Published:Updated:

’இன்னும் ஒரு மாதத்தில் பைரஸி ஒழியும்!’ - எப்படிச் சொல்கிறார் சி.வி. குமார்?

முத்து பகவத்
’இன்னும் ஒரு மாதத்தில் பைரஸி ஒழியும்!’ - எப்படிச் சொல்கிறார் சி.வி. குமார்?
’இன்னும் ஒரு மாதத்தில் பைரஸி ஒழியும்!’ - எப்படிச் சொல்கிறார் சி.வி. குமார்?

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர் சி.வி.குமாரின் 'திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் முதல் படமும் ‘அட்டகத்தி’தான். இதைத்தொடர்ந்து,  ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுபட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ‘இறைவி’ உட்பட 10 படங்களுக்கு மேல் தயாரித்துவிட்டார் சி.வி.குமார். இவர் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.  நலன்குமாரசாமி வசனம் மற்றும் திரைக்கதை எழுத, சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மாயவன்’. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

மாநகரம் படத்தில் பெயர் வாங்கிய ஹீரோ சந்தீப் கிஷன்தான் இதிலும் ஹீரோ. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வில்லன்களாக டேனியல் பாலாஜி மற்றும் ஜாக்கி ஷெரஃப். மனோதத்துவ நிபுணராக நாயகி லாவண்யா திரிபதி நடித்திருக்கிறார்கள். சீரியல் கொலைகளுக்கு காரணமான சைக்கோ கில்லர் ‘மாயவன்’ யார் எனச் சொல்லும் கதைக்களம். ‘மாயவன்’ இசை வெளியீட்டில், படக்குழுவினர் என்ன சொன்னாங்கன்னு தொடர்ந்து படிங்க...! 

திரைக்கதை & வசனம் - நலன்குமாரசாமி: 

சி.வி.குமார் நிறைய ஒன்-லைன்கள் சொல்லுவார். அவர் சொன்னக் கதைகளில் என்னை ஈர்த்தக் கதை‘மாயவன்’. ஆனா, அவரே இயக்குவார்னுலாம் யோசிக்கலை. திடீர்னு டைரக்‌ஷனை ஆரம்பிச்சிட்டார். இடையில் திருப்தி இல்லாம படத்தையும் பாதியிலேயே நிப்பாட்டிட்டார். உடனே, சி.வி.குமார் சாரிடம் பேசி, நானே திரைக்கதை எழுதித்தருவதா சொன்னேன். அதன் பிறகுதான்  திரைக்கதையும், வசனமும் எழுத கமிட்டானேன். நல்ல கதைன்னா, ஸ்கிர்ப்ட் எழுதவும் நான் ரெடி தான். 

இசையமைப்பாளர் - ஜிப்ரான்: 

கதையைத் தேர்ந்தெடுத்துத்  தயாரிக்கிறதுங்கிறது மிகப்பெரிய கலை. அதை சரியா பண்ணக்கூடிய தயாரிப்பாளர் சி.வி. அவரோட எல்லா படங்களுக்கும் நானே இசையமைச்சிருக்கலாமேனு ஃபீல் பண்ணிருக்கேன். இப்போ சி.வி. சார் இயக்கும் படத்துக்கே இசையமைச்சிட்டேன். டைட்டில்லையே படம் தொடங்கிடும். பக்காவான ஸ்கிரிப்ட். பின்னணி இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்துச்சு. தமிழ் சினிமாவிற்கு ‘சம்திங் நியூ’ மாயவன். 

எடிட்டிங் - லியோ ஜான்பால்: 

‘அட்டகத்தி’ படத்துல தொடங்கி இப்போ வரைக்கும் சி.வி.குமார் சாரோட புரொடக்‌ஷன்ல வர எல்லா படத்துக்கும் நான் தான் எடிட்டர். எனக்கும், சி.வி.குமாருக்கும் நிறையவே சண்டை வரும். இரவு வரைக்கும் ஷூட்டிங் முடிச்சுட்டு வந்துட்டு, லேட் நைட்டுல என்னோட சண்டை போடுவார். எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணுவார். நிறைய உழைச்சிருக்கார். எது தேவையோ அதுமட்டும்தான் படத்தில் இருக்கும். குறிப்பா பின்னணி இசை நிச்சயம் டச் பண்ணும். அவர் இல்லைன்னா, இப்போ நான் இங்க இல்லை, எனக்கு ரொம்ப எமோஷனலான மேடை இது.

ஹீரோ - சந்தீப் கிஷன்: 

சி.வி.சார் எத்தனையோ ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன்களை அறிமுகப்படுத்தியிருக்கார். சி.வி. இயக்குநரா அறிமுகமாகும் படத்துல நான் ஹீரோ. அதுனாலேயே சுலபமா என்னை அவரால் மறந்துட முடியாது. அந்த அளவுக்கு தொந்தரவு பண்ணிருக்கேன். ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லாம, டெக்னிஷியன், உதவி இயக்குநர்கள்னு எல்லாரையுமே சரிசமமான மரியாதை கொடுப்பவர் சி.வி. எல்லோருடைய ஐடியாவையும் மதிக்கக் கூடியவர். ஸ்பாட்க்குப் போனா குறைஞ்சது 18 மணிநேரம் ஷூட்டிங் இருக்கும். நாலரை மணிநேரத்துக்கு டப்பிங் பேசினேன். ஆனா ஃபைனல் பார்த்தா 2.05 மணிநேரத்துக்கு எடிட் பண்ணிருந்தாங்க. இயக்குநருக்கும் எடிட்டருக்குமான அலைவரிசை   அப்போதான் புரிஞ்சது.

ஹீரோயின் - லாவண்யா  திரிபதி: 

இந்தப் படத்துக்காக என்னை ரெஃபர் பண்ணது சந்தீப் தான். கதைக் கேட்டதும் ரொம்பப் பிடிச்சது.  உடனே ‘ஓகே’ சொல்லிட்டேன். படப்பிடிப்புல நிறைய சந்தோஷங்கள் நிறைஞ்சிருந்தது. எந்த மொழியில் வேலை செய்யறோம்ங்கிறது கவலையில்லை. ஆனா நிறைய நல்ல படங்கள் பண்ணும். ‘பிரம்மன்’  படத்திற்குப் பிறகு இரண்டாவது தமிழ் வாய்ப்பு ‘மாயவன்’. ஃபீல் ஹாப்பி!

வில்லன் - டேனியல் பாலாஜி: 

ஸ்கிரிப்டை முதல்ல சொல்லும் போது செம ஆர்வமா இருந்தச்சு. ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனாலும் ஒரு டவுட் எனக்குள்ள இருந்துச்சு. 10 படத்துக்கு மேல தயாரிச்சவர், அந்த நேரத்தில் நடிக்கக் கூப்பிடலை. ஆனா திடீர்னு அவர் இயக்கும் படத்துக்கு ஏன் நடிக்க கூப்பிடணும்னு கேட்டேன். சி.வி. சாரிடமிருந்து வந்த பதில்‘வெள்ளையா இருக்குற வில்லன் வேண்டாம், வித்தியாசமான ஒரு வில்லன் வேணும், நடிப்பிலும் கூட...’னு சொல்லவும் செம ஹாப்பியாகிடுச்சு. இந்தப் படத்துல டேனியல் பாலாஜிக்கு ஒரே கேரக்டர் தான். ஆனா ரெண்டு விதமா நடிச்சிருக்கேன். அது என்னன்னு படத்துல பாருங்க.. .!

கதை & இயக்கம் & தயாரிப்பு - சி.வி.குமார்: 

சீரியல் கில்லிங் பண்ணும் கிரிமினலைக் கண்டுபிடிக்கும் கதை தான் ‘மாயவன்’. இயக்குநராகணும்கறது என் கனவா இருந்ததே இல்லை. வாழ்க்கைப் பயணத்துல போகுற போக்குல வாழ்றதுதான் என் பாலிசி. எல்லா இயக்குநர்களிடமும் நிறைய கதைகள் விவாதிச்சிட்டே இருப்பேன். எல்லோருமே இம்ப்ரெஸ்ஸான கதை ‘மாயவன்’. திடீர்னு முடிவெடுத்து இயக்குநராகிட்டேன். இவ்வளவு தூரம் வந்ததை நினைச்சாலே சர்ப்ரைஸா இருக்கு. கதை எழுதும் போது பாட்டு கிடையாது. ஆனா கதைக்கு ஏத்தமாதிரி இரண்டு பாட்டு மான்டேஜ் ஷாட்ல வரும். குறிப்பா பின்னணி இசை நிச்சயம் மிரட்டும். இந்தப் படத்தை மூன்று தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிச்சிருக்கோம். அதுக்கு காரணம், ஒரே தயாரிப்பாளரா ஒரு படத்தை தயார்செய்வது இன்றைய காலத்தில் இயலாத காரியம். ஹாலிவுட்டில் ஒரு படத்தை 10 ஸ்டூடியோஸ் சேர்ந்து தயாரிக்கிறாங்க. சீக்கிரமே தமிழ்லயும் அந்த ட்ரெண்ட் வரும். தயாரிப்பை விட இயக்கம் கொஞ்சம் கஷ்டமான வேலை தான். தயாரிப்பாளர் இயக்குநரா மாறும் போது அதைப் புரிஞ்சுக்க முடியுது. 

“உங்க ‘மாயவன்’ படம் ஆன்லைனில் ரிலீஸாவதைத் தடுத்துவிடுவீர்களா?” என்று கேட்டால், ‘கண்டிப்பா முதல் நாளே இணையத்திலும் வெளியாகத்தான் செய்யும். நாட்டுல போலீஸ் இருக்கு, இருந்தாலும் திருட்டு நடக்கத்தானே செய்யுது. அதுமாதிரி தான் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். நாம எந்த அளவுக்குப் பாதுகாப்பா இருந்துக்கணுமோ இருந்துக்க வேண்டியது தான்.  இன்னும் அதிகளவுக்கு எங்க படத்தைப் பாதுகாக்குறது பத்தி யோசிக்கிறோம். குறிப்பா புதிதாக பதவியேற்றுள்ள தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், முதல் வேலையா பைரஸியைத்தான் கையில் எடுத்துருக்காங்க. அதுக்காக மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்திட்டு இருக்காங்க. இன்னும் ஒரு மாசத்துல பைரஸி ஒழியும். முழுமையா இல்லாவிட்டாலும் 70% சதவீதமாகவது பைரஸி ஒழிஞ்சிடும்.

-முத்து பகவத்-  

முத்து பகவத்

Cinema Reporter