாக இயக்கினார் த்ரிவிக்ரம். அனுஷ்யா ராமலிங்கம் (சமந்தா), ஆனந்த் விஹாரி (நிதின்) இருவரின் காதல் தான் பிரதான களம். சமந்தாவுக்கு, அம்மா நதியாவின் கரார்தனம் பிரச்சனை, நிதினுக்கு குடும்ப சுமை, கடன் பிரச்சனை. இருவரின் குடும்பத்துக்கும் இடையில் உள்ள சில பிரச்சனைகள் இவை எல்லாம் தாண்டி எப்படி இருவரும் இணைந்தார்கள் என்ற ரொமாண்டிக் காமெடி தான் படம். ஃபேமிலி செண்டிமென்ட், காமெடி, ரசனையான வசனங்கள் என தனது ட்ரேட் மார்க் களத்தில் வழக்கமான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படம். 

5.நானாக்கு ப்ரேமதோ | ஜனதா கேரேஜ்

மெனக்கெடல் ஏதும் இல்லாமல் ஒரு மாஸ் ரிவென்ஞ் கதை பண்ணுவது இயக்குநர் சுகுமாருக்கு அலுப்பான விஷயம். முந்தைய படமான 'நேனொக்கடினே'வில் கூட ரிவென்ஞ் கதையை த்ரில்லரில் கொடுக்க முயற்சி செய்திருப்பார். நானாக்கு ப்ரேமதோவும் வித்தியாசமான முயற்சியே. தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி தலைமறைவு வாழ்க்கை வாழச் செய்த வில்லனைப் பழிவாங்கும் மகன் இது தான் ஒன்லைன். இந்த சாதாரண கதையில் 'பட்டர்ஃப்ளை தியரி' ஹீரோ, 'மைண்ட் கேம்' வில்லன் என சில புதுவிஷயங்களைக் கொடுத்து அசத்தியிருப்பார். இது ஓடாமல் போகக் கூட வாய்ப்புண்டு என்கிற அபாயம் இருந்தும் தனது 25வது படமாக இதைத் தேர்வு செய்த ஜுனியர் என்.டி.ஆரின் தைரியம் வரவேற்கப்பட வேண்டியது.

சென்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து மசாலா படம் கொடுப்பதில் கொரட்டல சிவா கில்லி. இயற்கையை நேசிக்கும் இளைஞர் ஜுனியர் என்.டி.ஆர், மனிதர்களை நேசிப்பவர் மோகன் லால். மோகன் லாலின் தம்பி மகன் தான் ஜூனியர் என்.டி.ஆர். இதை எந்த ட்விஸ்ட்டாகவும் வைக்காமல் முன் கூட்டிய சொல்லியிருப்பார். அதன் பின் வழக்கமாக, அநியாயத்தை தட்டிக் கேட்கவே பிறப்பெடுத்த ஹீரோ என்கிற பாணியில் படம் சென்றாலும் கொஞ்சம் நாகரீகமான மசாலா படமாக இருந்தது. நல்ல வசூலும் பெற்றது. 

4.சோகாடே சின்னி நாயினா:

மகன் நடித்துக் கொண்டிருக்கும் சமகாலத்திலேயே ஸ்கோர் செய்யும் தந்தை நடிகர் லிஸ்டில் நாகர்ஜுனாவுக்கு எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. சூப்பர் நேச்சுரல் வகைப் படங்கள் பாதிக்கும் மேல் பயமுறுத்துவதற்கான ஏற்பாடாக இருக்கும். ஆனால் இதில் ஆவியை வைத்து கல்யாண் கிருஷ்ண குரசாலா ஆடியிருக்கும் ஆட்டம் வேறு வகை. இறக்கும் வரை ப்ளே பாயாக வாழ்ந்த பங்கராஜுவின் மகன் ராமூவுக்கு (இரண்டுமே நாகர்ஜுனா தான்), பெண்கள் மேல் ஆர்வமே இல்லாமல். சமத்துப் பையன் என நினைத்து சீதாவுக்கு (லாவண்யா திரிபாதி) திருமணம் செய்து வைக்கிறார் தாய் சத்யபாமா (ரம்யாகிருஷ்ணன்). மனைவியிடம் கூட நெருங்க தெரியாதபடி வளர்ந்திருக்கிறான் மகன் என அப்போது தான் தெரிகிறது. இதனால் நாகர்ஜுனாவை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருகிறார் லாவண்யா. இவர்கள் பிரிவை விரும்பாத ரம்யாகிருஷ்ணன், இறந்த கணவர் நாகர்ஜுனாவின் புகைப்படம் முன் புலம்ப ஆவியாக வருகிறார் நாகர்ஜுனா. மகன் நாகர்ஜுனாவின் பிரச்சனையை, அப்பா நாகர்ஜுனா எப்படி தீர்க்கிறார் என்பது கதை. மகன் ரோலைவிட, ப்ளே பாய் அப்பாவாக அசத்தியிருப்பார் நாகு. கூடவே நாகர்ஜுனா, ரம்யாகிருஷ்ணன் ரொமான்ஸும் செம!

3.ஜோ அச்யுதாநந்தா:

இயக்குநர் ஸ்ரீனிவாஸ் அவசரலா கொஞ்சம் தனிரகம். சாதாரணமான படத்தையே கொஞ்சம் விஷேசமான மேக்கிங்கில் தருபவர். அண்ணன், தம்பி இருவரும் ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள். அந்தப் பெண் வேறு ஒருவனைக் காதலிக்கிறாள். சில வருடங்களுக்குப் பிறகு இருவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது. மீண்டும் அந்தப் பெண்ணைச் சந்திக்க நேர்கிறது. இதனிடையில் பல மாற்றங்கள், நெருங்கிய நண்பர்களாக இருந்த சகோதரர்களுக்கு இடையில் சின்ன இடைவெளியும் கொஞ்சம் பகையும் உண்டாகியிருக்கிறது. இடைவெளி குறைந்து பகை மீண்டும் பாசமாகிறது. எப்படி என்பது ஸ்ரீனிவாஸின் காமெடி கலந்த ட்ரீட்மெண்ட்!

2.ஷணம்:

அமெரிக்காவில் பொறுப்பான வேலை ஒன்றில் இருக்கும் ரிஷிக்கு தன் முன்னாள் காதலியிடமிருந்து போனில் அழைப்பு வருகிறது. அவசர அவசரமாக இந்தியா வந்து அவளை சந்திக்கிறான். அவளுக்கு திருமணமாகியிருக்கிறது, குழந்தை கூட இருக்கிறது என சொல்கிறாள். அந்த குழந்தையைத் தான் இப்போது காணவில்லை. குழந்தையைக் கண்டுபிடிக்கச் சொல்லி ரிஷியிடம் உதவி கேட்கிறாள். ஆனால், குழந்தை கடத்தப்பட்டதற்கான அடையாளம் இல்லை, கடைசியாக குழந்தை எங்கு இருந்தது என்ற தடையமும் இல்லை, மொத்தத்தில் குழந்தை இருந்ததற்கான அடையாளமே இல்லை. இருப்பது குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று தான். ஆனாலும் அவன் காதலி மேல் இருக்கும் நம்பிக்கையில் குழந்தையைத் தேடிச் செல்லும் த்ரில்லரே கதை. புதுமுக இயக்குநர் ரவிகாந்த் நல்ல வரவு.

1.பெல்லி சூப்புலு:


தெலுங்கு சினிமாவிலும் புது அலை இயக்குநர்களின் வருகை ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி தான் முன்னால் சொன்ன ஜோ அச்யுதானந்தா, ஷனம் போன்ற படங்கள். அதில் ஃபைன் குவாலிட்டி பெல்லி சூப்புலு. இயக்குநர் தருணின் நண்பருக்கு நிஜமாகவே நடந்த சம்பவம் தான் படத்தின் ஆரம்பப்புள்ளி. பெண்பார்க்க செல்லும் பிரசாந்தும் (விஜய் தேவரகொண்டா), மணமகள் சித்ராவும் (ரித்து வர்மா) ஒரே அறைக்குள் மாட்டிக் கொள்ளும் படி ஆகிறது. இருவரும் தங்களைப் பற்றி விவரங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது திடீரென மாப்பிள்ளை வீட்டாரால் கதவு திறக்கப்படுகிறது. "நாம போகவேண்டிய வீடு பக்கத்து தெருல இருக்கு, கிளம்புடா" என விஜயை அழைத்துச் செல்கிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகள் இன்னும் அழகு. இயல்பாக ஒரு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏக குஷி. 'எ ஜெம் ஆஃப் எ பிலிம்' என விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. 

- பா.ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்