கல்வி முறை மேல் கல் எறியும் இன்னொரு சினிமா ‘அச்சமின்றி!’ - படம் எப்படி?

அச்சமின்றி விமர்சனம்

பிக்பாக்கெட் விஜய் வசந்துக்கு ஸ்ருஷ்டி டாங்கேவின் மீது காதல். ஸ்ருஷ்டி ஒரு மாணவிக்கு உதவி செய்யப் போய் பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார். நேர்மையான போலீஸ் சமுத்திரக்கனி - தன் பழைய காதலி வித்யாவைப் பார்க்கிறார், திருமணம் செய்யலாம் என்கிற போது வித்யா இறந்துவிடுகிறார். கல்வி அமைச்சர் ராதாரவிக்கும் தனியார் பள்ளி நடந்தும் சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையில் ஒரு பிரச்சனை. இந்த மூன்று பிரச்சனைகளும் இணையும் இடம் கல்வித்துறை. எப்படி...  ஏன்...  எதற்கு என்பதுதான் ’அச்சமின்றி’.

வியாபாரமாகிவிட்ட கல்வி, இதற்கு காரணம் யார்..  எதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என பரபரப்பான, அவசியமான விவாதம் ஒன்றை இந்தப் படத்தின் மூலம் கிளப்ப விரும்பியிருக்கிறார் இயக்குநர் ராஜபாண்டி. ஆனால், வழக்கமான பாடல், காமெடி, காதல் என ரொம்பவே சோதிக்கும் கதை தான் அந்த சீரியஸ் விஷயங்களை மறைத்து முன்னே வந்து நிற்கிறது.

விஜய் வசந்த் தன் முந்தைய படங்களில் நடித்ததில் இருந்து கொஞ்சமும் மாறாமல் நடித்திருக்கிறார். எந்தப் பொறுப்பும் இல்லாமல், ஜாலியாக திருடிக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு அதுவே போதும்தானே! ஸ்ருஷ்டி டாங்கேவிற்கு அந்த வாய்ப்புகூட இல்லை என்பதால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சமுத்திரக்கனி, வாய்பேச இயலாத மாற்றுத் திறனாளியாக வரும் வித்யா, அமைச்சரின் பி.ஏவாக நடித்திருப்பவர் என சிலரின் நடிப்பு கவனிக்கும்படி இருக்கிறது. குறைந்த நேரமே வந்தாலும் சரண்யா பொன்வண்ணனின் கதாபாத்திரமும், அவரின் நடிப்பும் பக்கா.

ராதாரவி - சரண்யா பொன்வண்ணனை வைத்து இயக்குநர் கொடுத்திருக்கும் அந்தத் திருப்பம் நன்று. இருந்தாலும் அதற்காகவே முந்தைய காட்சிகளில் நம் சந்தேகப் பார்வையை திருப்பிவிட வேண்டும் என சில காட்சிகள் வைத்திருப்பது கொஞ்சம் நெருடுகிறது. ஏற்கெனவே மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்துக்கு நடுவே பாடல்கள் மிக அலுப்பு. அதிலும் உயிருக்குப் பயந்து தப்பி செல்லும் வழியில் டூயட் பாடி குத்தாட்டம் போடுவதெல்லாம் முடியல்ல!

பிரேம்ஜி அமரனின் பின்னணி இசை, ஏ.வெங்கடேஷின் கேமிரா இரண்டும் படத்தின் பரபரப்பையும் விறுவிறுப்பையும் கூட்ட முயற்சி செய்கிறது. கல்வி வணிக நோக்கத்துடன் நடத்தப்படுவதற்குக் காரணமும், அதன் பாதிப்புகளும், அதற்கு யார் காரணம் என்கிற விவாதமுமாக அந்த நீதிமன்றக் காட்சி நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது. மக்கள் கவனிக்க வேண்டியதும் கூட. ஆனால், அந்த காட்சிக்கு வருவதற்கு முன் கடக்க வேண்டியிருக்கும் பாடலும், காமெடியும் தான் கொஞ்சம் கடுப்படிக்கிறது. 

நீதிமன்றக் காட்சியில் இருக்கும் சுவாரஸ்யம் படம் முழுக்க இருந்திருந்தால் அழுத்தமாக, பேசியிருக்கும் சொல்ல வந்த விஷயத்தை மற்றவர்களையும் பேசவைத்திருக்கும்!

துருவங்கள் 16 விமர்சனம் படிக்க... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!