Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹரிவராசனம் விஸ்வமோகனம்... பிறந்தநாள் வாழ்த்துகள் யேசுதாஸ்...

மலையாளக் கரை இசையுலகிற்கு கொடுத்த வைரம் அந்த இசைமேதை... . அவர்  தனது கம்பீரக் குரலில் ராகங்கள் நதியாகப் பெருகியோட ‘மகாகணபதிம்’ என்று பாட ஆரம்பித்தால் பிள்ளையார்பட்டி ஹீரோ உங்கள் வீட்டிலேயே வந்து அமர்ந்து கொள்வார். ‘கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்’ என்று இவரது குரல் குழைய ஆரம்பித்தால், சரஸ்வதியின் மொத்த அருளும் உங்களுக்குத்தான். ’ஹரிவராசனம்’ என சபரிமலை அய்யனைப் பற்றி புகழ்ந்து பாடும் கானக் குரலோனான அவர்... பிறப்பால் ஒரு கிறிஸ்துவர். அந்த இசையுலக ஜாம்பவான், 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களாலும், தெய்வீக கானங்களாலும் ரசிகர்களைக் குளிர்வித்த பாடகர் ’கே.ஜே.யேசுதாஸ்’.  கல்லையும் கரைய வைக்கும் அந்த கானக் கந்தர்வனுக்கு இன்று 76வது பிறந்தநாள்.  தனது 60 வருட திரையிசை வாழ்வில் எத்தனையோ ரசிகர்களின் இதயங்களை இசையால் நிறைத்தவர் யேசுதாஸ்.

யேசுதாஸ் பிறந்தாள்

இவரது முழுப்பெயர் ‘கட்டசேரி யோசஃப் யேசுதாஸ்’. ஜனவரி 10, 1940ம் ஆண்டு, தென்னை மரங்கள் செழித்து வளரும் கேரள மாநிலம் கொச்சினில் பிறந்தவர். இவரது பெற்றோர் அகஸ்டைன் யோசஃப், அலைஸ்குட்டி. யேசுதாஸின் 1960ல் கல்பாடுகள் என்னும் மலையாளத் திரைப்படம்தான் இவருடைய திரையிசைப் பயணத்தின் முதல்படி. 1964ல் எஸ்.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மை’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடல், தமிழில் இவரது முதல்பாடல். ஆனாலும், கொஞ்சும் குமரி திரைப்படத்தின் ’ஆசை வந்தபின்னே’ முதலில் ரிலீஸ் ஆனது. 

அதன்பிறகு, யேசுதாஸின் இசை வாழ்வில் ஏறுமுகம்தான். நீண்ட திரை வாழ்வில் அவரது பாடல் ஒலிக்காத மொழிகளே இல்லை எனலாம். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், துளு என எல்லா மொழிகளிலும் இவரது குரல் ஒலித்துள்ளது. சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை ஏழு முறை பெற்றுள்ளார் யேசுதாஸ். மாநில அளவில், 45 முறைக்கும் மேல் சிறந்த பாடகர் விருதினைத் தட்டிச் சென்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், சாகித்ய அகாடமி விருதுகளுக்கும் இவர் சொந்தக்காரர்.

1972ம் ஆண்டு, கே.எஸ்.சேதுமாதேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சனும் பப்பையும்’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் ‘மனுஷ்யன் மதங்களே’ என்ற பாடலுக்காக இவருக்கு, சிறந்த பின்னணிப் பாடகருக்காக முதல் தேசிய விருது வழங்கப்பட்டது. படிப்படியாக, ஒரு திரைப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் தேசியவிருதினைப் பெற்றுக் குவிக்க ஆரம்பித்தார் இந்த இசைச்சிற்பி. 2006ம் ஆண்டு...சென்னை ஏ.வி.எம் கலையரங்கம்...அன்று ஒரே நாளில் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கிலும் 16 திரைப்படப் பாடல்களைப் பாடி இமாலய சாதனை நிகழ்த்தினார் கே.ஜே.ஒய். 

தமிழ் திரைப்பட உலகின் இரு சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான குரல் யேசுதாஸுடையது. அவர்களுடைய எல்லாத் திரைப்படங்களிலும் யேசுதாஸின் குரல் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கும். இயக்குனர் சிகரமான கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘தெய்வம் தந்த வீடு’ இன்றும் பலரின் தத்துவப் பாடல் லிஸ்ட்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. 

k j yesudas

யேசுதாஸின் மனைவி பிரபா. எல்லாவிதத்திலும் அவரது வளர்ச்சிக்கு உறுதுணையான துணை. மூன்று பிள்ளைகள் வினோத் யேசுதாஸ், விஜய் யேசுதாஸ், விஷால் யேசுதாஸ். இளைஞர்களை நாள்முழுவதும் முணுமுணுக்க வைத்த பிரேமம் படத்தில் ‘மலரே நின்னை’ பாடலைப் பாடிய பாடகர் விஜய் யேசுதாஸ், இவருடைய இரண்டாவது மகன் என்பது எல்லாரும் அறிந்ததே.

தமிழ் திரைப்பட உலகில் மற்றொரு சிகரம், எஸ்.பி.பாலசுப்ரமணியம். குறைந்த வயது இடைவெளி கொண்ட இவர்களிருவரும் நல்ல நண்பர்கள். வயதில் சிறியவரான எஸ்.பி.பி, பெற்றோருக்கு அடுத்தபடியாக தான் மதிக்கும் மனிதர் யேசுதாஸ் என்பதை நீருபித்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியனின் 50 ஆண்டுகால இசைவாழ்க்கையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற ‘எஸ்.பி.பி 50’ நிகழ்ச்சியில் தனது மனைவி, குடும்பத்துடன் இணைந்து யேசுதாஸுக்கு பாதபூஜை செய்தார் எஸ்.பி.பி. ’என் தாய் மொழி இசை: குரு யேசுதாஸ்’ என்று நெகிழ்ந்தார் எஸ்.பி.பி.

பிறப்பில் கிறிஸ்துவராக இருந்தாலும்,சபரிமலை ஐயப்பன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் யேசுதாஸ். அவருடைய  ‘ஹரிவராசனம்’ பாடல் இன்று வரை சபரிமலையிலும், ஐயப்ப பக்தர்களின் மனதிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது... ஒலித்துக் கொண்டிருக்கும். இசைக்கு என்றுமே மொழி தடையில்லை என்று நீருபித்த கானக் கந்தர்வன், கம்பீரக் குரலோனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

- பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?