வாவ்... மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ காற்று வெளியிடை டீசர்ல இதைக் கவனிச்சீங்களா..?

வரைகலைஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. “​தனது படங்களின்​ டைட்டில் டிசைன் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுபவர்களில் மணிரத்னம் குறிப்பிடப்படவேண்டியவர்” என்றார் அவர். காற்றுவெளியிடை படத்தின் டைட்டில் போஸ்டருடன் ரிலீஸான போதே ஆஹா என யோசிக்க வைத்தார் மணிரத்னம்.

காற்று வெளியிடை, மணிரத்னம், கார்த்தி, ஏ.ஆர்.ரஹ்மான், Kaartu veliyidai

அதென்ன காற்று வெளியிடை? நாயகன் பைலட். விமானம் காற்று வெளியிடையில்தான் பறக்கிறது அல்லவா... போதாதற்கு காற்று வெளியிடை கண்ணம்மா என்று பாரதியார் வரிகள் காதலுக்கும் பொருந்துவதால் அந்தத் தலைப்பு என்கிறார்கள். மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ என்றாலே எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்துக்கு எகிறும். இளைஞர்களை கிறுகிறுக்க வைத்த ஓகே கண்மணிக்குப் பிறகான படம் என்பதால் எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பு வேறு.

படத்தின் போஸ்டர் வெளியானபோதே கார்த்தியா இது என்று கேட்கவைத்தார். அத்தனை ஸ்லிம்மாக இருந்தார். ஒரு போஸ்டரில் லைட்டான தாடியோடி இருக்க,  இன்னொன்றில் க்ளீன் ஷேவில் கவர்ந்தார். கார்த்தி நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்ததும் மணிரத்னத்திடம்தான் சேர்ந்தார். ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை மறுத்து அதே படத்தில் அவருடன் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஏற்கெனவே நியூயார்க்கில் ஃப்லிம் மேக்கிங் கோர்ஸ் முடித்தவருக்கு இயக்குநராகத்தான் ஆசை இருந்தது. ஆனால் பருத்தி வீரனின் வெற்றி, கார்த்தியை நடிகராக மாற்றிவிட்டது. ஆய்த எழுத்து படத்தில் தலைகாட்டினாலும், ஹீரோவாக மணிரத்னத்துடன் இணையும் படம் என்பதால் இருவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.  கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைதரி நடித்திருக்கிறார். முதன்முறையாக மணிரத்னத்துடன் கைகோத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. 

படத்தின் டீசர் இதோ:

இதை டீசர் என்று சொல்லாமல் Glimpse என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு படத்தின் ஒரு பார்வை என்று அர்த்தம். கார்த்தியின் குரலில் காற்று வெளியிடை கண்ணம்மா என்று ஆரம்பிக்கிறது படத்தின் டீசர். ஆரம்ப ஷாட்டில் காண்பிக்கும் சாலை ‘வாவ்... எந்த லொக்கேஷன் இது’ என்று கேட்க வைக்கிறது. பனிக்காற்று பறக்க ஹீரோயின் ‘வான் வருவான் வருவான்...’ என்று பின்னணி ஒலிக்க, பார்வையை தவழ விட, நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்று முடிக்கிறது குரல். 

இதில் கார்த்தியைக் காண்பிக்கவே இல்லை.. கவனித்தீர்களா? வான் வருவான் - என்று பைலட்டையும் குறிக்க எழுதியிருப்பதை கவனித்தீர்களா? முடிவில் படத்தின் ஒரு பாடலை பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கும்போதே (அதாவது 1ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு) வெளியிட இருப்பதாய் ஒரு வரி போட்டு, ஏ.ஆர்.ரஹ்மானின் கையெழுத்தையும் போட்டிருக்கிறார்கள். வருவான் என்பது ஹீரோவையா, ஏ.ஆர்.ரஹ்மானையா என்று குதூகலிக்க வைத்திருப்பதைக் கவனித்தீர்களா?

ஒரு விஷயத்தை இந்த டீசர் தெளிவாகச் சொல்கிறது. Yes. The King Mani Rathnam on his way!  

-பரிசல் கிருஷ்ணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!