Published:Updated:

இந்த வருடம் வெளியாக இருக்கும் தமிழின் பார்ட்-2 படங்கள்! #SequelMovies

கே.ஜி.மணிகண்டன்
இந்த வருடம் வெளியாக இருக்கும் தமிழின் பார்ட்-2 படங்கள்! #SequelMovies
இந்த வருடம் வெளியாக இருக்கும் தமிழின் பார்ட்-2 படங்கள்! #SequelMovies

1916-ல் வெளியான 'தி ஃபால் ஆஃப் எ நேஷன்' ஹாலிவுட் படம்தான், முதல் சீக்குவல் மூவி. தமிழில் கமல் நடித்த 'ஜப்பானில் கல்யாணராமன்'தான் முதல் சீக்குவல் தமிழ்ப்படம். பிறகு ஹாலிவுட்டில் தொடர்ச்சியாகவும், தமிழில் அவ்வப்போதும் வந்துகொண்டிருந்தது. இப்போது, தமிழ் சினிமாவும் 'சீக்குவல்' எடுப்பதில் ஜெட் வேகத்தில் பறக்கிறது. தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் 'பார்ட் டூ' படங்கள் இவை.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி 

வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம். இயக்குநர் சிம்புதேவன் எவர்கிரீன் லிஸ்ட்டில் இருக்கும் படம். ரிலீஸ் ஆனதில் இருந்தே இருந்த எதிர்பார்ப்பு, சில மாதங்களுக்கு முன்பு உறுதியாகியிருக்கிறது. வடிவேலு - சிம்புதேவன் கூட்டணியிலேயே உருவாகும் இப்படத்தை, இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ். தமிழ்க அரசியல் ரணகள சூழலில் இருப்பதால், முதல் பாகத்தில் இருந்த அரசியல் நையாண்டியைவிட, இரண்டாம் பாகத்தில் அதிகம் இருக்கும் என நம்பலாம்.

சதுரங்கவேட்டை 

மக்களை ஏமாற்றும் மோசடி வித்தைகளை இன்ச் பை இன்ச்சாக இறக்கிவைத்த 'சதுரங்கவேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் திரைக்கு வந்துவிடும். முதல் பாகத்தில் நட்டி, பொன்வண்ணன், இளவரசு என குறிப்பிட்ட சிலரைத் தவிர்த்து, பெரும்பாலும் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்கள். ஆனால், 'சதுரங்கவேட்டை' வேற லெவலில் இருந்தது. இரண்டாம் பாகத்தில் அர்விந்த்சாமி, த்ரிஷா, டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி... எனப் பெரும் நட்சத்திரப் படையே இருக்கிறது. இந்தக் கலர்ஃபுல் காம்பினேஷனோடு என்னென்ன மோசடிகளைச் சொல்ல இருக்கிறார்கள் என்ற கேள்வியே படம் பார்க்கும் ஆவலை அதிகரிக்கிறது. முதல் பாகத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஹெச்.வினோத், கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்கும் பரபரப்புகளில் இருப்பதால், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மட்டும் எழுதியிருக்கிறார். 'சலீம்' படத்தின் இயக்குநர் நிர்மல் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

வேலையில்லா பட்டதாரி 

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய முதல் படம். கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்ற படம். குடும்ப சென்டிமென்ட், காமெடி, ஆக்‌ஷன், காதல் என வர்ணஜாலம் காட்டிய இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். இப்படத்தின் மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பாலிவுட் நடிகை கஜோல். 'கோச்சடையான்' படத்திற்குப் பிறகு செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் இரண்டாவது படம் இது. முதல் பாகத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் இறந்துவிடுவது போலக் கதை அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் பாகத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். அதனால், இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்பது கேள்விக்குறி. 

மாரி 

கலவையான விமர்சனத்தைப் பெற்ற படம். தனுஷின் கெட்டப்பும், லோக்கல் மாடுலேஷன் வசனங்களும் தனுஷ் ரசிகர்களிடம் கை தட்டல் பெற்றுத் தந்ததைத் தவிர, பெரிய ஈர்ப்பு எதுவும் இல்லை. முதல் பாகத்தில் 'செஞ்சிருவேன்' என்ற ஒற்றை வார்த்தையை பன்ச் ஆகப் பேசியவர் தனுஷ். இதில் என்ன பேசுவாரோ... இயக்குநர் பாலாஜி மோகனுக்குத் தெரியும். தவிர, 'மாரி' மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான 'கொடி' படத்தின் இரண்டாம் பாகத்திலும் தனுஷ் நடிக்கிறார். ஆக, தொடர்ச்சியாக 'தொடர்ச்சி' படங்களில் தனுஷ் பிஸி!

திருட்டுப்பயலே 

2006ல் வெளியான 'திருட்டுப்பயலே' படம் செம ஹிட். 'யுனிவர்சிட்டி'யில் அறிமுகம் ஆகியிருந்தாலும், நடிகர் ஜீவனை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம். ஆனால், இரண்டாம் பாகத்தில் ஜீவன் நடித்த கேரக்டரில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. 'திருட்டுப்பயலே'வுக்குப் பிறகு சுசிகணேசன் இயக்கிய 'கந்தசாமி' வெற்றியைக் கொடுக்கவில்லை. பிறகு, 'திருட்டுப்பயலே' படத்தை ஹிந்தியில் இயக்கினார். இப்போது இதே படத்தின் இரண்டாம் பாகம் மூலம் தமிழுக்குத் திரும்பியிருக்கிறார். 'திருட்டுப் பயலே' படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமான, ஏஜிஎஸ் நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கிறது. பிரசன்னா, அமலாபால், விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

வெண்ணிலா கபடிக்குழு

சிறுபட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெருவெற்றி பெற்ற படம். இயக்குநர் சுசீந்திரன், நடிகர் விஷ்ணு விஷால், காமெடி நடிகர் சூரி, இசையமைப்பாளர் செல்வகணேஷ் என இப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர்கள் பலர். கபடி விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தின் இரண்டாம் பாகமும் இதே பெயரிலேயே தயாராகிக்கொண்டிருக்கிறது. விஷ்ணுவுக்குப் பதில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார், விக்ராந்த். முக்கியக் கேரக்டர்களில் பசுபதி, கிஷோர், சூரி, அப்புக்குட்டி, யோகிபாபு, ரவிமரியா எனப் பலரும் நடிக்கிறார்கள். சுசீந்திரனின் அசிஸ்டென்ட் செல்வ சேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். 

இதுதவிர, கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2', 2015-ல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற 'ராஜதந்திரம்' மற்றும் சில படங்களும் ஆன் தி வே!

- கே.ஜி.மணிகண்டன்

கே.ஜி.மணிகண்டன்

பத்திரிகையாளர், குறும்பட இயக்குநர்.