Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"என்னிடம் உதவி இயக்குநரா சேர இந்தத் தகுதிகள் போதும்!" - பா. இரஞ்சித் #VikatanExclusive

'கபாலி'க்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை இயக்குகிறார் பா. இரஞ்சித்.  ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, கபாலி’ என மூன்றே படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இடத்தைக் கைப்பற்றியிருக்கும் பா.இரஞ்சித், உதவி இயக்குநராக இருந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். 

‘‘உதவி இயக்குநர் வாய்ப்பு எனக்கு ஈஸியாவே கிடைச்சதுனு சொல்லலாம். காலேஜ் படிக்கும்போதே நான் உதவி இயக்குநரா வாய்ப்பு தேடிக்கிட்டு இருந்தேன். முதன் முதலா வேலுபிரபாகரன் சார்கிட்டதான் வேலைக்குச் சேர்ந்தேன். அவர், ஆர்ட் டைரக்டர் இல்லாமல் படம் பண்ணிட்டு இருந்தார். நான் படிச்சது ஃபைன் ஆர்ட்ஸ். அதனால, என்னை ஆர்ட் டைரக்ட் சைடுலேயும் வொர்க் பண்ணச் சொன்னார். வேலுபிரபாகரன் சாரோட கடவுள் மறுப்புக் கொள்கை எனக்கும் பிடிக்கும். வழக்கமான சினிமாக்களைவிட, வேலுபிரபாகரன் சாரோட படங்கள் வேற மாதிரி இருந்தது. படிக்கும்போது, எங்க கல்லூரியில் நடந்த படப்பிடிப்புகளைப் பார்த்திருக்கேன். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டும், வேலுபிரபாகரன் சாரோட ஷூட்டிங் ஸ்பாட்டும் நேரெதிரா இருக்கும். வழக்கமான சினிமா படப்பிடிப்பில் இருக்கும் பிரமாண்டம், அவர் படங்கள்ல இல்லை. ‘ஓ... இப்படிக்கூட படம் பண்ணலாமா?’னு புது அனுபவம் கிடைச்சது.'' - இது ரஞ்சித்தின் முதல் பட அனுபவம். 

பா.ரஞ்சித்

‘‘வாய்ப்புக்காக அலைந்து திரிந்த அனுபவம், கிடைக்காமல் திரும்பிய அனுபவம்...?"

‘‘வேலுபிரபாகரன் சாரோட படத்துக்குப் பிறகு, ஒரு பெரிய படத்துல வேலை பார்க்கணும்னு நினைச்சேன். இயக்குநர்கள் சசி, சேரன், லிங்குசாமி இவங்ககிட்ட முயற்சிகள் பண்ணேன். வாய்ப்புகள் அமையலை. அப்போதான், உதவி இயக்குநரா சேர டெக்னிக்கலா, சில விஷயங்களைப் பற்றி யோசிச்சேன். அவங்க எப்படி, மற்ற இயக்குநர்கள்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்திருப்பாங்க? தங்களோட கதை, கவிதைகளைக் கொடுத்துச் சேர்ந்திருப்பாங்க, தினமும் இயக்குநர்கள் அலுவலகத்துக்குப் போய் காத்துக்கிட்டு இருந்திருப்பாங்க. அதுமாதிரி ஏதாவது முயற்சிகள் பண்ணுவோம்னு தோணுச்சு. நான் ஓவியங்கள் வரைவேன். அதனால, என்னால ஸ்டோரி போர்டு பண்ண முடியும்னு சொல்லி உதவி இயக்குநரா சேர முயற்சியைத் தொடர்ந்தேன். 

அந்த சமயம், எங்க ஊரைச் சேர்ந்த ஆர்ட் டைரக்டர் கதிர் அறிமுகம் ஆனார். என் குறும்படத்துக்கான ஸ்டோரி போர்டை அவர்கிட்ட காட்டினேன். பார்த்து அசந்துபோனவர், 'தகப்பன்சாமி’ படத்தோட இயக்குநர் சிவசண்முகத்திடம் என்னை அனுப்பிவெச்சார். அடுத்த நாளே ஷூட்டிங்ல கலந்துக்கிட்டேன். நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். முதல் படத்துல ஆர்ட் டைரக்ஷன் சைடுலேயும் வேலை பார்த்ததுனால, இங்கேயும் சில காட்சிகளுக்கு நானே ஆர்ட் டைரக்‌ஷன் பண்ணேன். அப்பதான், ஒரு உதவி இயக்குநருக்கான பிரச்னை எனக்குத் தெரிஞ்சது. பெருசா சம்பளம் கிடையாது, தினசரி பேட்டா கிடையாது. ஆனா, சிவசண்முகம் சாரோட ஆளுமை எனக்குப் பிடிச்சிருந்ததுனால, வேலை பார்த்தேன். ஆனா, சில கெடுபிடிகள் இருந்தது. படத்தோட எடிட்டிங் அப்போ, என்னைப் பார்க்கக்கூட அனுமதிக்கலை. ஒருகட்டத்துல, இங்கே இருந்து இன்னும் கத்துக்கமுடியாதுனு தெரிஞ்சு, மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிச்சேன்.’’

‘‘இயக்குநர் வெங்கட்பிரபு டீமுக்குள்ள எப்படி வந்தீங்க?’’

‘‘நண்பர்கள் மூலம் வெங்கட்பிரபு சாரோட அறிமுகம் கிடைச்சது. ‘​​​​​​​சென்னை-28’ டீம்ல எல்லோருமே சகஜமா பேசிப் பழகிட்டு இருந்தாங்க. கதை விவாதம் வெளிப்படையா நடந்துச்சு. தயாரிப்பாளர் சரணும் ரொம்ப ஃபிரெண்ட்லியா எல்லோர்கிட்டேயும் அப்ரோச் பண்ணிக்கிட்டு இருந்தார். அது எனக்கு ரொம்பப் புது அனுபவமாவும், சந்தோஷமாவும் இருந்துச்சு. மாத சம்பளம், பேட்டா எல்லாமே கரெக்டா கைக்கு வந்துச்சு. ரொம்ப முக்கியமா, உதவி இயக்குநருக்கான மரியாதை எனக்கு இங்கேதான் கிடைச்சது. அதனாலேயே வெங்கட்பிரபு சார்கிட்ட மூணு படங்கள்ல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.

வெங்கட்பிரபு சார் யாரிடமும் உதவி இயக்குநரா வேலை பார்க்காம, நேரடியா சினிமாவுக்கு வந்தவர். அதனால, அவர் உதவி இயக்குநர்களோட பிரச்னைகளையெல்லாம் எதிர்கொள்ளவே இல்லை. அதனாலேயே, அவரோட உதவி இயக்குநர்களும் சுதந்திரமா இருந்தாங்க. அங்கே கிடைச்ச உற்சாகம்தான், ‘அட்டகத்தி' படம் பண்றதுக்கான தைரியத்தைக் கொடுத்துச்சு. வெங்கட்பிரபு சாரோட டீம்ல கிடைச்ச அனுபவத்தை நானும் ஃபாலோ பண்றேன். என் உதவி இயக்குநர்கள்கிட்ட நான் ஃபிரெண்ட்லியா இருப்பேன். எதுவா இருந்தாலும், வெளிப்படையாப் பேசுங்க, கேளுங்கனு சொல்வேன். உதவி இயக்குநர்களுக்கு மட்டுமில்ல... என் மொத்த யூனிட்டுக்குமே இது பொருந்தும்.’’

‘‘​​​​​​​ப்பவும், இப்போவும் உதவி இயக்குநர்களோட நிலை எப்படி இருக்கு?’’

‘‘முன்னாடி அது குருகுலக் கல்விமுறை மாதிரி இருந்துச்சு. உதவி இயக்குநரா சேரணும்னா, தினமும் இயக்குநர்கள் வீட்டு வாசல்ல காத்துக்கிட்டு இருக்கணும். வாய்ப்பு கிடைச்சாலும், இயக்குநர்கள்கிட்ட நேரடியா தங்களோட கருத்துகளையும், விமர்சனங்களையும் சொல்ற சூழல் இல்லை. ஆனா, நான் இயக்குநர் ஆனபிறகு அதுமாதிரி சூழல்களையெல்லாம் என் உதவி இயக்குநர்களுக்குக் கொடுக்கலை.மேலும் முன்னாடியெல்லாம் உதவி இயக்குநரா வேலை பார்த்தால் மட்டுமே படம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழல் இருந்துச்சு. ஒரு சிலர்தான் அதை உடைச்சாங்க.  இப்போ பலரும் நேரடியாவே படம் பண்றாங்க. மாற்றம் நல்லபடியா நடந்தா, நல்லதுதான்.’’

​​​​​​​

‘‘​​​​​​​உங்களோட உதவி இயக்குநர்கள்கிட்ட நீங்க எதிர்பார்க்கும் விஷயங்கள்?’’

‘‘அரசியல் சார்ந்த காட்சிகளுக்கு எல்லோர்கிட்டேயும் விவாதித்து, அனைவரின் கருத்துகளையும் கேட்பேன். எல்லோரையும் நிச்சயம் புத்தகங்கள் வாசிக்கச் சொல்லி, அவர்களோட கண்ணோட்டத்தைப் புரிஞ்சுக்குவேன். எல்லோரும் சேர்ந்தே ஒரு படத்தைப் பார்த்து, விமர்சனம் பண்ணிக்குவோம். முக்கியமா, என் உதவி இயக்குநர்கள் எல்லோருமே எனக்கு நண்பர்களாக இருக்கணும்னு நினைப்பேன்!’’

‘‘​​​​​​​நீங்க என்ன மாதிரியான சினிமாக்களை ரசிப்பீர்கள்?’’

‘‘வாழ்க்கையைப் பேசக்கூடிய எல்லாப் படங்களையும் நான் விரும்பிப் பார்ப்பேன். லத்தீன் அமெரிக்க படங்கள் என் சாய்ஸ். கறுப்பர்களைப் பற்றி எடுக்கப்படும் எல்லாப் படமும் எனக்குப் பிடிக்கும்.’’

- ரா.அருள் வளன் அரசு,  படங்கள்: தி.குமரகுருபரன்​​​​​​​

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்