Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்க்கும்போதெல்லாம் 'நச்' அனுபவம் தரும் 5 குறும்படங்கள்! #MustWatch

பெருங்கதை, வரலாறுகளையும் சில நிமிடங்களில் கடத்தும் எனர்ஜி குறும்படங்களுக்கு உண்டு. அதிகவனம் பெற்ற, பரவலான பாராட்டுகளைப் பெற்ற குறும்படங்கள் இணையதளங்களில் ஏராளம். அதில், எப்போது பார்த்தாலும் 'நச்' அனுபவத்தைத் தரும் ஐந்து குறும்படங்கள் இவை.  

ஒன் ஹன்ரெட்த் ஆஃப் எ செகண்ட்  

ஒரு பரிதாப நிகழ்வையும், அதைத் தடுக்காத ஒரு பத்திரிக்கையாளரின் குற்ற உணர்வையும் அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தியிருக்கும் குறும்படம் 'ஒன் ஹன்ரெட்த் ஆஃப் எ செகண்ட்'.

குறும்படங்கள்

எங்கோ கிளம்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறாள் கேட். திடீரென அவளுடைய  எண்ண அலைகள் ஒரு சம்பவத்திற்குச் செல்கிறது. புகைப்படப் பத்திரிக்கையாளரான 'கேட்'டும், அவளுடைய நண்பரும் கிழக்கு ஐரோப்பாவில் நடந்துகொண்டிருந்த ஒரு போரின் பதட்டமான, பரிதாபமான பல நிகழ்வுகளைப் பதிவு செய்துகொண்டிருக்கின்றனர். துப்பாக்கியுடன் வரும் ஒரு கலகக்காரனைப் பார்க்கும் கேட்டின் நண்பர், அவளைப் பின்னுக்கு இழுத்து ஒளிந்துகொள்ளச் சொல்கிறார். ஆனால், அவளோ அந்தக் கலகக்காரனின் பிடியில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளம் சிறுமியின் நிலைகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறாள். 

கேட் கிளம்பிக்கொண்டிருந்தது 'ஆண்டின் சிறந்த புகைப்படம்' என்ற விருது வழங்கப்படும் விழாவுக்கு. இப்போது மீண்டும் அவளுடைய எண்ணங்கள் அந்த சிறுமி கலகக்காரனிடம் துப்பாக்கி முனையில் சிக்கிக்கொண்டதில் இருந்து தொடங்குகிறது. எதார்த்தமாக கேட்டைப் பார்க்கும் அந்தச் சிறுமி, கண்களாலேயே தன் தவிப்பைப் பரிமாற்றம் செய்கிறாள். விழாவில் கேட்டின் பெயரை 'இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்' எடுத்ததற்கான விருதுக்காக அறிவிக்க, அமர்ந்திருக்கும் அனைவரும் கைதட்டுகிறார்கள். மெல்லவும் சொல்லவும் முடியாத துக்கம் அவள் தொண்டையை அடைக்க, விருதினைப் பெறாமல் வெளியேறுகிறாள் கேட்.  

பெரும்பகுதியில் வசனங்கள் இல்லையென்றாலும் சம்பவங்களோடு ஒன்றவைக்கும் ஒளிப்பதிவும்,  உணர்வுகளை எளிதாகப் புரியவைக்கும் இசையும் அப்ளாஸ். ஆறு நிமிடம் ஒடக்கூடிய இக்குறும்படத்தில் விருது விழா, போர் சூழல், பத்திரிக்கையாளரின் செயல்பாடுகள்  என மூன்று தளங்களைத் திணித்து, சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார், இயக்குனர் சுஷன் ஜகோப்ஷன். 

மறைபொருள் 

மனிதனால் உருவாக்கப்பட்டு, கடவுள்கள் பெயரில் கட்டமைக்கப்பட்டது மதங்கள். அத்தகைய மதங்களில் உள்ள  சில நம்பிக்கைகள் மீதான விமர்சனமே 'மறைபொருள்' குறும்படம். 

மறைபொருள் குறும்படம்

ரயில்கள் இயங்கிக்கொண்டிருக்கும் பரபரப்பை உள்ளே உணரும் வகையில் உள்ள ஒரு அறை. குளித்து முடித்து, தலையைத் துவட்டிக்கொண்டிருக்கும் இளம்பெண். நாகரிகம் தலைதூக்கிய இக்காலத்தில் 'அழகுணர்ச்சி' அத்தியாவசியம் ஆகிறதே... தன் அழகை மிகைப்படுத்திக் காட்டிய ஒரு உடையை அணிந்துகொண்டு, கண்ணுக்கு மையிடுவது, நகத்துக்கு வண்ணம் பூசிக்கொள்வது, உதட்டுக்கு சாயம் ஏற்றுவது என அடுத்தடுத்து ஒவ்வொன்றையும் செய்கிறாள். தன்னை அழகாக்கிய அத்தனையும் அவளுக்குத் தந்த சந்தோஷத்தின் அளவு 'நேர' அளவில்கூட இல்லை. சில நொடிகள்தான்!. ஏன், எதற்கு என்பதற்கான விடையை மெளன மொழியில் சொல்கிறது இக்குறும்படம். பொன்.சுதா இயக்கியுள்ள இக்குறும்படம், பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. 

கர்ண மோட்சம் 

ஆங்காங்கே மிஞ்சியிருக்கும் கூத்துக் கலையின் இன்றைய நிலையை உள்வாங்கி, அந்த வலியை கூத்துக் கலைஞரின் வாயிலாகவே வெளிப்படுத்தியிருக்கும் குறும்படsம் 'கர்ண மோட்சம்'.

கிராமத்தில் இருந்து கூத்து கட்டுவதற்காக, தன் சிறுவயது மகனோடு சென்னையின் தனியார் பள்ளி ஒன்றிற்கு வருகிறார் கர்ண வேஷம் கட்டிய கூத்தாடி. வந்தபிறகு, திடீரென நிகழ்ச்சி ரத்தாகியிருப்பது தெரிகிறது. கூத்து கட்டினால் கிடைக்கும் பணத்தைக்கொண்டுதான் மகன் கேட்ட கிரிக்கெட் பேட் வாங்கமுடியும். ஊருக்குத் திரும்பிப்போக முடியும் என்ற நிலை கூத்தாடிக்கு. பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தொலைபேசியில் பேசுகிறார் கர்ணன். மாலை ஆறுமணிக்குத் தன் வீட்டில் வந்து சந்திக்குமாறு கூறுகிறார் ஆசிரியர். அதுவரை என்ன செய்வதென்று தெரியாமல், அருகில் இருக்கும் இட்லி கடைக்குச் செல்கிறார். அங்கே வேலை பார்க்கும் ஊமைச் சிறுமியின் அறிமுகம் கர்ணனுக்குக் கிடைக்கிறது. அவளிடம் தன் கதையையும் கலையையும் சொல்லி, கூடவே கூத்துக் கலையின் அடிப்படைகளையும் சொல்லிக்கொடுத்து சந்தோஷமடைகிறார். இறுதியில் ஆசிரியரைச் சந்தித்தாரா, மகனின் ஆசையை நிறைவேற்றினாரா என்பது இக்குறும்படத்தின் அழுத்தமான முடிவு. 

கர்ணமோட்சம் குறும்படம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை, வசனம் எழுதிய இக்குறும்படத்தை, முரளி மனோகர் இயக்கியிருக்கிறார். தேசிய விருது உள்பட அறுபதுக்கும் அதிகமான விருதுகளைப் பெற்றுள்ளது இக்குறும்படம். 

தி பிளாக் ஹோல் 

சிறு வயதிலிருந்தே நமக்கு பழக்கப்பட்ட  'பேராசை பெருநஷ்டம்' பழமொழியை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகக் காட்சிப்படுத்தியிருக்கும் குறும்படம்தான், 'தி பிளாக் ஹோல்'. 

அனைவரும் கிளம்பிவிட்ட நடுநிசிநேர அலுவலகம். சார்லி என்பவர், அலுவலக வேலையாக ஜெராக்ஸ் எடுக்கப் போகிறார்.  அந்த ஜெராக்ஸ் மிஷினிலிருந்து கருப்பு வட்டம் கொண்ட தாள் ஒன்று வெளியேறுகிறது. அதை எடுத்து வைத்துவிட்டு, கையிலிருக்கும் காபியைக் குடித்து அந்த பேப்பர் மீது வைக்க... அது  கப்பைத் தன்னுள் இழுத்துக்கொள்கிறது. டென்ஷனோடு இருந்த சார்லிக்கு இப்போது கொஞ்சம் அதிர்ச்சி, நிறையவே ஆச்சர்யம். மிஷின் மீது இருந்த அந்தப் பேப்பரின் கருப்புப் பகுதிக்குள் கையை விட்டு, தான் தூக்கியெறிந்த கப்பை வெளியே எடுக்கிறார். அட... மீண்டும் ஆச்சரியம். 

தி பிளாக் ஹோல் குறும்படம்

சார்லியின் மூளைக்கு விஷயம் பொறிதட்ட, அந்தக் கருப்பு வட்ட பேப்பரைக் கொண்டு அருகே இருக்கும் அலமாரிக்குள் இருந்து சாக்லேட் எடுத்துச் சுவைக்கிறார். அலுவலகத்தில் இருக்கும் பணம் வைக்கும் அறை கண்ணில் படுகிறது. பிறகென்ன... பணம் இருக்கும் லாக்கரில் பேப்பரை வைத்து பணக்கட்டுகளை அள்ளுகிறான். உலகத்தையே ஜெயித்துவிட்ட உற்சாகம் முகத்தில் படற, மொத்த உடலையும் சுருட்டி லாக்கரில் புகுந்துகொள்கிறார். என்ன நடந்திருக்கும் என்பதை அசத்தலாகச் சொல்கிறது இந்தக் குறும்படம். 

மூன்று நிமிடத்துக்கும் குறைவாக, வசனமே இல்லாமல் உருவாகியிருக்கும் இக்குறும்படம், காட்சி வழியே கதை சொல்லும் யுக்திக்கான சிறந்த உதாரணம். இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபில் & ஓலி என்ற இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். 

லீ சாக் 

தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது வெளிவரும் பரிசோதனை முயற்சிகளுக்கு, குறும்படங்களும் சளைத்தவையல்ல என்பதை உன்னதமாக உணர்த்தும் குறும்படம் 'லீ சாக்'. 

லீ சாக் குறும்படம்

மழை பெய்துகொண்டிருக்கும் ரம்மியமான மாலைப்பொழுதில், ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகள் இருக்கையில் கையில் கொண்டுவந்த பையோடு அமர்ந்து குட்டித் தூக்கம் போடுகிறார் ஒருவர். சிறிய இடைவெளிக்குப் பிறகு அங்கே வரும் ஒரு இளைஞன், அமர்ந்திருப்பவர் தூக்கத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டு அவர் பையை அபகரிக்கும் முயற்சியை லாவகமாக ஆரம்பிக்கிறான். படம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் இருந்து, ஒன்பதாவது நிமிடம் வரை இந்த முயற்சியே தொடர்கிறது. என்னதான் நடக்குமோ? என ஆர்வம் துளைத்தெடுக்க ஆரம்பிக்கும் வேளையில், நாம் எதிர்பார்க்காத ஒன்று நடக்கிறது. 

'லீ சாக்' என்றால் பிரெஞ்சு மொழியில் பை என்று பொருளாம். ஒரு ஷாட், இரண்டு நடிகர்கள், ஒரே ஒரு லொக்கேஷன்... இவ்வளவுதான் களம். இந்தக் குறும்படத்திலும் வசனம் இல்லை. பின்ணனியில் ஒலிக்கும் மழைச் சத்தம் இந்தக் குறும்படத்தோடு ஒன்ற வைக்கும். வி.கெளரி சங்கர் என்பவர் இக்குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.

இதேபோல், உங்களை பாதித்த குறும்படங்களையும், அதற்கான காரணங்களையும் கமெண்டில் பகிர்ந்துகொள்ளலாமே!

- கே.ஜி.மணிகண்டன் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement