விஜய் 61ல் இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கு தெரியுமா? #Vijay61

மீண்டும் அட்லீயுடன் இணைந்திருக்கிறார் விஜய். படத்தின் கதையை பாகுபலி படத்தின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் மேற்பார்வை செய்து கொடுத்திருக்கிறார், படம் மிக பிரமாண்டமாக இருக்கப் போகிறது, விஜய்யின் முறுக்கு மீசை கெட்டப் என பல விஷயங்கள் படத்துக்கான எதிர்பார்ப்பை இப்போதே தூண்டியிருக்கிறது. இது விஜய்க்கு 61வது படம். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், காஜல் அகர்வால், சமந்தா, கோவை சரளா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. இது நாம் அனைவரும் அறிந்ததே. பொதுவாக சினிமாவில் சில சென்டிமென்ட்கள் இருக்கும். அது தெரிந்தோ சில சமயம் தெரியாமல் கூட அமையும். அப்படி இந்தப் படத்தில் யாரும் கவனிக்காத செம சென்டிமென்ட் இருக்கு பாஸ். 

விஜய்

அது தான் '3', அட ஆமாங்க பாஸ் மூணு தான். இயக்குநர் அட்லீக்கு இது விஜய்யுடன் 3வது படம். ரெண்டாவது படம் தானேனு நீங்க யோசிக்கிறது புரியிது. தெறி மற்றும் விஜய் 61 இது ரெண்டுக்கும் முன்னால நண்பன் படத்துல இயக்குநர் ஷங்கர்க்கு அசிஸ்டெண்ட்டா விஜய்யோட ஒர்க் பண்ணார்ல அதனாலதான் இந்த 3. அப்படிப் பார்த்தா விஜய்க்கும் இது அட்லீயோட 3வது படம். அடுத்து நம்ம சத்யராஜ். இவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவரும் இதற்கு முன்னால் நண்பன் மற்றும் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கிறார். அப்போ சத்யராஜுக்கும் இது விஜய்யோட 3வது படம் தான். அடுத்து எஸ்.ஜே.சூர்யா, இவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி படம் மிகப்பெரிய ஹிட். அது மட்டும் இல்லாம நண்பன் படத்துலயும் நடிச்சிருக்காரு. அதனால் அவருக்கும் இது விஜய்யோட 3வது படம். இப்போ நாயகிகள் காஜல், சமந்தா, ஜோதிகா ஆனால் ஜோதிகா இப்போது படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நித்யா மேனன் நடிக்கவுள்ளார் என சொல்கிறார்கள். ஜோதிகா படத்திலிருந்து விலகாமல் இருந்திருந்தால் அவருக்கும் இது விஜய்யுடன் 3 வது படம் தான். இதற்கு முன் குஷி மற்றும் திருமலையில் விஜய்யுடன் நடித்துள்ளார். சமந்தா இதற்கு முன் கத்தி, தெறியில் நடித்துள்ளார். சமந்தாவும் 3 வது படம்  தான். காஜல் அகல்வாலும் இதற்கு முன் துப்பாக்கி, ஜில்லாவில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் காஜலுக்கும் விஜய்யுடன் 3 வது படம் தான். தெறி படத்தின் எடிட்டர் ரூபனுக்கும் இது விஜய்யுடன் மூணாவது படம். அழகிய தமிழ்மகன் படத்தில் அசிஸ்டெண்ட் எடிட்டராக இருந்திருக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரும் இதற்கு முன் விஜய்யின் உதயா மற்றும் அழகிய தமிழ்மகன் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதனால் அவரும் விஜய்க்கு இசையமைப்பது இது 3வது முறைதான். 

இது தவிர இன்னும் சில ஸ்பெஷல்களும் படத்தில் இருக்கிறது. காவலன் படத்துக்குப் பிறகு விஜய் - வடிவேலு கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. அறிமுக ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார், 'அத்தாரிண்டிக்கி தாரேதி' படத்தில் பவன்கல்யாண் காஸ்ட்யூம்களை வடிவமைத்த நீரஜ் கோனா இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். இப்படி சில ஸ்பெஷல்கள்! 

படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

 - மா.விஜய் சூர்யா

(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!