‘கேட்டால் ரஜினியே நடித்திருப்பார். ஆனால், என் மருமகன் தனுஷ்...’ - உருகும் ராஜ்கிரண்

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் நடிப்பில் உருவாகிவரும் ‘பவர்பாண்டி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பும், டிரெய்லர் வெளியீடும் இன்று நடைபெற்றது. படத்தின் பெயர் பவர்பாண்டி. ஆனால், வரிச்சலுகை காரணமாக ‘ப.பாண்டி’ என்ற டைட்டிலுடன் டிரெய்லர் வெளியிட்டனர்.

தனுஷ், பவர்பாண்டி, ராஜ்கிரண்,

தனுஷ், ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், டிடி, ரோபோ ஷங்கர், சென்ட்ராயன், ரேவதி, வித்யுலேகா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர் பிரசன்னா.கே., நடன இயக்குநர் பாபா மாஸ்டர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.

ஷான்ரோல்டன் பேசும்போது, “ஜோக்கர் பட பாடல் ரிலீஸ் நேரத்தில், வேலைப்பளுவினால் அசதியில் தூங்கிட்டேன். அந்த நேரம் தனுஷ் சார் ட்விட்டரில் ஜோக்கர் பட பாடல் பத்தி நிறைய ட்வீட் பண்ணியிருந்தார். ஜோக்கர் இல்லைன்னா, தனுஷ் சார் படத்தில் நான் இல்லை. எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் எனர்ஜி குறையும். ஆனா எப்போதுமே எதையாவது யோசிச்சுட்டும், செய்துட்டும் இருக்குறது தனுஷ் சார் ஸ்டைல். ரொம்ப பெரிய மனிதர். ஆனா எளிமையானவர். எந்த விஷயம் பேசினாலும் ஆழமா தெரிஞ்சிட்டுதான் பேசுவார். அவரோட மிகப்பெரிய ரசிகன். இப்போ ஒரே மேடையில் அவரோட இருக்குறதே ஆச்சர்யமாதான் இருக்கு.” என்றார்.  

ராஜ்கிரண்

ராஜ்கிரண், “ இயக்குநர் கஸ்தூரி ராஜா 27 வருடங்களுக்கு முன்னால் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் என்னைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அவரின் மகன், என்னுடைய ‘மருமகன் தனுஷ்’ என்னை மீண்டும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இப்படியொரு அனுபவம் யாருக்கும் அமையாது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என்று பல பரிமாணங்களில் வெற்றியடைந்திருக்கும் இவர் இயக்கும் முதல் படத்தில் ரஜினி சாரிடம் நடிக்கக் கேட்டாலும்கூட வருவார். ஆனால், 'நான் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்துத்தான் படமெடுப்பேன்' என்கிற முடிவில் தனுஷின் தன்னம்பிக்கை தெரிகிறது. ‘பவர் பாண்டி’ குழுவில் எல்லோருமே என் பிள்ளைகள்தான். மருமகன் கதையை விளக்கிய விதத்தில் என்னை அறியாமலேயே அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. இந்தப் படத்தில் புதிதாக ஒரு ராஜ்கிரணை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தனுஷ். " என்றார்.

தனுஷ் பேசும்போது, “ உலகத்துல நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு ஒவ்வொரு மனிதருக்குள்ளும்.... அன்பும் இருக்கு, வெறுப்பும் இருக்கு. எதைத் தேர்வு செய்கிறோம், எது வேண்டும், எதை நோக்கிப் போகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கு. சுற்றி இருப்பவர்களின் அன்பு, நிம்மதி, பாசம், நல்லது என்று பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டால் நிம்மதியாக இருக்கலாம் என்பதே பவர்பாண்டி.  இந்தப் படத்திற்காக முதலில் நன்றி சொல்ல நினைப்பது என்னுடைய உதவி இயக்குநர்களுக்குத்தான். 

தனுஷ், பவர்பாண்டி

இந்தப் படத்திற்குக் கிடைத்த ஆசீர்வாதம்தான் ராஜ்கிரண் சார். அவரின் சிரிப்பும், அரவணைப்பும், அன்பும் தான் இந்தப்படத்தை முழுமைப்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் பாசிட்டிவ் அதிர்வோட இருக்க முழுக்க முழுக்க காரணம் ராஜ்கிரண் சார் தான். அவருக்கு நன்றினு சொல்லுற வார்த்தைகூட குறைவான வார்த்தைதான்.  

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ராஜ்கிரண் சார் நடிப்பை பலமுறை வீட்டில் நடிச்சுப் பார்ப்பேன். என்னுடைய சூப்பர் ஹீரோ மாயாண்டி. எங்க குடும்பத்தோட பயணத்தை மாத்துனதே இந்த மாயாண்டி தான். எங்க குடும்பத்துக்கு மேல இருக்குற பாசமானு தெரியலை, ஓகே சொல்லிட்டுத்தான் கதையே கேட்டாங்க.  இந்த ‘பவர் பாண்டி’ கதைய எழுதி ஒன்றரை ஆண்டுக்கு மேல் ஆகிடுச்சு. அவர் நடிச்சதுனாலதான் படமே முழுமை அடைஞ்சிருக்கு. 

இந்தப் படத்தோட மிகப்பெரிய பலம் ரேவதி. அவர் இயக்குநர் என்பதால், எதுவும் சொல்லணும்னு அவசியமே இல்லை. அவங்களே சுலபமா நடிச்சுட்டுப் போய்ட்டாங்க. 

நான் இருந்த அதே மனநிலையில்தான் ஷான் ரோல்டனும் இருந்தார். அதுனால பாடல்களும் நல்லா வந்திருக்கு. இந்தப் படத்துல இருக்குற பாசிட்டிவிட்டியை ரசிகர்களும் உணர்வாங்க. இறைவனுக்கு நன்றி...!" என்று சாந்தமாகப் பேசினார் தனுஷ்.

-முத்து பகவத்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!