Published:Updated:

பாகிஸ்தான் மேஜருக்கு பாராட்டுக் கடிதம் எழுதிய இந்திய மேஜர்! ‘ 1971 Beyond Borders’ படம் எப்படி?

Vikatan
பாகிஸ்தான் மேஜருக்கு பாராட்டுக் கடிதம் எழுதிய இந்திய மேஜர்! ‘ 1971 Beyond Borders’ படம் எப்படி?
பாகிஸ்தான் மேஜருக்கு பாராட்டுக் கடிதம் எழுதிய இந்திய மேஜர்! ‘ 1971 Beyond Borders’ படம் எப்படி?

 'இந்திய தேசம் இது... எங்கள் தேசம் இது' என தேசப்பற்றை ஊற்றிவளர்க்கும் மேஜர் ரவி இயக்கத்தில் மற்றுமோர்  இந்தியா - பாகிஸ்தான் போர் களத்தைச் சொல்லும் மலையாள சினிமா - 1971: Beyond Borders.

2017-ம் ஆண்டு UN மிஷனுக்காக மேஜர் சகாதேவன் (மோகன்லால்) தலைமையில் இந்திய ராணுவ வீரர்கள் ஜார்ஜியாவில் முகாமிட்டிருந்த நேரம். பாகிஸ்தான் ராணுவ பெட்டாலியன்களை தீவிரவாதிகளிடமிருந்து  இந்திய ராணுவப்படை காப்பாற்றுகிறது. இந்திய பெட்டாலியன் தினத்திற்காக பாகிஸ்தான் ராணுவ குழுவினரை அழைக்கிறார் மோகன்லால். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் மேஜர், "1971ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் என் தந்தையைப் பாராட்டி கடிதம் எழுதியவர் ஓர் இந்திய மேஜர்தான்” என்று பெருமையாகச் சொல்ல, தன் டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்தபடி மோகன்லால் சொல்வார்:  “உன்  தந்தையை கொன்றதும், அந்தக் கடிதத்தை எழுதியதும் என் தந்தை மேஜர் மகாதேவன்தான்”. அங்கேயே படம் அடுத்த கியருக்குத் தாவுகிறது.

தற்போதைய மேஜர் சகாதேவனாகவும், அவரது அப்பா மகாதேவனாகவும் இரட்டை வேடம் மோகன்லாலுக்கு.  1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் எல்லையில் என்ன நடந்தது..  பாகிஸ்தான் ராணுவ மேஜரைப் பாராட்டி  மோகன்லால் ஏன் கடிதம் எழுதினார் என்ற போர்கால சம்பவங்கள் தான் ‘1971 : Beyond Borders” 

மோகன்லாலின் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திற்கு தொடர்ந்து இதே பெயர்தான். மேஜர் மகாதேவன்! அந்த கதாபாத்திரத்தில்  மோகன்லால் நடித்திருக்கும் நான்காவது படம் இது. இந்த நான்கு படங்களுமே இயக்குநர் ’மேஜர் ரவி’ இயக்கம். ஏற்கெனவே நடித்த கதாபத்திரமென்பதால் ஒவ்வொரு காட்சியில் கச்சிதமாக பொருந்துகிறார் மோகன்லால். போர் வீரர்களிடம் கண்டிப்பும், சொந்த ஊரில் ரகளையான ஜாலி பேர்வழியாகவும், ஆஷா சரத்துடன் ரொமான்ஸிலும் லாலேட்டன் லாலேட்டன் தான். 

கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் எதார்த்த சினிமாவாகவும், கமர்ஷியலாகவும் வெளியான ‘ஒப்பம்’, ‘புலிமுருகன்’, ‘முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்’ என தொட்டபடமெல்லாம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.   அதைத்தொடர்ந்து வித்தியாசமாக வேறு ஜானருக்குத் தாவி அதிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.

1971-ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு மேஜர் ரவி இப்படத்தின் திரைக்கதையை உருவாகியிருக்கிறார்.  ‘சண்டையிடும் போது மட்டும்தான் எதிரிகள்,  போர் முடிந்ததும் என்றைக்குமே இரண்டு நாட்டினரும் நண்பர்கள்தான்’ என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். பாகிஸ்தான் தீவிரவாதிகளை படங்களில் பிளந்துகட்டுவார் மேஜர் ரவி. ஆனால் இவரின் முந்தையப் படமான ’பிக்கெட் 43’ மற்றும் இந்தப் படமும் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அன்பையும் நட்பையும் சொல்லிய விதத்தில் சல்யூட் மேஜர். 

பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக அருனோடே சிங் நடித்திருக்கிறார். இந்தியப் போர் கைதிகளை துன்புறுத்தும் சக அதிகாரியின் மீது கோபம் காட்டும் காட்சிகள், மனைவியுடனான காதல் காட்சிகள், தன் நாட்டுக்காக போராடும் காட்சிகள் என்று   மோகன்லாலுக்கு இணையாக கெத்து காட்டுகிறது இவரின் நடிப்பு. 

படத்தில் மூன்றாவது முக்கிய கதாபாத்திரம் அல்லு சிரிஸ். அல்லு அர்ஜூனின் சகோதரர்.தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் கௌரவம் படத்தில் நடித்தவர் . படத்தில் பீரங்கி அதிகாரியாக,  நடிப்பிலும், தேசப்பற்றிலும் அண்ணனைப் போலவே நடிக்கிறார். போரில் அல்லு சிரிஸின் பீரங்கியை பாகிஸ்தான் ராணுவ பீரங்கிகள் சுற்றிவழைக்கும் போது, அந்த பதற்றத்தை நடிப்பால் பார்வையாளர்களின் மீது கடத்துகிறார். வெல்டன் ப்ரோ! வெல்கம்!! 

இந்திய எல்லையில் போரிட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மிலிட்டரிகாரனின் வீட்டிலும் பெண்கள் கண்ணீருடன் காத்திருப்பார்கள் என அவர்களின் வேதனையை சொன்னதிலும் பாகிஸ்தானை நட்பு நாடாகக் காட்டிய இடத்திலும் தனித்து மிளிர்கிறார் மேஜர் ரவி. 

கமர்ஷியலுக்காக அப்பாவும், மகனும் மோகன்லாலாக நடித்திருப்பது, போர்களத்தில் கூட மோகன்லால் ஒரு அடிகூட விழாமல் மேக்கப் கலையாமல் சுற்றித்திரிவது என சில குறைகள் இருந்தாலும் ரசிக்கவைக்கிறது இந்த 1971. 

கடந்த வாரம் மம்முக்காவின் மாஸ் ஆக்‌ஷன்  ‘தி கிரேட் ஃபாதர்’ என்றால், இந்த வாரம் மகாதேவனின் ‘1971’. சில குறைகளும், நிறைகளும் இருந்தாலுமே இரண்டுமே பக்கா ஆக்‌ஷன்.. பரபர.. அதிரடி! 

Vikatan