Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“ ’நான் கடவுள்’ வில்லன் போல மக்களை 'உருப்படி'களாகப் பார்க்கின்றன கட்சிகள்!'' - ராஜூ முருகன்

தொண்டன்

பொழுதுபோக்கையும் தாண்டி, சமூக அக்கறையுடன்  திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் சமுத்திரக்கனி. ‘அப்பா’ படத்தைத்தொடர்ந்து அவரது இயக்கத்தில்  அடுத்த ரிலீஸ் ’தொண்டன்’. இப்படத்திற்கான இசை மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில், சமகால அரசியலும் அலசப்பட்டது. சினிமா பிரபலங்களின் அந்தப் பகிர்தல்கள்  இங்கே.. 

ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர்

"ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று தெரியாத பல ஆயிரம் இளைஞர்கள் கூட, தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியது.. வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் அல்ல. இங்கிருந்த அடிமைத்தனத்துக்குத்தான். கடந்த 30 ஆண்டுகளாக இங்கே நடக்கும் அவலங்களை வாய் திறந்துகூட பேச முடியவில்லையே என்று ஏங்கிக்கிடந்த கூட்டம்தான், ஜல்லிக்கட்டுக்காகப் பொங்கி எழுந்தது.  சமுத்திரக்கனி, தன்னுடைய எல்லாக் கோபத்தையும் ஒவ்வொரு படத்திலேயும் சரி, பொதுமக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும் சரி தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருந்தார். அந்தக் குரல், இந்த 'தொண்டனி’லும் எதிரொலிக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியை விட, அதிக கலெக்ஷன் 'தொண்டனு'க்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்."

கவிஞர் யுகபாரதி, பாடலாசிரியர்

"தலைவர்கள் மேல் இருக்கக் கூடிய நம்பிக்கையை இழந்துவிட்டு, தொண்டன் எல்லாம் தலைவன் ஆகிக்கொண்டு இருக்கக்கூடிய நேரத்தில் 'தொண்டன்' என்ற திரைப்படம் வருகிறது. தொண்டன் என்றால், தன்கூட இருப்பவனை தலைவன் ஆக்கிவிட்டு, கீழேயே இருக்கக்கூடியவன்தான் தொண்டன். அந்த வகையில், சமுத்திரக்கனி ஆகச்சிறந்த தொண்டன். பாஜக தமிழிசை மாதிரி, ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக இயக்குநர் ராஜுமுருகன், ஏதேதோ சொல்லிக்கொண்டே வருகிறார். அதெல்லாம் அப்படியே நடந்துகொண்டே வருகிறது. ஞானவேல் ராஜா பேசும்போது சொன்னார், 'தொண்டன்' படத்தின் கலெக்‌ஷன், ஆர்.கே.நகர் கலெக்‌ஷனைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்றார். நடப்பது எலக்ஷன்ங்க. கலெக்‌ஷன்னா... எந்த கலெக்‌ஷன்?, மக்களுக்கு வர கலெக்‌ஷனா?, இல்ல ஜெயிச்சதுக்கு அப்பறம் அவுங்க பண்ணப்போற கலெக்‌ஷனா? எதுனு தெளிவாக சொல்லுங்க. சினிமாவுக்கு வெளியே இருக்கூடிய விசயங்களை எல்லாம் பேசக்கூடிய படமாக இது மாறியிருப்பது முக்கியமான விசயம்.

இங்கே போராடி வந்தவர்கள்தான் எம்.ஜி.ஆரும்., கருணாநிதியும். இன்னும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம், போராடித்தான் வந்திருக்கிறார்கள். இப்போது போராடுவதற்கு தலைவர்களைவிட, தொண்டர்கள்தான் அதிகம் தேவைப்படுகிறார்கள். 'தொண்டனு’ க்கு என் வாழ்த்துக்கள்!."   

தொண்டன் சமுத்திரக்கனி

ராஜுமுருகன், இயக்குநர்

"ஒரு தியானத்துக்கும் - சபதத்துக்கும் நடுவில் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்துகொண்டு இருக்குற இந்த நேரத்தில், தொண்டன் 'வருகிறான்'. நான் அரசியல் பேச விரும்பவில்லை. அப்படிப் பேசுவது முழுக்க முழுக்க என் சொந்த கருத்துதான்.  

‘முட்டாள்கள் நிறைந்த சமூகத்தை, அயோக்கியர்கள் ஆள்வார்கள்!’ என்று பெரியார் ஒருமுறை சொன்னார். அப்படிதான், கடந்த 50 ஆண்டுகளாகவே தொண்டர்களையும், மக்களையும் முட்டாள்களாகவே வைத்து நம்மை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். இப்படியான ஒரு சூழலில், கடந்த ஆண்டு.. இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடந்தது தமிழ்நாட்டில்தான். சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டங்கள் நடைபெற்றதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இந்த நிகழ்வை வைத்து.. தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான ஜனநாயகம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வதா, இல்லை.. தமிழ்நாட்டில்தான் அதிக பிரச்னைகள் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை. தொடர்ந்து, இந்தியாவில் புறக்கணிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. 

'நான் கடவுள்' படத்தில், தாண்டவன் என்ற கதாபாத்திரம், ஒரு குறிப்பிட்ட சில மனிதர்களை விலைபேசும் தோரணையாகத்தான் இன்றைய அரசியல் இருக்கிறது. தாண்டவனிடமிருந்து, அந்த மனிதர்களை மொத்த விலைக்கு வாங்கிச் செல்லும் விதமாகத் தேசியக் கட்சிகளும், தாண்டவனாக மாநிலக் கட்சியும் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இடைத் தேர்தலை நிறுத்துவதால், யாருக்கும் எந்தப் பலனும் கிடைத்துவிடப் போவதில்லை. தஞ்சாவூர், அரவக்குறிச்சியிலும் அப்படி  தான் தேர்தல் நிறுத்தினார்கள். அப்படி நிறுத்தப்பட்டதால், அங்கே நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?, திரும்பவும் தேர்தல் நேர்மையாக நடந்ததா என்றால், அதுவும் இல்லை. 

இங்கே, கல்வித் திட்டதில் இருக்கக்கூடிய பிரச்னையை சரிசெய்யாமல், பரீட்சையை நிறுத்துவதால் ஒரு பயனும் இல்லை. அப்படித்தான் இது மாதிரியான விசயங்கள், அர்த்தமற்று தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. கல்வித் திட்டத்தை மாற்றுவதற்கான, இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கான, இந்த அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான செயல்பாடுகள் 'தொண்டன்' படம் போன்ற சினிமாவால் நடக்கிறது. ஒரு சினிமாவால் சமூக மாற்றம் நடந்துவிடுமா,  ஒரு புரட்சி நடந்துவிடுமா என்று கேட்டால், எனக்கும் அதில் நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால், இது ஒரு செயல்பாடு. எப்போதுமே உலகம் முழுவதும்.. பெரிய அரசியல் மாற்றங்களும், சமூக மாற்றங்களும் நடக்கும்போது, அதற்குக் கலை ஒரு முக்கிய ஆயுதமாக இருந்திருக்கிறது. அப்படி, இந்தச் சமூக மாற்றத்துக்கான ஒரு ஆயுதமாக, கலையைப் பயன்படுத்துபவர்களில், சமுத்திரக்கனி மிக முக்கியமானவர். இப்படியான தனது தொடர் செயல்பாடுகளால், இன்னும் 5, 10 ஆண்டுகளில் தமிழத்தில் ஒரு சமூக மாற்றம் நிகழும் என நம்புகிறேன். இது ஒரு நம்பிக்கை. தனது கோபத்தையும், வருத்தத்தையும், பேரன்பையும் திரைப்படங்களில் பதிவு செய்துகொண்டே வரும் சமுத்திரக்கனி, தமிழ் சினிமாவின் ஆண் தேவதை.”  

- ரா.அருள் வளன் அரசு
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement