டீன் ஏஜ் காதலர்களை பொறாமை கொள்ள வைத்த படம்! #4YearsofPannayarumPadminiyum

அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, டிவியில் சேனலை மாற்றுகிறோம். நமக்குப் பிடித்த பாடல் ஒளிபரப்பாகிறது. பாடல் முடிந்ததும், படத்தின் காட்சிகள் வந்ததும்தான் படம் ஒளிபரப்பாவது தெரிகிறது. கொஞ்ச நேரம் பார்க்கிறோம். அந்தக் காட்சிகள் பிடித்துபோக, தலையணையை முதுகில் சாய்த்துக்கொண்டு முழுப்படத்தைப் பார்த்துவிட்டே எழுகிறோம். விளம்பர இடைவெளியில் ஒரு கேள்வி எழுகிறது. இந்தப் படத்தை எப்படி மிஸ் செய்தோம்? இப்படி நினைக்க வைக்கும் படங்களின் பட்டியல் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அதில் அநேகரின் பட்டியலில் 'பண்ணையாரும் பத்மினியும்' நிச்சயம் இருக்கும். இந்தப் படத்தின் நான்காவது பிறந்த நாள் இன்று.

பண்ணையாரும் பத்மினியும் படம்

தங்களால் சாத்தியமாக்கிக் கொள்ள முடிகிற சில ஆசைகளைக் கூட சில சமயத்தில் மனிதர்கள் நிறைவேற்றிக்கொள்வதில்லை. அதற்கு ஏதேதோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், அந்த ஆசை நிறைவேற தானாக ஒரு வாய்ப்பு கிடைக்கிற போது, அவர்கள் அடையும் உற்சாகம் எல்லையற்றது. கிராமத்து பண்ணையாருக்கு, ஒரு கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. ஆனால் ஏனோ அவர் வாங்கவில்லை. நண்பரின் கார் சில நாட்கள் பண்ணையார் வீட்டில் இருக்கும் சூழல். அதுவும் அவர் விரும்பிய பத்மினி கார். விடுவாரா? காரை பாதுகாப்பது மட்டுமல்லாது நேசிக்கவும் செய்கிறார். 

எப்போதேனும் பேருந்து வரும் அந்த ஊரில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, நோயாளியை அழைத்துச் செல்ல காரைக் கொடுக்கிறார். அதை ஓட்டுவதற்காக கதையில் நுழைகிறார் கதாநாயகன். டிராக்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் நாயகனுக்கு கார் ஓட்ட கசக்கவா போகிறது. அப்போது ஆரம்பிக்கும் பண்ணையாரின் கார் பயணம் இன்னும் சில நிகழ்ச்சிகளாக தொடர்கிறது. அவரது கார் மீதான காதல் நீள்கிறது. 

பண்ணையாரின் மனைவிக்கு ஓர் ஆசை.  தன் கணவன் காரை ஓட்டிச் செல்ல, அதில் தான் அமர்ந்து பயணிக்க வேண்டும். அதுவும் தன் திருமண நாளில் நடந்தால் இன்னும் மகிழ்ச்சி என நினைக்கிறார். அந்தப் பயணத்திற்கு பண்ணையார் எடுக்கும் முயற்சிகள் ஒரு பக்கம், தன் வேலை போய்விடுமோ என நாயகனின் ஆதங்கம் ஒரு பக்கம் என செம... காரை விட்டுச் சென்ற நண்பரின் மகள், பண்ணையார் வீட்டுக்கு வர, எல்லோருக்குள்ளும் கார் தங்களை விட்டுப் போகப்போகிறது என்ற சோகம். பண்ணையாரின் மனநிலையை அறிந்த நண்பரின் மகள், அவரிடமே காரை விட்டுச் செல்கிறாள். 

பண்ணையாரும் பத்மினியும் படம்

இந்தப் படத்தில் எல்லோராலும் சிலாகிக்கப்பட்டது பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் இடையேயான அன்யோன்யமான காட்சிகள்தான். இருவருக்கிடையே பாசாங்கற்ற அன்பு படம் முழுவதும் தவழ்ந்தோடும். ஒருவரின் நடவடிக்கைகளில் மற்றவர் அக்கறையோடு கவனிப்பதும், அதைப் பார்த்து ஏதேனும் கேட்டால், கேலியாக ஏதோ சொல்வதும்,  அதற்கான எதிர்வினை இன்னும் கேலியாக வர, பூரணமான நேசத்தில் இருவரும் உழல்வதாக உணர முடியும். சின்னக் கோபமும், அதை உடைக்க இருவருமே எடுக்கும் முயற்சிகளும் அவ்வளவு அழகு. தங்களின் ஒரே மகளைத் திருமணம் செய்துகொடுத்த பின், வீட்டைச் சூழும் வெறுமையை தங்கள் காதலால் விரட்டியடித்திருப்பார்கள். காதல் காட்சிளும், வசனங்களும் விரசம் இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கும். ஐம்பது வயதைத் தொட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது தனது வாழ்வோடு இணைத்தும், இள வயதினருக்கு தம்முடைய ஐம்பதுகள் இப்படி இருக்க வேண்டும் என ஏக்கமும் வரவைக்கும் காட்சிகள் அவை. அதுவும் உனக்காக பொறந்தேனே பாடல் வரிகளும் அதைப் படமாக்கிய விதமும் ரசனையின் உச்சம். 

இதுதாண்டி ரதம்; இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா ஊர்வலம் வந்திடுவேன்

 

மனைவியை ஊஞ்சலில் உட்கார வைத்து சாப்பாடு பரிமாறுவார். அந்த நேரத்தில் ஒரு வேலையாள் வந்துவிட, பின்புறம் திரும்பி, வேறு ஏதோ வேலை செய்வதாக காட்டிக்கொள்வார் பண்ணையார். இதைப் பார்த்ததும் மனைவிக்கு செல்லக் கோபம். வேலையாள் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததும் மீண்டும் பரிமாற வரும் பண்ணையாரை செல்லமாக விரட்டுவார். பண்ணையார்  ‛ஏண்டா இப்படி' என வேலையாள் சென்ற இடத்தைப் பார்ப்பார். 

கவித்துவமான காட்சிகளின் தன்மையை கொஞ்சமும் சிதைக்காமல் நடித்த ஜெயப்பிரகாஷையும் துளசியையும் இப்படி சொல்வது க்ளிஷேவாகத்தான் இருக்கும்; பரவாயில்லை சொல்லலாம். நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார்கள். ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷை ஹீரோ விஜய் சேதுபதி முதன் முதலாக இழவு வீட்டில் பார்ப்பார். தேவதை போல சித்திரிக்கப்படும் ஹீரோயின் அறிமுகக் காட்சியாக இல்லாமல் அழுது வடியும் முகத்தோடு என்ட்ரி ஆவார் ஐஸ்வர்யா. பண்ணையார் தன்னை வேலையை விட்டு அனுப்பிவிடுவார் என்கிற பதட்டமும் ஐஸ்வர்யாவின் காதலில் நெகிழ்தலை கொஞ்சமும் மிகையின்றி செய்திருப்பார் விஜய் சேதுபதி. மிக எளிய கதையைத் தேர்ந்தெடுத்ததோடு, சமரசமின்றி தன் விருப்பத்தின்படி படமாக்கியிருப்பார் இயக்குநர் அருண்குமார். 

திரைப்படமோ, கதையோ, கவிதையோ ஓர் உணர்வை விதைத்தால் அதன் ஆயுள் அதிகம். பண்ணையாரும் பத்மினியும் அதை நிகழ்த்தியிருக்கிறது. 

- வி.எஸ்.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!