சினிமா விமர்சகர்களுக்கு ‘நெருப்புடா’ விழாவில் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை!

விக்ரம்பிரபு தயாரித்து, நடிக்கும் படம் ‘நெருப்புடா’. இப்படத்திற்கான இசைவெளியீட்டுவிழா இன்று சிவாஜிகணேசனின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டார். ரஜினி பேசியதாவது, 

ரஜினி

“அன்னை இல்லத்துக்குள் நுழையும் போதே சிவாஜி சார் நினைவுதான் வந்துச்சு. என் தாடியைப் பார்த்துட்டு ‘எனக்கே போட்டியா?’னு கேட்டிருப்பார். அவர் இருக்கும் போதும் சரி, இனிமேலும் சரி... அவருக்குப் போட்டி யாரும் கிடையாது.  இந்த வீட்டுக்குள் வரும்போதெல்லாம் இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வருது. 1978-ல் முதல் முறையா இந்த வீட்டுக்கு வந்தேன். உள்ளே நுழையும் போது நினைச்சுக்கூட பார்க்கமுடியாத பிரமாண்டம் மனசுக்குத் தோணிச்சு. நான் மட்டுமில்லாமல் சினிமா தவிர, பல துறைகளிலிருந்து விருந்தினர்கள் -  குறைந்தது 200 பேர் - வந்திருந்தாங்க. ஒவ்வொரு ஞாயிறும் சிவாஜி சார் வீட்டுல இந்த மாதிரி விருந்து நடக்கும்னு கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன். 

இரண்டாவது நிகழ்வு ‘அண்ணாமலை’ பட சமயத்தில் நிகழ்ந்தது. ‘அண்ணாமலை’ படத்துக்கு ஸ்கிரிப்ட் தயார். சிவாஜி சாரை மனசுல வச்சிட்டு நடிக்கணும்’னு இயக்குநர் சொன்னார்.  சிவாஜி சாரை மனதில் வைத்து தான் ‘அண்ணாமலை’ படமே நடிச்சேன். அண்ணாமலையில் சிவாஜியை நினைச்சு நடிச்சேன். ‘படையப்பா’ படத்துல அவர் கூடவே நடிச்சேன். இரண்டு படத்துக்குமே வீட்டுக்கு அழைத்துப் பாராட்டினார்.  

நல்ல நண்பர், அருமையான மனிதர் பிரபு. இந்த அன்னை இல்லத்தோட பெருமையையும், கவுரவத்தையும் சிவாஜி சார் வழியில் காப்பாற்றிவருகிறார். அவரை மாதிரியேதான் மகன் விக்ரம்பிரபு. ‘கும்கி’ படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டான்னு எனக்குத் தெரியும். தாத்தாவோட பெயரைக் காப்பாத்தணும் நினைக்கிற பேரன் விக்ரம்பிரபு. ஒவ்வொரு விஷயத்தையும் நினைக்கும் போதெல்லாம் காலம் எப்படி ஓடுதுன்னு ஆச்சரியமா இருக்கும். 80சதவிகித காலம் முடிஞ்சிடுச்சு. இன்னும் 20 சதவிகித காலமும் சீக்கிரமே நல்லபடியா முடியணும்னு நினைக்கிறேன். 

படம் எடுக்கவேண்டியது எங்க  கடமை. அதை விமர்சிக்கிறது பத்திரிகையாளர் பொறுப்பு. விமர்சிக்கும்போது பயன்படுத்தும் வார்த்தையில் கவனம் வேண்டும். மனதை காயப்படுத்தாத வகையில் விமர்சியுங்கள். அதுக்கு ஒரு குட்டிக் கதை சொல்றேன். 

‘ ஓர் ஊர்ல ராஜா ஒருத்தர் இருந்தார். அவருக்கு பிள்ளை பாக்கியம் இல்லைன்னு பல கோவில்களுக்கு போய் வழிபட்டிருக்கார். 30 வருடம் கழிச்சி ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கு.  எல்லா ஜோசியரையும் கூப்பிட்டு ஜோசியம் பார்க்கச் சொல்லியிருக்கார் ராஜா. எல்லாருமே இந்த குழந்தையால்தான் உங்களுக்கு மரணம்னு சொல்லியிருக்காங்க. உடனே எல்லா ஜோசியரையும் சிறைபிடித்து 10 நாட்கள்ல தலையைத் துண்டிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கார் ராஜா. அடுத்த நாள் இன்னொரு ஜோசியர் வந்திருக்கார். அவர், ‘இந்தக் குழந்தை உங்களை விட 10 மடங்கு சிறந்த மன்னரா இருக்கும். பல பெயரும், புகழும் வாங்கும்’னு சொல்லவும் ராஜாவுக்கு செம குஷி. என்ன வரம் வேண்டும் கேள்னு சொல்லியிருக்கார் ராஜா. உடனே அந்த ஜோசியர், ‘சிறைபிடித்திருக்கும் அந்த ஜோசியர்களை விடுவிங்கனு சொல்லியிருக்கார். அதுமாதிரி தான், என்ன சொல்லணுமோ அதை மட்டும்தான் சொல்லணும். எதை மற்றவங்க விரும்புறாங்களோ அதை மட்டும் சொன்னாலே போதும். உங்களால எந்த மனுஷனும் கஷ்டப்பட்டுவிடக் கூடாது.

சினிமா எடுக்கும் போது,  தயாரிப்பாளர்கள் மட்டுமே சம்பாதிக்கணும்னு நினைக்கக்கூடாது.  எல்லோருக்குமே இலாபம் கிடைக்கணும். ஆனா படத்தை விற்க, பல வித்தைகளை தயாரிப்பாளர்கள் காட்டுவாங்க. அதையெல்லாம் பார்த்து விநியோகஸ்தர்கள் ஏமாந்துவிடக்கூடாது. படம் வாங்கிட்டு நஷ்டமாகிடுச்சுன்னும் சொல்லக்கூடாது.  எல்லாருமே நல்லா இருக்கணும்னா, எல்லாரையுமே அனுசரிச்சுப் போகணும் அவ்வளவுதான்” என்று கூறினார் ரஜினிகாந்த்

-முத்து பகவத்- 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!