இப்போலாம் ஏன் படங்கள் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகுது? #Revealed #VikatanExclusive

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர்த்துத் திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியாவது எப்போதுமே வெள்ளிக்கிழமைதான். ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக, தற்போது வியாழக்கிழமை ரிலீஸ் ஆகின்றது. "வியாழன் ரிலீஸ் ஆவதால் படங்களின் வசூல் அதிகரிக்கிறது. படம் நல்லா ஓடுகிறது" எனச் சில ஹீரோக்களே சொல்லி வந்தார்கள். இது உண்மை தானா? இனி தமிழகத்தில் வியாழன் அன்றுதான் படங்கள் ரிலீஸ் ஆகுமா? எனத் தெரிந்துகொள்ள முயன்றோம். 

படங்கள் ரிலீஸ்

இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் தயாரிப்பு சங்க செயலாளருமான டி.சிவாவிடம் கேட்டோம், "அண்மையில் சில படங்கள் அஷ்டமி, நவமி தவிர்க்கணும்னு நல்லநாள் பார்த்து ரிலீஸ் செய்யறாங்க. வியாழக்கிழமை விடுமுறை நாட்களாக இருந்தால் தவிர... இனி எந்தப் படமும் வியாழக்கிழமை ரிலீஸ் செய்யக்கூடாது. இதைத் தவிர்க்கணும்னு தயாரிப்பாளர்களிடம், விநியோகஸ்தர்களிடமும் ஆலோசனை நடத்திச் சொல்லப்போகிறோம். வியாழக்கிழமை ரிலீஸ் செய்வதால் படங்களின் வியாபாரம் பாதிக்குது. ரொம்பப் பெரிய படங்களுக்கு வேண்டுமானால் நல்ல ஓப்பனிங் கிடைக்கலாம். ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு இதனால் வியாபார ரீதியாகப் பாதிப்புகள் தான் அதிகம். கடந்த வாரம் ரிலீஸ் ஆன 'போகன்' படத்தில் அரவிந்த்சாமி, ஜெயம் ரவி என்று ஏற்கனவே ஹிட் அடித்த டீம் என்பதால் நல்ல வரவேற்பு இருந்தது. இனி வரும் எல்லா வாரங்களுக்கும் இப்படியே இருக்கும் எனச் சொல்ல முடியாது." என்றவரிடம்,

"வழக்கமாக வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள். ஒருநாள் முன்னரே ரிலீஸ் செய்தால், வியாபாரம் அதிகரிக்கத்தானே செய்யும்?" எனக் கேட்டோம். 

 

''நல்ல ஓப்பனிங் கிடைக்கலாம். ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு இதனால் வியாபார ரீதியாகப் பாதிப்புகள் தான்''

 

"முன்னாடி எல்லாம் வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆச்சுன்னா... அது அடுத்த வாரம் வியாழக்கிழமை வரைக்கும் ஓடும். மொத்தம் 7 நாட்கள் படம் வசூல் செய்யும். இப்ப திடீர் என, சில படங்கள் மட்டும் வியாழக்கிழமை ரிலீஸ் செய்வதால், போன வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன படங்களை எல்லாம் புதன்கிழமை வரைதான் தியேட்டரில் ஓடுகிறது. மொத்தமாகவே ஆறு நாட்கள். ஒருநாள் வசூல் பாதிக்கிறது. அதனால்தான், வியாழன் ரிலீஸ் செய்வது நல்ல விஷயம் கிடையாதுனு சொல்லுறோம். இப்ப முழுதாக ஒருவாரம் ஓடும் படங்களே வசூல் ரீதியாகத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அவங்களுக்கு மேலும் ஒரு நாள் வசூலை பாதிக்க வைப்பது சினிமா துறைக்கு நல்லதல்ல. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திலும், விநியோகஸ்தர்களிடமும் பேசப்போகிறோம். விடுமுறை இருந்தால் தவிர, இனி வியாழன் படங்களை ரிலீஸ் செய்வதைத் தவிர்ப்போம்" என்றார் தீர்க்கமாக. 

படங்கள் ரிலீஸ்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதனிடமும் இதுகுறித்துக் கேட்டோம். "உலகம் முழுக்கவே வெள்ளிக்கிழமை படங்களை ரிலீஸ் செய்வதுதான் வழக்கம். ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், அரபிக்னு ஏதுவாக இருந்தாலும் வெள்ளியன்று தான் ரிலீஸ் ஆகும். சினிமா ஆரம்பித்த காலத்தில் இதுதான் வழக்கமான நடைமுறை. இப்ப சிலர் வியாழக்கிழமை ரிலீஸ் செய்யலாம்னு சொல்லுறாங்க. நான் புதன்கிழமை ரிலீஸ் ஆன படங்களை எல்லாம் கூடப் பார்த்து இருக்கிறேன். சில வெள்ளிக்கிழமைகளில் அஷ்டமி, நவமி வருவதால்.. சென்டிமென்ட் பார்த்து ஏதாவது ஒரு ஜோசியரை கேட்பாங்க. அவங்க 'வியாழனோ, புதனோ படத்தை ரிலீஸ் செய்தால் படம் நல்லா ஓடும்'னு சொல்லுவாங்க. அதனால், சிலர் வியாழன் படத்தை வெளியிடுறாங்க. இது அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்கள் கைகளில்தான் இருக்கு. அவங்க படம்... வெளியிடுவது அவங்க உரிமை. இதனால், வெள்ளிக்கிழமை படம் வெளியீடு என்ற பாரம்பரியத்தை மாற்றிவிடாது. ரஜினி சார், விஜய் படங்கள் எல்லாம் எந்தக்கிழமை வெளியானாலும் ஹிட் ஆகும். ஒரு தியேட்டர் ஓனராக நான் தீர்மானமாகச் சொல்லுறேன். எந்தப் படமாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆச்சுன்னாதான்... அந்தப் படத்துக்கு அதுதான் வசூல் ரீதியான பாதுகாப்பு" எனப் பஞ்ச் வைத்து முடிக்கிறார். 

- நா.சிபிச்சக்கரவர்த்தி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!