'என்னாகும் தனுஷ் வழக்கு? - திகிலில் கஸ்தூரிராஜா'

டிகர் தனுஷ் வழக்கு இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது.  தீர்ப்பை எதிர்பார்த்து தனுஷ் தரப்பு படபடப்புடன் காத்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்,  சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விளம்பரத்துக்காக போடுகிறார்கள் என்று எல்லோராலும் அலட்சியமாக பார்க்கப்பட்டது. ஆனால், மேலூர் மாஜிஸ்திரேட், ‘’இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதால் நடிகர் தனுஷ் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று’’ உத்தரவிட, அப்போதுதான் வழக்கின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் தெரிந்தது. அதனால் இன்னும் பரபரப்பானது.

கதிரேசன் - மீனாட்சி தம்பதி

இந்த நிலையில்தான், மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, என்னை அவர்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் எந்த உண்மையும் இல்லை, அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

தனுஷ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, கதிரேசன் தரப்பினர், தனுஷ் தங்கள் மகன்தான் என்று ஏகப்பட்ட ஆதாரங்களை தாக்கல் செய்தனர். அதுமட்டுமில்லாமல் தனுஷின் உடலிலுள்ள அங்க அடையாளங்களையும் குறிப்பிட்டனர். இதை பரிசீலித்த நீதிபதி, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவிடம், ‘தனுஷ் தங்கள் மகன்தான் என்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றார்.

கலைச்செல்வன் - தனுஷின் இளவயது புகைப்படம் என்று சொல்லப்படுவது

அதன்பின்பு கஸ்தூரிராஜா தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் முரண்பாடாக இருக்கிறது என்று கதிரேசன் தரப்பு சந்தேகம் கிளப்ப, கடைசியாக தனுஷின் உடலில் அங்க (மச்ச) அடையாளங்களைசக் சரிபார்க்க உத்தரவிட்டார். அதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக தனுஷ் வருகை தந்தது அனைவரும் அறிந்ததே.

மதுரை மருத்துவக்கலூரி டீன் தலைமையிலான டாக்டர்கள் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே கதிரேசன் தம்பதியினர்  தனுஷிற்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடவேண்டும் என்று மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை மார்ச் 2-ம் தேதி விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை மேலூர் நீதிமன்றத்தின் விசாரணைக்குத் தடை விதித்தார்.

இதற்கிடையே மருத்துவர் தாக்கல் செய்த அறிக்கையில் கதிரேசன் தம்பதியினர் குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடம்பில் இல்லையென்றாலும், சில தழும்புகள் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்த தகவல் கசிந்ததால், வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. இதற்கிடையே கதிரேசன் தரப்பினரிடம் சிலர் வழக்கை வாபஸ் வாங்கும்படி மிரட்டியதாக தகவல் வந்தது. இல்லை, ‘கதிரேசன் தரப்பினர்தான் பணம் கேட்டு பேரம் பேசுகிறார்கள்’ என்று தனுஷின் வழக்கறிஞர் சாமிநாதன் குற்றம் சாட்டினார்.

இந்த மனு கடந்த 10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், ‘‘தனுஷ் தரப்பில் தாக்கல் செய்துள்ள பிறப்பு சான்றிதழ் போலியானது. தனுஷின் தந்தை கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் பெறப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ் வேறொருவருக்காக வழங்கப்பட்டது. தனுஷ் மற்றும் கஸ்தூரிராஜா ஆகிய இருவரும் தங்களது இயற்பெயரை மாற்றியதாக கூறியுள்ளனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே கஸ்தூரிராஜா என்பதுதான் அவரது இயற்பெயராக உள்ளது. கெசட்டில் பெயர் மாற்றியதாக காட்டிய ஆதாராங்களில் முரண்பாடு உள்ளது, ரேஷன் கார்டு அடிப்படையில் கஸ்தூரிராஜாவின் வயது வேறுபடுகிறது,’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘மேலூர் கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பிறந்த தேதி மாறுபடுகிறது. நீங்கள் கூறும் அடையாளங்கள் நடிகர் தனுஷிடம் இல்லையென டாக்டர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது’ என்றார்.

இதற்கு வழக்கறிஞர்  டைட்டஸ், ‘’அங்க அடையாளங்களை வெளியில் தெரியாமல் அழிக்க முடியும் என தடயவியல் தொடர்பான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’’  எனக்கூறி அந்த புத்தகத்தை நீதிபதியிடம் அளித்தார். ‘’இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தயாராக உள்ளோம். டிஎன்ஏ பரிசோதனைக்கும் நாங்கள் தயார். டாக்டர்களின் அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வரக்கூடாது’’ என்றார்.

வழக்கறிஞர் டைட்டஸ்

அப்போது  நீதிபதி, ‘’கிராமத்தில் ஆண்மகன் மிகப்பெரிய சொத்து. ஆனால், திருப்பத்தூர் விடுதியில் படித்தபோது, மகன் காணாமல் போனதும் ஏன் போலீசில் புகார் செய்யவில்லை’’ என்றார்.

அப்போது தனுஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் ராமகிருஷ்ணன், ‘’எதிர்தரப்பினர், காணாமல் போனதாக கூறும் மகனை கண்டுபிடிக்க 2002 முதல் 2016 வரை சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஜீவனாம்சம் கேட்டு வந்துள்ளனர். அவர்கள் தரப்பு வாதத்திற்குப் போதுமான ஆவணங்கள் இல்லை. அவர்கள் தரப்பிலான ஆவணங்களில் அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து முடிவெடுக்க வேண்டும். அதன்பிறகுதான் அவர்களது மனு நிலைக்கத்தக்கதா என்பதை முடிவு செய்ய முடியும். அப்படியே அவர்கள் ஜீவனாம்சம் கேட்கும் வழக்கை மேலூர் நீதிமன்றத்தில் நடத்த முடியாது. சென்னையில்தான் நடத்த வேண்டும்’’ என்றார்.

அப்போது பேசிய கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், ‘’கதிரேசன் தம்பதி தங்கள் மகன் காணாமல் போன நாளிலிருந்து தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். புகாரும் கொடுத்துள்ளார்கள். சென்னை சென்றபோது தனுஷை சந்திக்க விடவில்லை, ஏழைகளான அவர்களால் வேறு எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை. தற்போது  தனுஷ் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் நிறைய முரண்பாடு உள்ளது. நாயக்கரான கஸ்தூரிராஜா, தனுஷ் பள்ளி சான்றிதழில் எஸ்.சி. என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பற்றி விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

பொதுவாக இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருபவர்கள், ‘தனுஷ், காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன் என்று கதிரேசன் தம்பதி சொல்வது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது, ஆனால், தனுஷ் தங்கள் மகன்தான் என்று சொல்வதற்கு கஸ்தூரிராஜா சமர்பித்துள்ள பள்ளி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, பெயர் மாற்றம் செய்த கெசட், அனைத்தும் சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் இருப்பதாக’ சொல்கிறார்கள்.

நாம் கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸிடம் பேசினோம், ‘’தனுஷ் கதிரேசன் தம்பதியின் மகன் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம், தனுஷ் என்ற கலைச்செல்வனோடு படித்தவர்களைத் தேடி வருகிறோம். சாதி சான்றிதழ் விவகாரம் சாதாரண விஷயமில்லை. அதை விட மாட்டோம், என்ன தேவைக்காக பட்டியல் இனமென்று குறிப்பிட்டார். இல்லை வேறொருவரின் சர்டிபிகேட்டை காட்டியுள்ளார்களா என்பதையும் விசாரிக்கச் சொல்வோம். கஸ்தூரி ராஜா, தனுஷ் பயன்படுத்தும் வங்கி கணக்குகள், சினிமா ஒப்பந்தங்கள், பாஸ்போர்ட்டுகளில் என்ன பெயரில், எந்த முகவரியில் இருக்கிறது என்பதையும், இந்த வழக்கின் வக்காலத்தில் போடப்பட்டிருக்கும் கையெழுத்து தனுஷுடையதுதானா என்ற சந்தேகமும் உள்ளது. அனைத்தையும் விசாரிக்கச் சொல்வோம். அப்புறம் தெரியும் அனைத்து உண்மைகளும் ’’ என்றார்.

கலைச்செல்வனின் (தனுஷ்) கையெழுத்து

சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர்,  தான் மறைந்த ஜெயலலிதாவின்  மகன்  எனவும், 1986 ஆம் ஆண்டு காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு தன்னை தத்துக் கொடுத்துவிட்டதாகவும், தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்களை தன்வசம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி,  மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல்செய்த ஆவணங்கள் அனைத்தின் நம்பகத்தன்மையை  விசாரிக்க உத்தரவிட்டார். ஆவணங்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டது தெரிந்ததும், கிருஷ்ணமூர்த்தியை உடனே கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கிருஷ்ணமூர்த்தி ஜெயலலிதாவின் வாரிசு என்று சொன்னதற்காகச் சிறை செல்லவில்லை. அதற்கு ஆதாரமாக காட்டிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதால் தான் சிறைக்கு சென்றார்.

இந்த வழக்கிலும் அதுபோன்ற அதிரடி உத்தரவு வருமா... என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- செ.சல்மான் 

படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!