ஒரே ஒரு அறைக்குள் எடுக்கப்பட்டு... உலகையே திரும்பவைத்த உலக சினிமாக்கள்! #MustWatchMovies | Successful Single room movies

வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (02/02/2017)

கடைசி தொடர்பு:12:11 (02/02/2017)

ஒரே ஒரு அறைக்குள் எடுக்கப்பட்டு... உலகையே திரும்பவைத்த உலக சினிமாக்கள்! #MustWatchMovies

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே ஒரு அறைக்குள் மட்டுமே எடுக்கப்பட்ட சினிமா என்ற வியாபாரத்துடன் களமிறங்கவுள்ளது தாயம் திரைப்படம். இதுபோல் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிசோதனை முயற்சி செய்யும் முன்னரே, ஹாலிவுட்டில் சிங்கிள் ரூம் மூவீஸ் மிகப் பிரபலம். தாயம் வரும் முன்னர் அது அவுட் ஆஃப் ஃபேசனாக கூட ஆகியிருக்கும். இந்த கான்செப்டை மையப்படுத்தி வரவேற்பைப் பெற்ற சில உலக சினிமாக்கள் பற்றிய பதிவுதான் இது.

உலக சினிமா

சாதாரண சினிமாக்களைவிட பட்ஜெட் விஷயத்தில் நிறைய சாதகங்கள் உடையது இந்த டைப் படங்கள். ஆனால், ஒரே அறைக்குள் உங்களுக்கு அலுப்பு தட்டாமல் கதையை சொல்ல வேண்டும் என்கிற சவாலும் இருக்கும். அந்த வகையில் ஒரே அறைக்குள் எடுக்கபட்டிருந்தாலும் சுவாரஸ்யத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாத படங்கள் இவை. 

 

டெவில்(DEVIL):

Single room movies

செம கான்செப்ட்! நரகத்திலிருந்து நேராக ஒரு லிஃப்ட் வருகிறது. அந்த லிஃப்ட்டில் சாத்தான் இருப்பது தெரியாமல் ஒரு மனித கூட்டம் (ஃபாரின்லையும் லிஃப்டுனா கூட்டம் தான் போல) நுழைந்து விடுகிறது. அதன் பிறகுதான் தெரிகிறது... தங்களோடு லிஃப்டில் ஒரு சாத்தானும் இருக்கிறது என்று. பேய் இருப்பது அவர்களுக்குத் தெரிந்தவுடன் தொடங்கும் பரபரப்பு படம் முடியும் வரைக்கும் இருக்கும்!  

தி கில்லிங் ரூம்(THE KILLING ROOM)

the killing room

ஒன்றும் தெரியாத அப்பாவி ஏழை மக்களை, சட்டவிரோதமாக மருந்துகள் சோதிக்கப் பயன்படுதிகொள்ளும் ‘ஈ’ படத்தை மறந்திருக்க மாட்டீர்கள். அதே போன்ற கதை. மருத்துவ பரிசோதனைகளை அரசின் உதவியுடன் 50களில் நடத்திக்கொண்டு இருந்ததை மையமாக வைத்து எடுக்கபட்ட படம். தேசப் பாதுகாப்பு என்ற ஒரு காரணத்தை மட்டும் வைத்துகொண்டு ஒன்றும் தெரியாத அநாதை மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் அறைதான் இந்தக் ‘கில்லிங் ரூம்’  அரசின் கொடூரமான முகத்த தில்லாகக் காட்டிஇருக்கிறார்கள்.

 

அன்நோன் (UNKNOWN)

unknown

ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற ஐந்து நபர்கள் ஒரு வீட்டின் அண்டர்கிரௌண்ட் அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு, தான் யார் என்ற பிரக்ஞை சுத்தமாக இல்லை. நினைவுகள் அனைத்தும் மின்னல்கள் போல் அவ்வப்போது வந்து போகிறது. இந்த நிலையில் அவர்களில் யார் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் எனக் கண்டு பிடித்து கெட்டவர்களை கொன்றால் இங்கிருந்து தப்பிக்கலாம் என்ற அசரீரி கேட்கிறது. கெட்டவன் யாரென்று கண்டு பிடித்தார்களா.. கொலை நடந்ததா.. மற்றவர்கள் தப்பித்தார்களா.. அந்த அசரீரி யார்... என்ற பல கேள்விகளுக்கு பதில்களை ஒரே அறையில் காட்சிப்படுத்திக் கலவரப்படுத்திய  தெறி த்ரில்லர் மூவி!  

 

எக்ஸாம்(EXAM)

Exam

ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர பலகட்டத் தேர்வுகளுக்கு பிறகு தேர்வாகிறார்கள் எட்டு பேர். அவர்கள் எட்டு பேரும் ஒரு அறைக்குள் தேர்வெழுத அடைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தால் போதும். ஆனால், அந்தக் கேள்வித் தாளில் எந்தக் கேள்வியும் இல்லை. அங்குள்ள காவலரிடம் பேச கூடாது, அது இது என்று பல விதிகள். அவர்கள் எல்லோரும் என்ன செய்தார்கள் என்பதை 2 மணி நேர விறுவிறு திரைக்கதையில் சொன்ன படம்.  ஒரே அறையில் அவர்களுக்குள் போட்டி பொறாமையால் நடக்கும் சண்டை , பின் எல்லோரும் சேர்ந்து பதில் கண்டுபிடிப்பது என பரபரப்புக்கு பஞ்சமில்லை.

 

பரிட்(BURIED)

BURIED

தூக்கத்தில் இருந்து கண் விழிக்கிறீர்கள். ஒரே இருட்டு. கை கால்களை அசைத்து பார்கிறீர்கள். எழ முடியவில்லை. ஒரு சிறிய பெட்டிக்குள் அடைக்கபட்டுளீர்கள். சிறிது சிறிதாக தெரிகிறது, நீங்கள் இருப்பது ஒரு சவபெட்டிக்குள். புதைக்கப்பட்டு விட்டீர்கள். இந்த நிலையில் இருந்தால். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. ஆனால் இந்த நிலையில் மாட்டிகொண்ட ஒருவன் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறான் அதன் பின் கதை என்ன என்ற  பரபரப்பான த்ரில்லர்தான் இந்தப் படம். படம் பார்க்கும் போது நாமே பெட்டிக்குள் மாடிக்கொண்டதைப் போன்ற பயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

 

ஃபெர்மாட்’ஸ் ரூம் (FERMAT’S ROOM)

FERMAT’S ROOM

இது ஒரு ஸ்பானிஷ் த்ரில்லர். படத்தின் மையக்கரு கணக்கு! உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு கணிதவியலாளர்கள் ஒரு தீர்க்கக் கடினமான கணிதப்புதிரை தீர்க்க வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நால்வரும் ஓர் அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் நால்வரையும் அழைக்க ஒரு பொதுவான காரணம் உள்ளது அது என்ன? அதை அவர்கள் சரியாக கண்டுபிடித்து சொல்லவில்லை எனில் அந்த அறை தானாக நான்கு பக்கமும் அழுத்தி அவர்களைக்  கொன்றுவிடும். அந்த அறையில் இருந்து அவர்கள் எப்படித் தப்பினார்கள என்பதை கொஞ்சமே கொஞ்சம் கணிதத்துடனும், நிறைய த்ரில்லுடனும் கொடுத்த படம்.  

ஹங்கர் (HUNGER)

HUNGER

பசி வந்திட பத்தும் பறந்திடும் என்பார்கள். பசி ஒரு மனிதனை எந்த அளவிற்குக் கொண்டு போகும் என்பதைக் காட்டுவதற்காகவே இந்தபடத்தை எடுத்திருப்பார்கள் போல. வழக்கம் போல ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத ஐந்து பேர் ஒரு பாதாள அறைக்குள் அடைக்கப்படுகின்றனர். அங்கு ஒரு வெட்டுக் கத்தி மற்றும் 30 நாட்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளது. பசி அதிகரிக்க அதிகரிக்க மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை மொரட்டு த்ரில்லராக எடுத்திருகிறார்கள்.

 

போண்ட்டிபூல் (PONTYPOOL)

PONTYPOOL

ஒரே ஒரு அறைக்குள் எடுக்க வேண்டிய படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் இந்த போண்ட்டிபூல்.  ஸோம்பி ஹாரர் வகை படம். ஒரு சிறு கிராமத்தில் உள்ள எஃப்.எம். ஜாக்கி ஒலிபரப்பு அறையிலிருந்தபடி,  ஸோம்பி நோய் பரவுகிறது என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.  அது ஒரு வைரசினால் பரவும் நோய். ஆனால், இந்தப் படத்கின் முக்கிய ட்விஸ்ட் அதுதான். அந்த நோய் எப்படிப் பரவுகிறது தெரியுமா? நாம் யூகிக்க முடியாத ஒரு கோணத்தில் படத்தை முடித்து, தெறிக்க விடுகிறார்கள்.

 

ரோப் (ROPE)

Rope

த்ரில்லர் படங்களின் பிதாமகன் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கினுடையது இந்த ரோப்!  தன் வகுப்பில் தன்னை விட அதிகம் கவனம் ஈர்க்கும் மாணவன் மேல் உள்ள பொறாமையினால் அவனைத் தன் வீட்டிலேயே வைத்துக் கொன்று விட்டு, பிணத்தையும் வீட்டிற்குள்ளேயே ஒளித்து வைத்துவிட்டு - தான் செய்த குற்றம் பெர்ஃபக்ட் க்ரைம் என்பதை நிரூபிக்க -  தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கே பார்ட்டிக்கு அழைக்கும் ஒரு சைக்கோ கொலைகாரனின் கதை! கடைசிவரை சுவாரஸ்யம் குன்றாத இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா?  ஒரு வீட்டுக்குள் எடுக்கப்பட்ட மிக நீளமான திரைப்படம்.

 

ரியர் விண்டோ (REAR WINDOW)

சஸ்பென்ஸ் நாயகன் ஹிட்ச்காக்கின் மற்றொரு அருமையான திரைப்படம் இந்த ரியர் விண்டோ. ஒரு விபத்தில் கால் உடைந்த நிலையில் ஒரு புலனாய்வு புகைப்படக்காரர் தன் வீட்டின் பாலகனியில் அமர்ந்து கொண்டு, கையில் பைனாகுலருடன் அக்கம்பக்கத்து வீடுகளை நோட்டமிடுகிறார். அப்போது எதிர் அபார்ட்மெண்ட் பெண் ஒருவர் கொல்லப்படுவதை பார்க்கிறார். போலிசுக்கு சொல்கிறார் ஆனால் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அதன் பின் அவர் எப்படி உண்மையை வெளியே கொண்டு வருகிறார் என்பது மீதி கதை.

நல்ல பரபரப்பான திரைக்கதை இருந்தால் ஒரே ஒரு அறைக்குள்ளும் அற்புதமான படங்கள் எடுக்கலாம் என்பதற்கு இந்த படங்களே சாட்சி. இது தவிர ரூம், ஃபோன் பூத், 12 ஆங்க்ரி மேன்ஸ் என பல படங்கள் இருக்கிறது. திரைப்பட விரும்பிகளுக்கு இந்த ஜானர் படங்கள் வேறு லெவல் அனுபவமாக இருக்கும்.

- ரா.கலைச்செல்வன்


டிரெண்டிங் @ விகடன்