Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோதி மதித்துவிடு! - சு.சாமிக்கு ட்விட்டரில் பதிலடி கொடுக்கும் கமல்ஹாசன்!

கமல், சுவாமி, ட்விட்டர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  ஆரம்பம் முதலே தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார் கமல்ஹாசன். இம்மாதம் 13ம் தேதி நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் நடந்த விகடன் விருதுகள் விழாவிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

சுப்பிரமணியன் சுவாமி, தொடர்ந்து தமிழர்களை, ட்விட்டரில் ‘பொறுக்கிஸ்’ என்று விளித்து வருகிறார். தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க (SICA) தமிழ் இணையதள துவக்க விழாவில் பேசும்போது கமல் இதை நேரடியாகவே குறிப்பிட்டிருந்தார்.

“ யாரோ தமிழ்ப் பொறுக்கிகள்னாங்க. நான் தமிழ் பொறுக்கிதான். இங்க பொறுக்கினவன். எங்க பொறுக்கணும்னு தெரிஞ்ச பொறுக்கி. டெல்லில பொறுக்க மாட்டேன்.   என்ன திடீர்னு அரசியல் பேசறேன்னு நெனைக்க வேண்டாம். இது அரசியல் அல்ல. தன்மானம்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் நேற்றைய மெரினா போலீஸ் தடியடி, வன்முறை கமல்ஹாசனை மிகவும் பாதித்துள்ளது. வன்முறை  வெடித்துக் கொண்டிருக்கும்போதே  ’இதுவரை பொதுச்சொத்திற்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும்’ என்று ட்விட்டரில் கருத்து சொன்னார்.

தவிரவும், ‘வன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது’ என்றும், காவல்துறைக்கும், முதல்வருக்கும் காவல்துறையினர் மாணவர்கள்மீது தொடுத்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.   

நேற்றைய நிகழ்வுக்குப் பின்னர், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நேற்று அப்புறப்படுத்தும் வேலையை போலீஸ் செய்யாமல் இருந்திருந்தாலே இவ்வளவு பாதிப்பு நடந்திருக்காது. இந்த போராட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டவர்கள் சோர்வடையவே இல்லை. ஏனென்றால், அவர்கள் ஒரு உணர்வுபூர்வமான விஷயத்துக்கு ஒன்றாக வந்தனர். ஒரு கொண்டாட்டத்துக்கு அவர்கள் ஒற்றுமையுடன் வந்தனர். என் சகோதரர்களின் நடுவில் பல நிர்பயாக்கள் அமர்ந்திருந்தனர். காந்தியின் கனவு நனவாகிய நிகழ்வு இது' என்று கூறினார். 

காவல் துறையினரின் செயலை பற்றி பேசிய கமல், 'காவலர்களே வாகனத்துக்கு தீ வைக்கும் வீடியோவை பார்த்தேன். அது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கான விளக்கம் அளிக்கப்படும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார். மேலும் 'எதையும் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்குப்படுத்தினால் போதும்' என்றார். 

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கும்போது, ‘முதல்வர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டும். அலங்காநல்லூரில் திரும்பி வந்தது அவமானமெல்லாம் இல்லை. அது சரிதான். இங்கே சந்தித்திருக்கலாம் என்று என் கருத்தைச் சொன்னேன். சட்டசபை நடந்த பின், சந்திக்க இருந்ததாகச் சொன்னார். அதற்குள் எல்லாம் நிகழ்ந்து விட்டது” என்றார். 

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் “எப்படி சினிமாக்காரர் கமல்ஹாசன் முட்டாள்தனமாக முதலமைச்சர் போராட்டக்காரர்களை சந்திக்கவேண்டும் என்கிறார்? மதுரையில் என்ன நடந்தது?” என்று கேட்டிருந்தார். 

சுப்ரமணியன் சுவாமி, கமல்ஹாசன்

 

வழக்கமாக இதற்கெல்லாம் பதில் சொல்லாத கமல்ஹாசன், உடனே இதற்கு எதிர்வினையாற்றினார். 

“ஹாய் சாமி.. நான் தமிழ் வாலா. முதல்வர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். காந்தியும்,  ஜூலியஸ் சீஸரும் கூட மக்களிடம் பணிவாகத்தான் இருந்தார்கள். அப்படியிருக்கையில் முதல்வர் ஏன் மக்களை சந்திக்க கூடாது?'  என்று ட்விட்டரில் கேட்டார்.

கமல்ஹாசன், ட்விட்டர், சுவாமி


அதன்பிறகு, சில நிமிடங்களில், ‘சுவாமியின் அவதூறுகளுக்கு பதில் சொல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். தமிழ் பொறுக்கிகள் (சுவாமி தமிழர்களை அழைப்பது இப்படித்தான் ) இதைக் கையிலெடுக்கட்டும். உங்களுடன் காமராஜர், அண்ணா, ராஜாஜி, என் தந்தை உட்பட பலரும் இருக்கிறார்கள். மோதி மதித்துவிடு பாப்பா’  என்று ட்விட்டரில் பொங்கியிருக்கிறார்.

கமல், சுவாமி, ட்விட்டர், Kamal,

அதன்பிறகு, ‘அமைதியொரு பூடகமான சொல். அமைதி,  அது பேசாதிருப்பதா, செயலற்றிருப்பதா?  தமிழில் எழதினாலும் நாட்டுக்கே பொருந்தும்.உலகுக்கும். வெல் தமிழா.  Well ..’ என்றும் ட்விட்டியிருக்கிறார் 

Tamil twitters, kamalhassan


சுவாமிக்கு கமலின் பதிலடியை  பெரிதும் வரவேற்றுள்ள தமிழ் இணையவாசிகள் சுவாமிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 

-பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்