விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன் இணையும்... மாமனிதன்!

விஜய் சேதுபதி, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ தொடங்கி ‘டிஷ்யூம்’, ‘புதுப்பேட்டை’, ‘லீ’, ‘அஞ்சாதே’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பலே பாண்டியா’... என கிட்டத்தட்ட டஜன் படங்களில் சிறிதும் பெரிதுமான கேரக்டர்களில் முகம் காட்டி இருந்தாலும் அவர் ஹீரோவாக அறிமுகமான படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’. இந்தப்படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. தேனி மாவட்டத்தை கதைக்களமாகக் கொண்ட அந்தப்படம் தாய்க்கும் மகனுக்குமான அன்பைப் பேசியது. விமர்சனம் ரீதியிலும் வசூலிலும் வெற்றி பெற்ற அந்தப் படம் சிறந்த மாநில மொழி திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பாடலாசிரியர் ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருது பட்டியலில் இடம்பிடித்தது. 

விஜய் சேதுபதி

அதன்பிறகு விஜய் சேதுபதிக்கு  ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ என ஏறுமுகம்தான். அதைத்தொடர்ந்து ‘இயக்குநர் சீனுராமசாமி-விஜய் சேதுபதி வெற்றி இணை ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் மூலம் இணைந்தது. அதுவும் தேனி மாவட்டத்தை களமாகக் கொண்ட கதைதான். லிங்குசாமியின் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள அந்தப் படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. 

தொடர்ந்து ‘தர்மதுரை’ படத்தின் மூலம் இந்த இணை மீண்டும் இணைந்தது. இந்தப் படத்தின் களமும் தேனி மாவட்டம்தான்.  ராதிகா, தமன்னா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, யுவன் ஷங்கர் ராஜா - கவிஞர் வைரமுத்து இணையின் பாடல்கள். “எந்தப்பக்கம் காணும் போதும் வானம் ஒன்று...’ என்ற இந்தப்படப் பாடலை எழுதிய வைரமுத்துவுக்கு கடந்த ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் விஜய் சேதுபதி ‘விக்ரம் வேதா’, ‘கருப்பன்’, ‘அநீதிக் கதைகள்’ உள்பட அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இன்னும் அவரின் அரை டஜன் படங்கள் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் அவரின் ஆஸ்தான இயக்குநர் சீனுராமசாமியும் தன் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் தீவிரமாக உள்ளார். தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது. வைரமுத்து-யுவன்சங்கராஜா இசை இணை இந்தப் படத்திலும் தொடர்கிறதாம். இன்னொரு சர்ப்ரைஸ் செய்தி, இந்தப் படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிக்கிறாராம். 

விஜய் சேதுபதி

யுவன் ஷங்கர் ராஜா ஏற்கெனவே ‘U1 ரெகார்ட்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஆடியோ லேபிள் ஆரம்பித்து உள்ளார். அதில் விதார்த் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’, ஸ்ரீகணேஷ் இயக்கிய ‘8 தோட்டாக்கள்’ ஆகிய படங்களின் ஆடியோவை வாங்கி உள்ளார். மேலும் தன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்து விஜய் யேசுதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘படை வீரன்’ படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்கியுள்ளார். இதற்கிடையில் சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘தொண்டன்’ படத்தின் ஆடியோவை ‘நாடோடிகள் மியூசிக்’ உடன் இணைந்து சமீபத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது சொந்தமாக படத் தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்துள்ள அவர் சீனுராமசாமி-விஜய் சேதுபதி காம்பினேஷன் இணையும் படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்துக்கு ‘மாமனிதன்’ என பெயர் வைத்துள்ளனர்.

- ம.கா.செந்தில்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!