'சினிமாவை கெடுத்தது யாரு தெரியுமா..?’ - அலேக் ராதாரவி

தெர்மாக்கோல் சங்கிலி புங்கிலி கதவ தொற டீம்

ஜீவா – ஸ்ரீதிவ்யா முதல்முறையாக ஜோடி சேரும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. எம்.ஆர்.ராதாவின் பேரன் ‘ஐக்’ இயக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் அட்லீயின் A for Apple மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. கடந்த வாரம் வைகை அணையில் உள்ள நீர் ஆவியாவதை, தெர்மாக்கோல் மூலம் தடுக்க நினைத்த தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவின் செயல், நெட்டிசன்களால் கடும் கிண்டலடிக்கப்பட்டு வைரலானது. அந்தச் செயலைச் சுட்டிக்காட்டும்விதமாக, இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனும் ராதாரவியும் கலாய்த்துப் பேசியது, சமூக வலைதலங்களில் செம வைரலானது!

படத்தின் இசையை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன், ``இந்தப் படத்தின் இயக்குநர் ஐக் உள்பட இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் என்னுடன் பணியாற்றியவர்களே!  ‘விஸ்வரூபம்’ படத்திலும் அதன் இரண்டாம் பாகத்திலும் ஐக் என்னுடன் பணியாற்றியிருக்கிறார். இவர், மூன்றாம் தலைமுறை இயக்குநர். இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி. `ஆடி வந்த கதை' என்பதுபோல், இது `ஆவி வந்த கதை'. ஆனால், இதில் தெர்மாக்கோல் பயன்படுத்தவில்லை" என்றதும் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. சிரிப்பலை ஓய்ந்த பிறகு, "நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா... `ஆவி' என்றதும் எனக்கு தெர்மாக்கோல் ஞாபகம் வந்துவிட்டது" என்று நாசுக்காக அரசியல் பேசிக் கலாய்த்தார்.

தெர்மாக்கோல் கமல் - ராதாரவி

இந்த விழாவில் பல்வேறு துறைகளில் உள்ள வாரிசுகள் குறித்து  பேசியதுடன், இந்த விழாவை தன் குடும்ப விழாக்களின் ஒன்றாகக் கருதுவதாகவும் பேசினார் ராதாரவி. அவர் மேலும் பேசியதாவது... "வாரிசுகள்... அரசியல், சினிமா,  ஹோட்டல்னு எல்லா இடங்கள்லயும்  வருவாங்க. என்ன பண்றது... சினிமா கெட்டுப்போச்சு. இதெல்லாம் சொன்னா, 'சினிமா கெட்டுப்போனதுக்கு இவரே காரணம் - நடிகர் ராதாரவி'ன்னு தலைப்புச் செய்தியா வெச்சு போட்டுருவாங்க.  

என்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் பத்திரிகை மற்றும் இன்டர்நெட் நண்பர்கள், நான் எது சொன்னாலும் அதை உடனே வைரல் ஆக்கிடுறாங்க. இந்த விழாவுல எங்கள் குடும்ப உறுப்பினர்கள்தான் அதிகம். ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம், ஓஹோன்னு ஓடும். ஏன்னா, எங்க அப்பா தமிழ்நாடு முழுக்கக் குடும்பத்தைப் பரப்பிவிட்ருக்கார். இந்த தியேட்டர் உரிமையாளர்கூட எங்க உறவினர்தான்; ரொம்ப நெருக்கமானவர். என்ன பண்றது,  நடிகர் சங்கம் ரெண்டா பொளந்ததுக்குக் காரணமே இவர்தான்" என்று ஸ்டாண்ட் அப் காமெடி பாணியில் நகைச்சுவை கலந்த வார்த்தைகளை அள்ளி வீசினார்.

``நண்பர் கமல்ஹாசன் இப்பெல்லாம்  ரொம்பவே அரசியல் பேச ஆரம்பிச்சுட்டார். அவர் தெர்மாக்கோல் மேட்டர் பேசும்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அந்தத் தெர்மாக்கோலை அந்த அம்மா மேல போட்டிருந்தா, அவங்க ஆவி மேலே போயிருக்காதுல? அந்த தெர்மக்கோல் ஐடியா, அமைச்சர் செல்லூர் ராஜுக்கு அப்ப வராம இப்ப வந்ததுக்கு நான் ரொம்ப வருத்தப்படுறேன். ஆவியை இப்படி விட்டுட்டாங்களே!" என்று அரசியல் நிலவரங்களைப் பேசி அரங்கத்தையே கலகலக்கச் செய்தார் ராதாரவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!