வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (11/03/2017)

கடைசி தொடர்பு:14:33 (11/03/2017)

இந்த 3 விஷயங்கள்தான், இந்த ரீமேக்கை கடந்து போகச் செய்யாமல் கவனிக்கவைத்தது! #OneYearOfKadhalumKadanthuPogum

ரீமேக் படங்கள் என்றாலே எப்போதும் ஒரு ஏளனமான பார்வை இருக்கும். ஏற்கெனவே எடுத்த படத்தை மறுபடி எடுக்கறதில் என்ன பெருமை? என்கிற அசட்டுத்தனமான எண்ணம் தான் அதற்குக் காரணம். சில ரீமேக் படங்கள் இங்கு வென்றும் இருக்கிறது. ரீமேக் செய்வதற்கு எதிர்மறையான கருத்துகளும் நிறைய உண்டு. ஆனால், ரீமேக் படத்தை ரசிக்கும் படி அளிப்பது அவ்வளவு சுலபமா என்ன? ஒரு படத்தை எவ்வளவு அழகாக ரீமேக்க முடியும் என்பதற்கு சென்ற வருடத்தைய உதாரணம் நலன் குமரசாமி இயக்கிய 'காதலும் கடந்து போகும்'. படம் வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. 

ரீமேக்

அந்தப் படம் பற்றி பேசும் முன் இரண்டு ரீமேக் பட உதாரணங்களைப் பார்க்கலாம். ஒன்று மணிச்சித்திரத்தாழ் - சந்திரமுகி, இன்னொன்று மெட்ரோ மனிலா - சிட்டிலைட்ஸ். சந்திரமுகி படம் பார்த்துவிட்டு, மணிச்சித்திரத்தாழ் படம் பார்த்தால் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது. சந்திரமுகி தான் பெஸ்ட் எனத் தோன்றும். இரண்டிற்குமான எக்ஸிக்யூஷன் வேறு. மணிச்சித்திரத்தாழ் படம் ஒரு க்ளாஸிகல் டைப். மோகன் லாலை இடைவேளைக்கு கொஞ்சம் முன்பு படத்தில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு கதையை ஹீரோவாக்கிப் பண்ணப்பட்டிருக்கும். சந்திரமுகி அதிலிருந்து முற்றிலும் வேறு. ஓப்பனிங் ஃபைட் வைத்து சூப்பர் ஸ்டார் இன்ட்ரோ, வடிவேல் காமெடி, கொஞ்சம் பேய் பயம் என பக்கா என்கேஜிங்காக நகரும் படம். மிக அமைதியாக இருந்த படத்தை, எழுந்து ஆடவைக்கும் படியாக ரீமேக்குவது ஒரு விதம் என்றால், சிட்டிலைட்ஸ் வேறு விதம். அதன் ஒரிஜினல் படமான மெட்ரோ மனிலாவில் இருந்த ட்ராஜிடி மிகவும் பிடித்துப் போய் ரீமேக் செய்தே தீருவேன் என இந்தியில் சிட்டிலைட்ஸ் இயக்கினார் ஹன்சல் மெஹ்தா. கமர்ஷியல் வெற்றிக்காக ரீமேக் செய்வது ஒரு வகை, ஒரு படம் மிகவும் பிடித்துப் போய் அதை வேறு மொழி ஆடியன்ஸுக்கும் கொண்டு வந்து சேர்க்க ரீமேக் செய்வது இன்னொரு வகை. ஆனால், இரண்டுமே கடினமானது என்பது தான் திரை உலகின் சுவாரஸ்யமே. 

My Dear Desperado

இப்போது காதலும் கடந்து போகும் படத்திற்கு வரலாம். மைடியர் டெஸ்பிரடோ முதலில் ரீமேக் செய்யப்பட்டது இந்தியில். 'ஜெயந்தாபாய் கி லவ் ஸ்டோரி' என்கிற பெயரில் விவேக் ஓபராய், நேஹா ஷர்மா நடிப்பில் வினில் மார்க்கன் இயக்கியிருந்தார். அதன் பிறகு தமிழில் முறையாக ரைட்ஸ் வாங்கி ரீமேக் செய்தார் நலன் குமாரசாமி. இந்த ரீமேக் எதற்கு? ஏன்? என்பதெல்லாம் தாண்டி இது ஒரு தெளிவான என்டர்டெய்ன்மென்ட் என்பது தான் மேட்டர். எந்த படம் எப்படி ரீமேக் செய்யவேண்டும், எந்த விதத்தில் நாம் அதை ஆடியன்ஸுக்கு கொடுக்கப் போகிறோம்? எதை சேர்த்தால் இங்கு ஒத்துக் கொள்வார்கள்? எதை சேர்த்தால் உதைப்பார்கள்? என்பதற்கான தெளிவு வேண்டும். காரணம் இப்படிதான் ரீமேக் செய்ய வேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் இங்கு கிடையாது, அதற்கான ஸ்ட்ரக்சரும் எதுவும் கிடையாது. ‘ஜெயந்தாபாய் கி லவ் ஸ்டோரி’ பார்த்தவர்களால், ‘காதலும் கடந்து போகும்’ எவ்வளவு சரியான ரீமேக் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

‘மைடியர் டெஸ்பராடோ’வில் இருந்த மிகப் பெரிய ப்ளஸ், அது இங்கு மட்டுமே நடக்கும் கதை என்கிற எல்லையை வைத்துக் கொள்ளவில்லை. அது சிலோலினும் நடக்கலாம், சென்னையிலும் நடக்கலாம் என்கிற வசதி இருந்தது. குறிப்பிட்ட நிலப்பரப்பு தனக்கு வேண்டும் என ஸ்க்ரிப்ட் அடம்பிடிக்கவில்லை, சமத்தாக வந்து அமர்ந்து கொண்டது. ‘என்னதாம்பா சொல்ல வர்ற?’ என்கிறவர்களுக்கு மூன்றே விஷயங்கள் மட்டும் சொல்லி விடைபெறுகிறேன்.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என சிறப்பான பங்களிப்புகள் தாண்டியும் இந்த மூன்று விஷயங்கள் படத்தில் ஸ்பெஷல்.

1) காதலும் கடந்து:

Love

தமிழில் ரீமேக் செய்கிறோம், ஹீரோ ஹீரோயினை லவ் பண்ண வைக்கலாமே என எதும் செய்யாமல் அப்படியே கொடுத்திருந்தது சூப்பரான விஷயம். இவங்க லவ் பண்ணப் போறாங்களா? இடைவேளைல செல்ஃபி எடுத்துக்கறாங்க, அடுத்து லவ் தானே, க்ளைமாக்ஸ்ல ஒருத்தர ஒருத்தர் பார்த்து சிரிச்சிக்கறாங்க கண்டிப்பா இது லவ் தான் என ஒரு ஜாலியான குறுகுறுப்புடன் நம்மை அழைத்துப் போகும் படம்.

2) ஒரு ஊருல... ஒரு வீரன்:

Vijaysethupathy

விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவமைப்பு. ஒத்துக் கொள்ளதான் வேண்டும் அது ஒரிஜினலில் இருந்தபடி தான் இருக்கும். ஆனால், இங்கு விஜய் சேதிபதி செய்வதெல்லாம் செம ரகளை. அந்த ரோலில் வேறு யாரையும் மிக சுலபமாக பொருத்திவிட முடியாது. கெத்தாக சீன் போடும் வெத்து அடியாளாக அமர்களப்படுத்தியிருப்பார்.

3) வசனம் இல்ல... அதுக்கும் மேல:

Dialouges

பாக்யம் சங்கர் + நலன் வசனங்கள். "நான் ஒரு பழமொழி சொல்லுவேன் அது பழசாதான் இருக்கும்", "நான் பத்தாவது படிக்கும் போது விமலானு ஒரு பொண்ணு இருந்திச்சி.... ம்ம்ம் அப்பறம்? அப்பறம் என்ன அதுவும் இருந்துச்சு நானும் இருந்தேன் அவ்வளோ தான்" என ஒவ்வொரு வசனங்களுக்குள்ளும் இருக்கும் நக்கல், அல்லது செல்ஃப் ட்ரோல் செம க்யூட்!

சிம்பிளாக சொன்னால் சில பட்டாஸ் ரீமேக்குகள் கடந்து போய்விடும். ஆனால், இந்த ரீமேக்கை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது!

- பா.ஜான்ஸன்


டிரெண்டிங் @ விகடன்