Published:Updated:

2016-ல் சொல்லி அடித்த 13 பாலிவுட் படங்கள்! #2016Rewind

Vikatan
2016-ல் சொல்லி அடித்த 13 பாலிவுட் படங்கள்! #2016Rewind
2016-ல் சொல்லி அடித்த 13 பாலிவுட் படங்கள்! #2016Rewind

பயோபிக், உண்மை சம்பவங்கள், பெண் பிரச்னைகள் பற்றிப் பேசும் படங்கள் என இந்த வருட பாலிவுட் சினிமாக்கள் ரொம்பவே ஸ்பெஷலானது. நிறைய அழகான, அர்த்தமுள்ள படங்கள் வந்திருந்தது. அவற்றில் தவறவிடக் கூடாத இந்திப் படங்கள் பற்றி...

தோனி:

பெரிய எதிர்பார்ப்பு கிளப்பி அது அடங்குவதற்குள் படமும் வெளியாகி பக்காவான வரவேற்பு பெற்ற படம். இது முழுமையான பயோபிக் கிடையாதே, இயக்குநர் நீரஜ் பாண்டே இப்படி செய்திருக்க வேண்டாம் என பல எதிர் குரல்களும் இருந்தது. ஆனால் ஒரு ரஜினி படம் பார்க்கும் குதூகலத்துடன் படம் பார்க்கச் சென்ற அத்தனை பேரையும் அள்ளி அணைத்துக் கொண்டது படம். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், தோனியின் ரசிகர்களுக்கும் இது இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலான படம். மேலும் தோனியையே கண்ணில் கொண்டுவரும் சுஷாந்தின் உடல்மொழி, சில காட்சிகளில் சுஷாந்த் முகத்தை தோனி உடலில் பொருத்தியிருந்த ஜாலங்கள், யுவராஜ் போன்றே தோற்றமளிக்கும் காஸ்டிங் தேர்வு என படத்தில் 'செம' சொல்ல வைக்கும் ஸ்பெஷல் காரணிகள் நிறைய!

ஃபேன்:

மாஸ், மசாலா தாண்டி புதிய மற்றும் நல்ல விஷயத்தை ஷாரூக்கான் கையிலெடுப்பது அதிசயிக்கத்தக்க நிகழ்வு. அந்த விதத்தில் ஷாரூக் நடித்த ஃபேன் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பாலிவுட் படம். இரட்டை வேடம், மேக்கப் மெனக்கெடல், டெக்னிகல் சமாசாரங்களை ஒதுக்கி வைத்துவிடலாம். அதிதீவிர ரசிகர் வட்டம் கொண்ட ஒரு ஹீரோ, தன் மீது உள்ள பிரியத்தால் ரசிகர்கள் செய்யும் கிறுக்குத் தனங்களை சுட்டிக் காட்ட முன் வந்து சிறப்பான விஷயம். சூப்பர்ஸ்டார் ஆர்யனை விரட்டி விரட்டி ரசிக்கும் ரசிகன் கௌரவ். ஒரு கட்டத்தில் சூப்பர்ஸ்டார் இந்த ரசிகனை விரட்டுகிறான். ஏன் எதற்கு என்பதும், அந்த இருவருக்குள் நிகழும் விவாதங்களும் கவனிக்கத் தக்க விஷயம். பெரிய சூப்பர் ஸ்டாரை வைத்துக் கொண்டு மசாலா படம் இல்லாமல் ஒரு நல்ல படம் கொடுத்திருந்தார்  இயக்குநர் மனீஷ் ஷர்மா. இந்த வருடத்தில் மட்டுமல்ல ஷாரூக்கின் திரை வாழ்க்கையிலும், முக்கியமான படம் இந்த ஃபேன். 

சரப்ஜித்:

திடீரென காணாமல் போகிறார் பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சர்ப்ஜித் சிங். தேட ஆரம்பிக்கும் போது அவர் பாகிஸ்தான் சிறையில் இருப்பது தெரியவருகிறது. லாகூரில் நடந்த குண்டுவெடிப்புடன் சர்ப்ஜித்துக்கு தொடர்பு இருக்கிறது எனக் கூறி மரணதண்டனை விதிக்கப்பட்டி ருக்கிறது என்று தெரியவருகிறது. விவசாயியான அவரை ரா உளவாளி என முத்திரை குத்தி, சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள். 23 ஆண்டுகால சிறைவாழ்க்கை அனுபவித்தவர், 2013ல்  சக கைதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்தது பாகிஸ்தான்.

1990ல் நடந்த இந்த நிஜ சம்பவத்தை, அப்படியே திரைக்கதையாக்கினார் இயக்குநர் ஓமங் குமார். சரப்ஜித் நிரபராதி என அவரை வெளியில் கொண்டு வர அவரது அக்கா டல்பிர் கௌர் மேற்கொள்ளும் போராட்டமும், சரப்ஜித் சிறையில் அனுபவித்த கொடுமைகளும் தான் சர்ப்ஜித் படம். சரப்ஜித் கதாபாத்திரத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் உடலை வாட்டி வதக்கி இளைத்து, வருத்தி நடித்திருந்தார் ரன்தீப் ஹூடா. கூடவே, அக்காவாக ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.  

உட்தா பஞ்சாப்:

`2.3 லட்சம் பேர், பஞ்சாபில் ஹெராயினுக்கு அடிமை' என்கிறது பஞ்சாப் ஓபினாய்ட் டிபெண்டன்ஸியின் சர்வே. `இத்தனை பேருக்கும் சிகிச்சை கொடுத்து மீட்க, இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும்' என்கிறது இதே ஆய்வு. இந்த அதிர்ச்சியை அப்படியே, போதைப் பழக்கத்தால் மார்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் இசைக் கலைஞன், போலீஸ், மருத்துவர், கூலித்தொழிலாளி கதாபாத்திரங்களை வைத்து  எளிய கதையில் பொருத்தி போதையின் தீவிரத்தை, உட்தா பஞ்சாப்பில் பதிவு செய்திருந்தார் இயக்குநர் அபிஷேக். முழுக்க போதை பற்றிய படம் என்றாலும், எந்த இடத்திலும் போதைப் பொருள் மீது ஈர்ப்பை பார்ப்பவருக்கு ஏற்படுத்தாதவாறு படமாக்கியிருந்த இயக்குநரின் அக்கறை ஆரோக்யமானது.

ராமன் ராகவ் 2.0:

60களில் மும்பையை அலறவிட்ட சைக்கோ கொலைகாரன் ராமன் ராகவ். அதைத் தழுவி ராமன் ராகவ் 2.0வை இயக்கியிருந்தார் அனுராக் காஷ்யப். ராமண்ணா என்ற சைக்கோ செய்யும் கொலை கேஸ் ராகவ் என்ற போலீஸிடம் வருகிறது. ஆனால், பழக்கப்பட்ட அமைப்பில் இந்த கதையை அனுராக் இயக்கவில்லை. ராமன் தன் சோல்மேட்டைத் தேடுகிறான் அது போலீஸ் ராகவ். இதற்கு இடையில் ராமனின் கோல்ட் ஹார்ட் கொலைகள் நிறைய, அதை அதே வன்மத்துடன் பதிவு செய்திருப்பார். குற்றவாளி ராமன் தன் சோல்மேட்டாக போலீஸ் ராகவை தேர்ந்தெடுக்க பிரத்யேக காரணம் இருக்கும். அதில் முதன்மையானது, ராகவ் போலீஸ் என்ற போதிலும் பெரிய உத்தமனில்லை, கிட்டத்தட்ட நாகரீகமான ஒரு சைக்கோதான் என்று காண்பித்திருப்பார். இப்படிப்பட்ட வினோதமான கதையமைப்பிலிருக்கும் பாலிவுட் படம். ராமனாக நவாஸுதீன் சித்திக்கும், ராகவாக வருணும் அட்டகாசம் செய்திருக்கும் படம்.

அலிகார்:   

அலிகார் இஸ்லாமிய பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் ராமச்சந்திர சிராஸ். அவரை ஓரினசேர்க்கையாளர் என்பதற்காக பணிநீக்கம் செய்கிறது பல்கலைகழகம். அதை எதிர்த்துப் போராடி தன் வேலையைத் திரும்பப் பெற்றார் சிரஸ். இந்த நிஜ சம்பவத்தை அலிகாராக படமாக்கியிருந்தார் இயக்குநர் ஹன்சல் மெஹ்தா. பேராசிரியர் ஸ்ரீனிவாஸாக நடிகர் மனோஜ் பாஜ்பாயும், இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ராஜ்குமார் ராவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். பலத்த சர்ச்சைகளையும் அதே சமயம் - பாராட்டுகளையும் பெற்றது படம்.

ஃபோபியா:

மேஹா (ராதிகா ஆப்தே) சிறப்பான ஓவியக் கலைஞர். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சனை உண்டு. அக்ரோஃபோபியா, அதாவது திறந்த வெளியைக்குறித்த தேவை இல்லா அச்சம். இதற்கு உதாரணமாக, ராதிகா ஆப்தே வீட்டு கதவைத் திறந்து காரிடாரின் கடைசியில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையை போடக்கூட பயப்படும் காட்சியை சொல்லலாம். தனிமையை விரும்பி வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் ராதிகாவுக்கு திடீரென ஒரு பீதி. தன்னைத் தவிர வீட்டில் இன்னொரு நபர் இருப்பதாய் நினைத்து ஏற்படுத்திக் கொள்ளும் பயம் தான் அது. அக்ரோஃபோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேயும் செல்ல முடியாமல், பயத்துடன் வீட்டுக்குள்ளும் இருக்கமுடியாமல் தவிக்கும் ராதிகாவின் அசத்தலான பெர்ஃபமென்ஸ் தான் படமே. இயக்குநர் பவன் கரிபலனி தன் திரைக்கதையால் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வரை சீட் நுனியிலேயே உட்கார வைத்திருப்பார்.

நீர்ஜா | ஏர்லிஃப்ட்:

இரண்டுமே விமானம் பயணம் சார்ந்த இருவேறு பிரச்சனைகள் பற்றி பேசும். கூடவே இரண்டும் நிஜ சம்பவம் என்கிற ஒற்றுமையும் உண்டு. 1986ல் 'பனாம் 73' விமானம் அபு நிதால் என்கிற தீவிரவாத குழுவால் ஹைஜாக் செய்யப்பட, அதிலிருந்து 300க்கும் அதிகமான பயணிகளை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய விமானப் பணிப்பெண் நீர்ஜா பற்றிய படம் தான் நீர்ஜா.

குவைத்தில் வாழும் தொழிலதிபர், ரஞ்சித் கட்டியல், வளைகுடா நாடுகளின் மீதான சதாம் உசேனின் படையெடுப்பு குவைத்திலும் பரவிவிட்டது என்கிற செய்தியை அறிந்ததும் பதறுகிறார். மக்கள் அனைவருக்கும் உயிர் பயம் பரவுகிறது. குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது, என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்க, அவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க முடிவுசெய்கிறார் ரஞ்சித் கட்டியல். தனி ஆளாக இதைச் செய்ய முடியாது. எனவே, இந்திய அரசிடம் உதவி கேட்கிறார். அரசாங்கமோ, `ராணுவ விமானங்களைக்கொண்டு இதைச் செய்ய முடியாது. ஏனெனில், அங்கு வருவதற்கு ராணுவ விமானங்களுக்கு அனுமதி இல்லை’. அதனால் பயணிகள் விமானங்கள் மூலம் 1,70,000  இந்தியர்களை மீட்கிறது. கின்னஸ் சாதனையான இந்த உண்மைச் சம்பவத்தை மிகச் சிறந்த சுவாரஸ்ய சினிமாவாக மாற்றியிருந்தார் இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன். நீர்ஜாவாக நடித்த சோனம் கபூரும், ரஞ்சித்தாக நடித்த அக்‌ஷய் குமாரும் தங்களின் தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பார்கள். மேலும், இரண்டுமே ஒரு சினிமாவுக்கான விறுவிறுப்பையும் கலந்து கொடுத்த விதத்தில் கவனம் பெற்றது. 

அகிரா:

தமிழில் சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மௌனகுரு' படத்தை ரீமேக் செய்யும் யோசனை வருவதற்கு முன் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் விளைவே அகிரா. ஆண் நடித்திருந்த கதாபாத்திரத்தை ஒரு பெண்ணை வைத்து எடுப்பதற்கு கதையில் சின்னச் சின்ன மாற்றங்களுடன் உருவாக்கினார். குறிப்பாக ஒரு பெண்ணால் எப்படி சண்டையிட முடியும்... யதார்த்தத்துக்கு பொருந்தும் படி என்ன காரணம் சொல்ல வேண்டும்... என்கிற கேள்விகளுக்கேற்ப மாற்றங்களை செய்திருந்தார். அகிராவாக நடித்த சோனாக்‌ஷி சின்ஹாவும் பிரமாதமான நடிப்பை கொடுத்திருந்தார். கூடவே அனுராக் காஷ்யப் வில்லத்தனமும் மிரட்டியது.

டங்கல்:

ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகத் பற்றிய பயோ பிக்தான் இது. தன் இரு மகள்களுக்கும் மல்யுத்தம் கற்றுக்கொடுத்து, காமன் வெல்த் போட்டியில் பங்குபெறச் செய்த கதைதான் படத்தின் மையம். பெண்கள் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளை பற்றி பேசும் படம் என்பதால் கூடுதல் கவனம் பெற்றது படம். இன்னொரு காரணம் அமீர் கான் என்ற நடிப்பு அரக்கன். மஹாவீர் சிங்காக மிக இயல்பாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கோச் உட்பட சில விஷயங்கள் பற்றிய தவறான சித்தரிப்புகளால், ஃபிக்‌ஷனும் கலந்தது என தெரிவித்திருக்கலாமே என்கிற குரல்களும் ஒலித்தது. இருந்தாலும் ஒரு ஸ்போர்ட்ஸ் சினிமாவாக நிச்சயம் பலரையும் கவர்ந்தது இந்த டங்கல்.

பார்ச்ட்:

குஜராத்தை மையமாக கொண்ட கதைக்களம். பெண்களுக்கெதிரான  வன்முறைகள், குழந்தை திருமணம், பாலியல் வன்புணர்வு, விதவைகளுக்கான மறுவாழ்வு என்று சிக்கலான பல பிரச்னைகளை பார்ச்ட் பேசியிருந்தது. ராணி, லஜ்ஜோ, பிஜ்லி, ஜானகி என்கிற நான்கு பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து கதை சொல்லியிருந்தார் இயக்குநர் லீனா யாதவ். ரொம்பவே அழுத்தமான விஷயங்களை, கொஞ்சமும் சமரசம் இல்லாமல் சொல்லியிருந்த விதத்துக்காகவே படம் டொரன்டோ வரை சென்றது படம்.  படத்தைத் தயாரித்திருந்தார் நடிகர், இயக்குநர் அஜய் தேவ்கன். 

பிங்க்:

பார்ட்டி ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்யும் ராஜ்வீரை (அங்கத் பேடி) தாக்கிவிடுகிறார் மினல் அரோரா (டாப்ஸி). ராஜ்வீரின் தந்தை செல்வாக்கு உள்ளவர் என்பதால் மினல் மற்றும் அவரது தோழிகளான ஃபலக் அலி (கீர்த்தி குல்ஹரி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா டரியங்) ஆகியோருக்கு சட்ட சிக்கல்கள் வருகிறது. அவர்களுக்கு உதவ வருகிறார் வக்கீல் தீபக் ஷெகல் (அமிதாப் பச்சன்). நியாயம் ஜெயிக்கிறதா என்பது கதை. ஒரு பெண் நோ என்றால் அதன் அர்த்தம் நோ தான் என்கிற விஷயத்தை படம் முழுக்க அத்தனை அழுத்தமாக சொல்லியிருந்தார் இயக்குநர் அனிருத்தா ராய் சௌத்ரி. பெண்களின் சுதந்திரம், அவர்கள் மீது வைக்கப்படும் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் பற்றி அழகாக பதிவு செய்திருந்தது பிங்க்.

டியர் ஜிந்தகி:

முக்கோண காதல், நாற்கரக் காதல் என்ற பிதற்றல் ஃபீலிங்கில் சுற்றிக் கொண்டிருந்த பாலிவுட் கதைகளை ஓரங்கட்டி, எவ்வளவோ சிக்கலான காதல், தொழில், வாழ்க்கை பிரச்சனைகளை சந்திக்கும் ஒருவரின் மனநிலை பற்றி கொஞ்சம் பேசுவோமே என்ற அழைப்பை டியர் ஜிந்தகி மூலம் விடுத்தார் கௌரி ஷிண்டே. மென்டல் ஹெல்த் பற்றிய பேசும் படம் மிக அபூர்வம். அதுவும் பெண்ணின் காதல் உறவு சிக்கல்களைப் பற்றி... வாவ்! "வா... வந்து உனக்கு தகுந்தது போன்ற சேரில் உட்காரு... என்ன பிரச்சனை?" என பேசும் சைக்கியாட்ரிஸ்ட்டாக ஷாரூக் கான் ஸ்கோர் செய்வது போல, குழப்பமான மனநிலையைப் பற்றி தெளிவாக பேசும் பெண்ணாக அலியாவும் அட்டகாசம். பெண் இயக்குநர் என்பதாலேயே படத்தில் விவாதிக்கப்படும் விஷயங்களில் உள்ள உண்மை ஈர்த்துவிடுகிறது. வாழ்க்கைங்கறது... என ஆரம்பித்து வழக்கமான அறுப்புகளைப் போடாமல் ஆரோக்யமான விவாதம், அர்த்தமுள்ள உதாரணங்கள் என படம் பேசுகிற பலவிஷயங்கள், பலருக்கும் உந்துசக்தியாக  இருந்தது.

- பா.ஜான்ஸன்

Vikatan