இசைத்தென்றல் இசைப்புயல் ஆன கதை! #HBDRahman

இசைப் புயல்

வலிகள் பல இருந்தாலும், எப்பொழுதும் ஒரு மென்மையான மெல்லிய புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்துக் கொண்டிருக்கும். அவன் இசை அதிரடிக்கும்... ஆனால், அவனிடத்தில் அத்தனை ஆர்ப்பரிப்போ, ஆர்ப்பாட்டமோ இருக்காது. அப்பாவின் வழி அவனுக்குள் இசை நுழைந்தது. ஆனால், ஒன்பது வயதிலேயே அவனுடைய அப்பா இறந்துவிட, மூன்று சகோதரிகள் மற்றும் தன் அம்மாவைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு அவன் மீது விழுந்தது. அவனுக்குள்ளிருந்த இசையும், அவனுடைய அந்தப் புன்னகையும் அவனுக்கு நம்பிக்கைக் கொடுத்தன. 11 வயதில் முழுநேர இசைஞனாக தன் வாழ்வைத் தொடங்கினான். தொடங்கிய மிகச் சில வருடங்களிலேயே "அவன்"... மன்னிக்க வேண்டும் இனி அவன், அவனில்லை. அவன் "அவர் ". அவர் பல உச்சங்களைத் தொட ஆரம்பித்தார். அவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்...

குடும்ப வாழ்க்கை:  

ஜனவரி 6,1966 சென்னை மாநகரம் ஈன்றெடுத்த இசைப்புயலின் இயற்பெயர் திலீப்குமார். இவரது குடும்பம் இசைத்துறையை சார்ந்தது. இவரது தந்தை சேகர் மலையாளத் திரைப்படத் துறையில் பணியாற்றியவர். தனது ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்துள்ளார்.ஒருமுறை இவரது சகோதரி நோயால் துன்புற்றிருக்க இஸ்லாமிய நண்பன் கொடுத்த ஆலோசனையில் மசூதியில் சென்று தொழுகை செய்ய, இவர் சகோதரியின் உடல் பூரண குணமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. இவர் தனது பெயரை அன்று முதல் அல்லா ரக்கா ரஹ்மான் என மாற்றிக் கொண்டுள்ளார். 

" எல்லாப் புகழும் இறைவனுக்கே..." அவர் மீது எத்தனை புகழ் வெளிச்சம் வந்தாலும்... ஒருவர் அவரை எந்த வகையில் புகழ்ந்தாலும், இந்த அடக்கமான வார்த்தைகள் தான் அவர் இதயத்தில் இருந்து, உதட்டின் வழி வெளிவரும். இசைப்பற்றுக்கு சற்றும் குறைவில்லாத இறைப்பற்று கொண்டவர். 

ஆரம்பமானது இசைச்சரம்:

உலக இசையுலகில் இத்தனை ஆண்டுகாலம், தொடர்ந்து தரமான, மாறும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற பாடல்களை வழங்கி வருபவர் ரஹ்மானாகத் தான் இருக்கும். "மாற்றங்கள் மாறாது..." என்பதில் பெரும் நம்பிக்கைக் கொண்டவர். 

தன் 11வது வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்து, பின்னர் எம்.எஸ்.வி., குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். டிரினிட்டி இசைக்கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

பின்னர் விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். திரிலோக், சாரதா முதலான நண்பர்களுடன் இணைந்து விளம்பரங்களைத் தயாரித்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் பூஸ்ட், ஏர்டெல், ஏசியன் போன்ற 350-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்தார். அன்றும், இன்றும், என்றும் தீரா தாகத்துடன் தேடி தேடிப் படிக்கும் இசை மாணவனாகவே இருந்து வந்துள்ளார். 

திரையரங்க இசையின் தொடக்கம்:

1992-ம் ஆண்டில் வீட்டிலேயே ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்த இவரது வாழ்வில், மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இவர் இசையமைத்த முதல் படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமான நிலையில் தேசிய விருதையும் பெற்றது. இதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு மின்சாரக்கனவு, 2002-ல் வெளியான லகான் திரைப்படம், 2003-ல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களும் இவருக்கு தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளன.

முதல் படமே ஜப்பானில் வெற்றி பெற்று உலகம் முழுவதும் பிரபலமான நிலையில் 2005-ல் இவரால் தொடங்கப்பட்ட ஏவிஎம் ஸ்டுடியோ ஆசியாவின் நவீனத் தொழில்நுட்ப ரெக்கார்டிங் ஸ்டுடியோவாக உருப்பெற்றது.


சிறப்புப் பட்டங்கள்:

1.இவரது 30 ஆண்டுகால இசைத்துறையைச் சிறப்பிக்கும் வண்ணம் அமெரிக்க பெர்க்லீ மியூசிக் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
2.  பத்ம ஸ்ரீவிருது
3.ஐ.ஐ.எஃப்.ஏ. விருது
4. ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கான ஆஸ்கர் மற்றும் கோல்டன் குலோப் விருது
5. 2010-ம் ஆண்டிற்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது
6. தமிழக அரசு திரைப்பட விருது(6-முறை)
7. ஸ்டன்போர்டு பல்கலைக்கழகச் சிறப்பு விருது
8. ஸ்வரலயா யேசுதாஸ் விருது
9. எம்.பி.அரசின் லதா மங்கேஸ்கர் விருது.
10. ரியோ டி ஜனேரோ 2016-ம் ஆண்டு நிகழ்ந்த ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெற்ற இந்திய அணி நல்லெண்ணத் தூதராக இவர் நியமிக்கப்பட்டமை இவரது சிறப்பை உயர்த்துகின்றது. 

இவரது ஆல்பம் சாங்ஸ்:

1989-ம் ஆண்டு இவர் இயற்றிய முதல் ஆல்பம் தீன் இசை மாலை. அதையடுத்து 1997-ம் ஆண்டு வெளியான வந்தே மாதரம் இவரை உயர்நிலையை அடையச் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான திரைப்படம் அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனையானதும் இதுவே.பின்னர் குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட இன்ஃபினிட் லவ் உலகம் முழுவதும் வெற்றியைத் தந்துள்ளது.மேலும் ஜனகனமன,இக்னைட்டட்  மைன்ட்ஸ், மாதூ ஜே சலாம் போன்ற பல ஆல்பங்கள் இயக்கி அதிலும் சாதனைக் கண்டுள்ளார்.

ஏற்கனவே பெற்ற இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தொடர்ந்து, இந்த வருடம் "பீலே" படத்தில் இடம்பெற்றிருக்கும் "ஜிங்கா ஜிங்கா" பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஆஸ்கர் மேடையில்..." எல்லாப் புகழும் இறைவனுக்கே..." என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக இசை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. 

இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில்... எனக்குப் பின்னணியில் "டப்..டப்..." என்ற லெதர் செருப்பின் காலடிச் சத்தம்..."ம்..ம்..ஆமா.." என்று ஒரு பெண் போனில் பேசிக் கொண்டிருக்கும் சத்தம்...டேபிளில் இருந்து சாவியை உரசியபடியே யாரோ கையிலெடுக்கும் சத்தம்...கை விரல்களில் நெட்டை உடைக்கும் சத்தம்... மர டிரா திறந்து மூடும் சத்தம்... என பல சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் கடந்தபடி காதினுள்... மரியான் படத்தின் " எங்க போன ராசா... சாயங்காலம் ஆச்சு..." பாடலைக் கேட்கத் தொடங்குகிறேன். வெயில் குறைந்த அந்த மாலை நேரத்தில் நான் கடற்கரை மணலில் வேகமாக நடக்கிறேன். உப்புக் காற்று முகத்தை பிசுபிசுப்பாக்கிறது. உப்புத் தண்ணீரின் துளிகள் முகத்தை நனைக்கின்றன. ஈர மண் காலில் படுகிறது. காய வைத்திருக்கும் கருவாட்டின் வாசம் மூக்கில் நுழைகிறது. எல்லாம் மறக்கிறேன்... இசைப்புயலின் வருடும் இசைத்தென்றலில் மூச்சைத் தொலைக்கிறேன். அந்த இசைக்கடலில் அமைதியாய் மூழ்கிப்போகிறேன்... முற்றிலும் மூழ்கும் முன் ஒன்றே ஒன்றை சொல்லியாக வேண்டும்... பிறந்த நாள் வாழ்த்துகள் ரஹ்மான்! 

                                                                                                                        - பிரியதர்ஷினி பாலசுப்ரமணியன்

                                                                                                                          ( மாணவப் பத்திரிகையாளர்)
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!