‘விஜய் படத்தில் ஜோதிகாவா..?!?, இல்லைங்க..!’

விஜய்யின் 60வது படமான ‘பைரவா’ பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், தற்போது விஜய்யின் அடுத்த படத்திற்காக அப்பேட்ஸ் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவையெல்லாம் உண்மையா என்று படக்குழுவினர் இதுவரை உறுதி செய்யவில்லை. 

விஜய்யின் 61வது படத்தை, ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லி இயக்குகிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த தகவல்கள் மட்டுமே தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் சில நாட்களாக, இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும், ‘காவலன்’ படத்திற்கு பிறகு விஜய்யுடன் வடிவேலு இணைந்து நடிக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பதாகவும், ‘திருமலை’ படத்திற்கு பிறகு விஜய் படத்தில் ஜோதிகா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் பறந்தன. இந்த படத்தில் ஜோதிகாவிற்கு முக்கியமான வேடம் என்றும் சொல்லப்பட்டது. 

இதனையெல்லாம் உண்மையா என்று கேட்க படக்குழுவினர்களை தொடர்பு கொண்டோம். அவர்கள், “ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் தான் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், யார் இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் முடிவாகும். இன்று வரை அனைத்தும் பேச்சு வார்த்தையில் தான் உள்ளது. இந்த படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்கிற தகவல்களை கேட்கும் போது எங்களுக்கே அது புதிதாகயிருந்தது. இந்த படத்தில் ஜோதிகாவிற்கு எந்த ரோலும் கிடையாது. யாரோ இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று கூறினார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!