Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்க வரணும் சிம்பு! #HappyBirthdaySTR

இன்றோடு சிம்புவுக்கு வயது 34. இதிலிருந்து ஒரு வருடத்தைக் கழித்துக் கொண்டால் அது அவரின் திரை உலகப் பயணத்தின் வயது. பொதுவாக ஒரு Star Kid என்றால் அவரது அறிமுகம் மிக எளிதாக இருக்கும், அதைத் தக்க வைப்பது கடினம் என்பது எல்லோராலும் சொல்லப்படும் ஒன்று. உண்மையும் கூட. குழந்தை நட்சத்திரம், நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் இப்போது இசையமைப்பாளரும் கூட என்கிற இவரின் சினிமா வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. 

சிலம்பரசன் சிம்புவா வந்து நின்னார்:

சிம்பு

இதுவரை சிம்பு ஹீரோ ரோலில் நடித்தது 17 படங்கள் (வானம் படத்தையும் சேர்த்து) தான். ஆனால் ‘சிம்புவை மிக அதிக காலமாக தெரியுமே ஆனால் அவர் நடித்தது இவ்வளவுதானா?’ எனத் தோன்றலாம். அதற்கு காரணம் டி.ராஜேந்தர். சிம்புவின் ஒரு வயது முகத்தைக் கூட சற்று சிரமப்பட்டு உங்களால் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். அங்கிருந்து துவங்கி "சொன்னால் தான் காதலா" பாடலில் ஆடிய சிம்புவிலிருந்து 'அச்சம் என்பது மடமையடா' வரைக்குமான முகத்தின் ட்ரான்ஸ்ஃபர்மேஷனையும் நிஜாம் பாக்கு விளம்பரம் போல மனதுக்குள் ஓட்டிப் பார்க்க முடியும். இப்படி ஒருவர் இருக்கிறார் என அடிக்கடி நம் முன்னால் நிறுத்திக் கொண்டே இருந்தார் டி.ஆர். 

சிம்புவுக்கான ஆடியன்ஸ்:

STR

ஆரம்ப காலங்களில் சிம்புவுக்கு ‛விரல் வித்தை’ நடிகர் என்கிற செல்லப் பெயர் மிகப் பிரபலம். 'தம்' படத்தில் புருவத்தில் வளையம் மாட்டியது, அடுத்தடுத்த படங்களில் விரல்களை மடக்கி, சுழற்றி காட்டுவது, மன்மதன் படத்தில் தலையில் Band, வல்லவனில் Arm Band என ஏதாவது செய்து அப்போதைய இளைஞர்களுக்கான ஸ்டைலிஷ் ஐகானாகவே இருந்தார். இதை நெகட்டிவாக எடுத்துக் கொள்ளவும் முடியாது. நம் ஆதர்ச நாயகர்கள் செய்வதை, அணிவதை நாமும் அணிவது வேறு. நம்மைக் கவரும்படியான ஸ்டைலை நம் முன் கொண்டுவந்து படிப்படியாக நம் கவனத்துக்குள் வருவது வேறு. இதை வெறும் கவன ஈர்ப்புக்காக மட்டும் சிம்பு செய்தார் என்று எடுத்துக் கொள்ளாமல், அன்றைய ட்ரெண்டை சிம்பு செய்ய, அதை நாம்   கவனிக்க ஆரம்பித்தோம் என எடுத்துக் கொள்ளலாம். 

சில முக்கிய முடிவுகள்:

Little Super Star

இன்றைக்கும் பல நடிகர்கள் எடுக்கத் தயங்கிய முடிவுகளை மிக சீக்கிரம் எடுத்த விதத்திலும் சிம்பு முக்கியமானவர். தம், அலை, குத்து என ஸ்டீரியோ டைப் காதல் கதைகளாக நடித்துக் கொண்டிருந்தவர் உடனடியாக மன்மதன் படத்துக்கான கதையை எழுதினார். இன்னும் இரண்டு படங்கள் கழித்து 'வல்லவன்' படம் மூலம் இயக்குநராகவும் களம் இறங்கினார். ‘அது இரண்டும் அவ்ளோ சிறப்பான படங்களா’ என்ற விவாதத்தையெல்லாம் விடுங்கள்... அவை இரண்டுமே வளர்ந்து வரும் பீரியடில் அவரால் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள். அது தான் நாம் கவனிக்க வேண்டியது.

ப்யூர் நடிகர் சிம்பு:

VTV

எல்லாம் சரியா இருக்கு, இன்னும் ஏதோ முழுமையாக இல்லையே என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ (நன்றி: கௌதம் மேனன்) வேறு ஒரு சிம்புவை நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. அதற்கு முன்பு கூட சிம்பு நடிப்பில் சில மெனெக்கெடல்களை செய்திருந்தாலும், அது ஒழுங்குபடுத்தப்படாத நிலையிலேயே நின்றது. அதைக் கொஞ்சமாக சீர் செய்து இயல்பான நடிகராக சிம்புவைக் காட்டியது உறுதியாக விண்ணைத் தாண்டி வருவாயா தான். 

'எனக்கு நடிக்கத் தெரியும்ங்க' சிம்பு

iamSTR

இதற்குப் பின் சிம்பு என்ன ரோல் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக பண்ணிடுவார் என்கிற நம்பிக்கை எல்லோருக்கும் வந்தது. அந்த எண்ணம் சிம்புவுக்குள்ளும் இந்தச் சமயத்தில்தான் லைட்டாக எட்டிப் பார்த்திருக்க கூடும். மெதுமெதுவாக படங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. வானம், ஒஸ்தி, போடா போடிக்குப் பிறகு மூன்று வருட இடைவெளி, சில தாமதங்கள் காரணம் என்றாலும் பிரச்னை படம் வரவில்லை என்பது மட்டும் இல்லை. அதற்கு முன் போஸ்டராக மட்டும் வந்த 'வாலிபன்', பட ஸ்டில்களாக மட்டும் வந்த 'கெட்டவன்', டீசராக மட்டும் வந்த வேட்டை மன்னன் என பல படங்கள் துவங்கிய வேகத்தில் நின்றது. பின்னர் சிம்பு ஷூட்டிங் சரியாக வருவதில்லை என்கிற பிரச்சனைகளும் வர ஆரம்பித்தன. "நான் எல்லாமே பண்ணிட்டோம்னு அவருக்குள்ள ஒரு எண்ணம் வந்திடுச்சு. அதனால தான் இப்போ படத்தை கேர் பண்ணிக்கறது இல்ல. ஆனா, நடிக்கறதுக்குன்னு வந்துட்டா எல்லாமே சிங்கிள் டேக் தான்" கௌதம் மேனன் சொன்னது தான் சிம்புவின் நினைப்பும் கூட. அது அவரது செயல்களிலும் எதிரொலித்தது. 

நீங்க வரணும் சிம்பு:

AYM

இப்போது வந்த அச்சம் என்பது மடமையடாவுக்கு வந்த ஆடியன்ஸும் சரி. 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்துக்கு வர இருக்கும் ஆடியன்ஸும் சரி உங்களை ரசிக்க வருகிறவர்கள், வரப் போகிறவர்கள். நல்ல திறமைகள் மிக குறைவாக உள்ள இடம் இது. திறமை இருக்கும் போது, போதும் என்கிற நினைப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மறுபடி நீங்க ஒரு கலக்கு கலக்கணும்... நீங்க வரணும் சிம்பு!

- பா.ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்