Published:Updated:

’’நடிகைகளை பக்கத்துல வைச்சுட்டு டபுள் மீனிங் வசனங்கள் வேண்டாம் ப்ளிஸ்!” ’மகளிருக்காக’ ஜோதிகா

முத்து பகவத்
’’நடிகைகளை பக்கத்துல வைச்சுட்டு டபுள் மீனிங் வசனங்கள் வேண்டாம் ப்ளிஸ்!” ’மகளிருக்காக’ ஜோதிகா
’’நடிகைகளை பக்கத்துல வைச்சுட்டு டபுள் மீனிங் வசனங்கள் வேண்டாம் ப்ளிஸ்!” ’மகளிருக்காக’ ஜோதிகா

ஜோதிகாவின் நெக்ஸ்ட் ஃபிலிம் ‘மகளிர் மட்டும்’. ‘குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா, பானுப்பிரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு இன்று நடைபெற்றது. ஜிப்ரானின் இசை மற்றும் சூர்யாவின் ‘2டி நிறுவனம்’ தயாரிப்பு என்பதால் படத்துக்கு ஏகபோக வரவேற்பு. 

இயக்குநர்களான பாண்டிராஜ், மகிழ்திருமேனி, தரணி, ஜோதிகாவின் சகோதரி நக்மா மற்றும் சிவகுமாரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட். சிறப்பு விருந்தினர்கள் இசையை வெளியிடுவதே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் கலாசாரம். ஆனால், இன்று பிரபலங்களின் அம்மாக்கள் இசையை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினர். பெண்களுக்கான படம் என்பதால் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் பிரம்மாவின் தாயார் இசைத்தட்டை வெளியிட்டனர். இந்தப் படத்துக்காக பாடல் ஒன்றும் பாடியுள்ளார் நடிகர் கார்த்தி. அதுமட்டுமின்றி பெண்களுக்கான மெசேஜ் ஒன்றையும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கூறினார் ஜோதிகா. கார்த்தி பாடிய அந்தப் பாடல் பற்றியும், ஜோ-வின் மெசேஜ் என்னவென்றும் தெரிந்துகொள்ளவும் தொடர்ந்து படியுங்கள்... 

சிவகுமார்: 

‘போதைக்காகப் படைக்கப்பட்ட பொருள் பெண்கள்’னு சொன்னவர் சாக்ரடீஸ். அரிஸ்டாட்டில், `ஆள்பவன் ஆண், அடிமையாக வாழப் பிறந்தவள் பெண்’னு சொன்னார். வளர்ப்புத் தாய் கெளதமியை, ஆஸ்ரமத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்த புத்தர், ‘பெண்களை இங்கு சேர்த்தால் புத்த மதம் ஆயிரம் ஆண்டுக்குள் அழியும்’னு சொன்னார்  என்பதெல்லாம் வரலாறு.  பெண்கள் எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டிருக்காங்கன்னு தெரியும். இதையெல்லாம் உடைத்தவர் பாரதி. இன்று ஜோ நடித்திருக்கும் கேரக்டரை, பல ஆண்டுகளுக்கு முன்னாடி பாரதியார் மட்டும்தான்  சரியா  சொல்லிருக்கார். கல்லூரியில் தொடங்கி மருத்துவம், வங்கின்னு எங்கே பார்த்தாலும் பெண்கள்தான். அரசுப் பேருந்திலிருந்து ஆகாயம் வரை பெண்கள் வந்துட்டாங்க. தாழியை மட்டும் கட்டிவிட்டு, பெண்களை இயந்திரங்களாக வைத்திருந்தது போதும். சம்பளமில்லாக் கொத்தடிமையாகப் பெண்கள் வாழ்ந்தது போதும். அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம்தான் ‘மகளிர் மட்டும்’. 

ஊர்வசி: 

இந்த டைட்டிலுக்கு உரிமையான பெண் நான். 1994-ல வந்த ‘மகளிர் மட்டும்’ பட நினைவுகள்தான் இந்தப் படத்திலும். நாசர்ங்கிற உண்மையான நடிகனை நம்பி உருவான படம். அப்போ படம் ஹிட்டாகுமாங்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்தச் சந்தேகத்தை உடைச்சு, படத்தை ஹிட்டாக்கியவர் கமல்ஹாசன் சார். `அந்த மாதிரி படம் என் வாழ்க்கையில் திரும்பவும் கிடைக்குமா!'னு என் மனசுல ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதைச் சாத்தியமாகியிருக்கார் சூர்யா. பெண்களுக்கான ஒரு படத்தில் மறுபடியும் நடிச்சுட்டேன். ரொம்பவே சந்தோஷம்.

கார்த்தி:  

தயாரிப்பாளரோட தம்பிங்கிறதால மேடை ஏறும்போது, நான் பாடின பாடலை ப்ளே பண்றீங்க. அதுவே ரியல் சிங்கர் வந்தா மட்டும், ட்ராக் லிஸ்ட்லதான் அவர் பாடலைத் தேடிப்பிடிக்கணும். இருந்தாலும் இந்த மாதிரி சின்ன மேடையில் நான் பாட விரும்பலை. பெரிய மேடையில் மட்டும்தான் பாடுவேன். சிங்கர் ராயல்டி கான்ட்ராக்ட் எல்லாம் கையெழுத்திடச் சொன்னாங்க. எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஒரு வருஷம் முறையா பாட்டு கத்துக்கிட்டது, இப்போ உதவுதுன்னு நினைக்கிறேன். இருந்தாலுமே ஒரு பாடகரோட வாய்ப்பைத் தடுக்குறோமோனு தோணுது. இந்த மாதிரியான படங்களுக்குத்தான் குழந்தைகளைக் கூட்டிட்டு வர முடியும். குறிப்பா, இந்தப் படத்தை பெண்கள் மிஸ் பண்ணாம பாருங்க. 

பிரம்மா:

என் அம்மா, மனைவி சம்பந்தப்பட்ட கதைதான் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படம் அவர்களின் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டது. அதனால் என் அம்மாவுக்கும் மனைவிக்கும் மரியாதையும் நன்றியும். எனக்கு ‘பெண்ணியம்’ என்ற வார்த்தையில் நம்பிக்கையே கிடையாது. இந்தச் சமூகம், ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பின் அடிப்படையில் உருவானது. ஜோவிடம் பேசும்போது பாதி நேரம் சூர்யா சாரோட பெயரைச் சொல்லிடுவாங்க. அதுமாதிரிதான் சூர்யாவுக்கும் ஜோ மீதான அன்பு. ஊர்வசி, சரண்யா, பானுப்பிரியா மூன்று பேர் மேலயும் முதல்ல பயம்தான் இருந்தது. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல குழந்தையாகவே மாறிட்டாங்க. இந்தப் படம் நிச்சயமா ‘செலிஃப்ரேஷன் ஆஃப் வுமன்’. 

ஜோதிகா: 

சிவகுமார் குடும்பத்தின் எல்லா ஆண்களுக்கும் என் முதல் நன்றி. அவங்களோட ஆதரவு இல்லாம நான் இங்கே நிற்க முடியாது. சூர்யாவோட அம்மா இப்போ எனக்கும் சேர்த்துச் சாப்பாடு கொடுத்து அனுப்புறாங்க. இந்தக் குடும்பத்தால்தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். கல்யாணம் ஆகி பத்து வருஷங்கள்ல ஒருமுறைதான் சூர்யாவுக்கு தோசை சுட்டுக் கொடுத்திருக்கேன். அந்தத் தோசையைச் சாப்பிட்டதுக்கு நன்றி சூர்யா. அதுதான் கடைசியும். டீ போட்டுத் தர்றேன்னு சொன்னாக்கூட, சூர்யா பயந்து ஓடிடுவார்.  

பெண்கள் சார்பா ஒரு மெசேஜ் சொல்லலாம்னு நினைக்கிறேன். இயக்குநர்கள் தங்களோட படங்களில் பெண்களுக்கு மரியாதை கொடுங்க. உங்க வீட்டுல, உங்களைச் சுற்றி இருக்கிற மாதிரியான கேரக்டர்களை நடிகைகளுக்கும் நடிக்கக் கொடுங்க. நடிகர்களுக்கு, கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் இருக்கு.  படத்தில் அவர்கள் பண்றதைத்தான் இன்றைய யூத் நிஜ வாழ்க்கையிலும் பண்றாங்க. இளைஞர்களின் மத்தியில் சினிமா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காமெடியன் பக்கத்துல நடிகைகளை நிற்க வெச்சுட்டு, டபுள் மீனிங் வசனங்கள் இனி வேண்டாம். அறிவுத்தனமான கேரக்டரா நடிகைகளுக்குக் கொடுங்க.  ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும். நாலு ஹீரோயின் எல்லாம் வேண்டாம். அதையேதான் இளைஞர்களும் நிஜ வாழ்க்கையில் யோசிப்பாங்க.

சூர்யா: 

எந்தவித யோசனையும் இல்லாமல் உடனே டைட்டிலைக் கொடுத்த கமல் சாருக்கு நன்றி. `சரசர சாரகாத்து' இப்பவும் காதுல ஒலிச்சுட்டுத்தான் இருக்கு. ஜிப்ரானின் இசை, விவேக் பாடல் வரிகள், பிரம்மாவின் இயக்கம்னு எல்லாமே சேர்ந்ததுதான் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படம் நிச்சயம் மகளிருக்கானது மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்களும் பார்க்கவேண்டிய படம். நல்ல புத்தகத்தைப் படிக்கும்போது கிடைக்கும் பரவசத்தைத்தான் நான் தயாரிக்கும் படங்கள்லயும் கொடுக்க விரும்புகிறேன். இந்தப் படம், நிச்சயம் கொண்டாட்டமாத்தான் இருக்கும். சின்ன பட்ஜெட் படத்துல கன்டென்ட்டும் நடிப்பும்தான் ரசிகர்களை ஈர்க்கும். இந்தப் படம் நிச்சயம் அந்த மாதிரிதான் இருக்கும்.

மகளிர் மட்டும் டிரெய்லருக்கு: 

-முத்து பகவத்-

முத்து பகவத்

Cinema Reporter