Published:Updated:

மாட்டினார் மிஸ்டர் எக்ஸ்! - 'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் இவர்தான்!

தார்மிக் லீ
மாட்டினார் மிஸ்டர் எக்ஸ்! - 'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் இவர்தான்!
மாட்டினார் மிஸ்டர் எக்ஸ்! - 'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் இவர்தான்!

கௌதம் மேனன், தனுஷ் காம்போவில் வரவிருக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த வருடத்திற்கான மெகா தேடல் இந்தப் படத்தின் மியூஸிக் டைரக்டர் யார்? என்பதுதான். அந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கான தேடலும் அதிகமாகிவிட்டது. யார் அந்த மிஸ்டர் எக்ஸ்? வெற்றிலையில் மை போட்டு பார்ப்பதில் ஆரம்பித்து சோஷியல் மீடியாவில் அலசி ஆராய்ந்து பார்ப்பது வரை எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டு ஒரு வழியாகக் கண்டுபிடிச்சுட்டேன். அது எந்தளவுக்கு உண்மைங்கிறது உங்க கணிப்புக்கு விட்டுடுறேன். ஸ்க்ரோல் பண்ணி நடுவில, கடைசியில பார்க்கிறதை விட்டுட்டு முழுசா படிங்க பாஸ். அப்போதான் உங்களுக்கும் ஒரு க்ளாரிட்டி கிடைக்கும். 

ஒருநாளில் 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் இந்தப் படத்தின் மியூஸிக் டைரக்டர் யார் என்று தேடுவதையே வேலையாக வைத்திருந்தேன். 'இளையராஜா' இசையமைத்த படப் பாடல்கள் முதல் 'இமான்' இசையமைத்த படப் பாடல்கள் வரை கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சிக்கினார் அந்த வெரிஃபைடு பேஜ் ஓனர் 'லியோன் ஜேம்ஸ்'. யார் இவர்? என்ற ஆர்வத்தில் இவர் பேஜை டாப் டு பாட்டம் அலசினால், சில பிரபலங்களுடன் செல்ஃபி, கோ-2, காஞ்சனா போன்ற படத்திற்கு இசையமைப்பாளர், சில பல இண்டிபெண்டென்ட் ஆல்பங்களும் சிக்கின. தேடலுக்கான ஆர்வம் அதிகரிக்க... இவர் போட்ட ட்யூன்களைக் கேட்டேன். அதற்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் ஒரு சில பாடல்களும் ஒரே மாதிரியாக இருந்தன. 

உடனே 'யூ டியூப்' பக்கம் போய் 'லியான் ஜேம்ஸ்' வீடியோக்களைத் தேடினேன். அப்போதுதான் தெரியவந்தது. கிருஷ்ணா நடித்த 'வீரா' படத்தின் மியூஸிக் டைரக்டரரும் இவர்தான் என்று. அந்தப் படப் பாடல்களையும் ரிபீட் மோடில் போட்டுக் கேட்டேன். அச்சு அசல் எ.நோ.பா.தோ-வின் படப் பாடல்களை கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது. இவர் இந்தப் படத்தின் மியூஸிக் டைரக்டராக இருக்க வாய்ப்பே இல்லை என்று யோசிப்பதை விட்டுவிட்டு... இவர் ஏன் இந்தப் படத்தின் மியூஸிக் டைரக்டராக இருக்கக் கூடாது? என்பதை யோசிச்சுப் பாருங்க... இன்னும் டவுட் இருந்தா புரியற மாதிரி நறுக்குன்னு நாலு பாயின்ட்ஸ் சொல்றேன் வாங்க!

பாயின்ட் நம்பர் 1 - 'லியோன் ஜேம்ஸ்' பெயரை நாலு முறை சொல்லிப் பாருங்க... எவ்வளவு ஸ்டைலிஷா இருக்கு? அப்படியே கண்ணை மூடி கௌதம் மேனனை நிறுத்திப் பாருங்க... ரெண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரியே இருக்குதா?

பாயின்ட் நம்பர் 2 - 'மறுவார்த்தை பேசாதே' பாட்டை பாடியவர் 'சித் ஶ்ரீராம்'... இது எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம். 'சித் ஶ்ரீராம்', 'லியோன் ஜேம்ஸ்' ரெண்டு பேருமே க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இப்ப ஓரளவு ஐடியா வருதா பாஸ்?

பாயின்ட் நம்பர் 3 - எல்லா மியூஸிக் டைரக்டர்களுக்கும் சில சிமிலாரிட்டிஸ் இருக்கும்... அதே போல் இவரது படப் பாடல்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்குது மக்களே.  அவர் சொல்லாட்டியும் அவரோட மியூஸிக் காட்டிக் கொடுத்துடும்.

பாயின்ட் நம்பர் 4 - சித் ஶ்ரீராமின் பாடல்கள் லிஸ்ட்டை எடுத்துப் பாருங்க... 'கவலை வேண்டாம்' படத்தில் 'லியோன் ஜேம்ஸ்' கம்போஸ் செய்து இவர் பாடிய பாடல் மேலேயும், அதே 'வீரா' படத்தில் 'வெரட்டாமல் வெரட்டுறியே' பாடல் கீழேயும், நடுவில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் 'மறுவார்த்தை' பாடல் மிஸ்டர் எக்ஸ்னு இருக்கு பாஸ். அதையும் நோட் பண்ணிட்டேன். நீங்களும் போய் நோக்குங்க.

எவ்வளவு சைலன்டா வேலை பார்க்கிறாங்க யார்னு தெரியாமலேயே! பாஸ் இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இல்லை... கொஞ்ச நாள்ல வெளியே சொல்லுவாங்க. அப்போ தெரியும் என்னோட அருமை! தப்பாக் கூட இருக்கலாம். அதுக்காக திட்டக் கூடாது! இருந்தாலும் இந்த விஷயங்களையெல்லாம் ஒரு நோட்டம் விட்டுப் பாருங்க. எனக்கு ஏற்பட்ட டவுட் உங்களுக்கும் வந்தா கமென்ட் பண்ணுங்க! 

- தார்மிக் லீ

தார்மிக் லீ