வெளியிடப்பட்ட நேரம்: 18:49 (06/02/2017)

கடைசி தொடர்பு:18:49 (06/02/2017)

காற்று வெளியிடை பாடல் வரிகளில் கவர்ந்தது எது? அழகியேவா.. வான் வருவானா?

காற்று வெளியிடை

வியாழக்கிழமை (2 பிப்ரவரி) வெளியானது காற்று வெளியிடை படத்தின் அழகியே பாடல். அர்ஜூன் சாண்டி (Arjun Chandy), ஹரிசரண் (Haricharan), ஜோனிதா காந்தி  (Jonita Gandhi) ஆகியோர் குரலில் வெளியான பாடலுக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான் என்று சொன்னால் ‘அது தெரியாதா எங்களுக்கு?’ என அடிக்க வருவீர்கள்! பாடலை ஆராயலாம்.

பேப்பி.. பேப்பி.. பேபி பேபி என A cappella ஸ்டைலில் துவங்குகிறது பாடல். வெயிட்டிங் ஃபார் என புன்னகை என்று தொடங்கும் வரிகள் பல்லவி முழுவதும் 70S ராக் அண்ட் ரோலை ஞாபகப்படுத்துகிறது. சடாரென்று அழகியே.. அழகியே எனும் மெட்டு, 24 படத்தின் மெய்நிகராவைக் கொஞ்சம் ஞாபகப்படுத்தி விட்டு சடாரென்று ஆங்கிலம் தமிழ் கலந்து வரும் வரிகளில் ‘காதல் வந்தா.. மேட்டர் வந்தா Call அடி’ வரிகளில் கொஞ்சம் திகைக்க வைத்துவிட்டு இடையிசைக்குப் போகிறது பாடல்.

இடையிசை, பஞ்சாப் பாங்க்ரா. பெண்குரலில் நநநா.. நநநா... காவியத்தலைவனின் ஏதோ ஒரு பாட்டைத் தொட்டுவிட்டு சடாரென்று பல்லவிக்குப் பாய்கிறது. சரணத்தின் வரிகளுக்கிடையே குட்டியாய் வரும் அந்த விசில் அழகு! ‘துளி காலம் கேட்டேன் / துளி காதல் கேட்டேன் /துளி காமம் கேட்டேன்’ டிரேட் மார்க் மதன் கார்க்கி வரிகள்!

முதல் ஒரு நிமிடம் வெளியிட்டதில் கவிஞர் என்ற இடத்தில் மதன் கார்க்கி பெயர் மட்டும்தான் இருந்தது. இந்த முழுப்பாடலில் வைரமுத்து, மதன் கார்க்கி என்றிருக்கிறது. மதன் கார்க்கி எழுதிக் காண்பித்து ‘மறுக்காதே நீ.. மறக்காதே நீ’ என்பது போன்ற வரிகளை வைரமுத்து இணைத்திருப்பார் என்று - என் சௌகர்யத்திற்கு - நினைத்துக் கொள்கிறேன். இல்லை... இளமை வரிகளெல்லாமும் அவர் எழுதியிருக்கக் கூடும்! முதன்முறை கேட்கும்போது ஒரு சில ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களின் கலவையாகத் தோன்றினாலும், மீண்டும் மீண்டும் கேட்கும்போது ஒவ்வொரு வரியின் மெட்டிலும் ஏதோ ஒரு புதுமுயற்சி செய்திருப்பதை உணரலாம். உதாரணத்திற்கு... இளமைத்துள்ளலாய் வரும் பாடலின் சரணத்தில் சடாரென்று, ‘துளி துளிரே’வில் ஆரம்பித்து ‘எந்தன் அழகியே’ வரை காதலியிடம் கெஞ்சும் காதலனின் உணர்வை மெட்டிலேயே உணர்த்தியிருக்கிறார். உடனேயே... இளமைக் குறும்புடன் ‘நீநீநிந்நீ.... நீநீந்நீந்நீ...’ என்று துள்ளலிசைக்குத் தாவுகிறது பாடல். 

பாடல் வரிகள்:-

Waiting for a புன்னகை...சிரிடீ
காணவில்லை heart beat...திருடி
அடடா! நான் கவிஞன்
உனைப் பார்த்து கெட்டுப்போன கவிஞன்
honestஆ நான் பேசவா?
இல்ல இது போதுமா?
ஹோ my darling!
நாங்க coming!
புது புது கணக்கெல்லாம் pending ஓ?
chorusஆ நான் கேக்கவா...
yesஆ yesஆ noவா yesஆ..
அழகியே!
marry me marry me
அழகியே!
Flirt With Me...
Get High With Me...
அழகியே
கோவம் வந்தா
கூச்சம் வந்தா 
don't worry 
அழகியே  ஏ அழகியே 
அழகியே
marry me marry me அழகியே
Flirt With Me...
Get High With Me...
அழகியே
காதல் வந்தா
matter வந்தா
callஅடி 
அழகியே ஹே.. அழகியே ஹே..
யாரும் கேட்கா
எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை?
அதைத் தந்தால் நன்றி 
பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி
துளிதுளிரே!
துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே...!
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே!
நீ  நீ நீ நிந்நீ நீந்நீ... நீ நீ நீ!
(அழகியே)​

-----------------------------------------
இன்று, சில நிமிடங்களுக்கு முன், படத்தின் முன்னோட்டத்தில் கேட்ட ‘வான்.. வருவான்.. வருவான்’ பாடலின் வரிகளை மட்டும் வெளியிட்டிருக்கிறார் வைரமுத்து. 

வரிகளை வெளியிட்டு அவர் எழுதியிருப்பது: மணிரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் என்ற எங்கள் கூட்டணி கால் நூற்றாண்டைத் தொட்டிருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது திகைப்பாக இருக்கிறது. 

மதித்தல் – புரிதல் – அன்பு செலுத்தல் - கலையை முன்னிட்டு மட்டும் கருத்துவாதம் நிகழ்த்தல் என்ற குணங்களால் பணியாற்றுகிறோம். எங்களால் இயன்ற அளவுக்குத் தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறோம். தமிழர்களின் வாழ்த்துக்கள் இன்னும் எங்களை வளரவைக்கும் என்று நம்புகிறோம். 

காற்று வெளியிடை எங்கள் கூட்டணியின் அடுத்த படைப்பு. கதாநாயகன் விமானம் ஓட்டியாய் இருப்பதனால் வான் என்ற சொல்லை வைத்துக் காதலில் விளையாடமுடியுமா என்று இயக்குநர் கேட்டார். முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். வாசிக்கவும் யோசிக்கவும் வரிகளைத் தருகிறேன். கானத்திற்காகச் சில நாட்கள் காத்திருக்க மாட்டீர்களா? நன்றி.


*****
வான்
வருவான்
தொடுவான்

மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்

அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்

கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
*
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்

என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்

கண்கள் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால்
கணத்தில் கரைவான்

---

வரிகளை ஒப்பிட்டால், அழகியே முழுக்க முழுக்க இளைஞர்களின் மன ஓட்டமாக இருக்கிறது. சில வார்த்தைகளை துணிந்து எழுதியிருப்பதும் தெரிகிறது. வான் வருவான் - சர்வ நிச்சயமாக பெஸ்டாக இருக்கிறது. காதலிக்கும் பெண்களின் உணர்வுகளை நேர்மையாக, அழகாக, கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார் கவிப்பேரரசு. ’அருகில் நிமிர்வான்.. தொலைவில் பணிவான்’, ‘என்னோடிருந்தால் எவளோ நினைவான் / அவளோடிருந்தால் எனையே நினைவான்’ போன்ற வரிகளில் அக்மார்க் கவிப்பேரரசு முத்திரை. பாடல் பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 

பைலட்டான காதலனின்  நினைவில் பாடும் பாடலின் ஒவ்வொரு வரிகளையும் வான் வான் என முடித்திருப்பதைப் பாராட்டாமல் எப்படி இந்தக் கட்டுரையை முடிப்பது?

காற்று வெளியிடைக்கு காத்திருப்போம்!

-பரிசல் கிருஷ்ணா

நீங்க எப்படி பீல் பண்றீங்க