மீண்டும் இணைந்த கமல்- ஆஸ்கர் ரவிச்சந்திரன்; ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் ஆகிறது! #Update

‘விஸ்வரூபம்-2’ பட தயாரிப்பில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஒதுங்கி இருந்த கமல்ஹாசனும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக சமீபத்தில் சந்தித்து பேசி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து ‘விஸ்வரூபம்-2’ விரைவில் ரிலீஸ் ஆகிறது. 

விஸ்வரூபம் 2

‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்தை கமல்ஹாசனே இயக்கி நடித்து இருந்தார். அந்தப் படத்தில் முஸ்லிம்களின் மனம் புண்படும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக்கூறி படத்தை ரிலீஸ் செய்ய முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்தப் பிரச்னை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு வெளியான ‘விஸ்வரூபம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து ‘விஸ்வரூபம்’ படத்தின் அடுத்த பாக அறிவிப்பும் வந்தது. கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் அந்தப்படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்தார். 2013ம் ஆண்டு தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. 

இதற்கிடையில் ஆஸ்கர் நிறுவனம் தயாரித்த அடுத்தடுத்த படங்கள் கமர்ஷியல் வெற்றியை பெறாததால் அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. அதனால் ‘விஸ்வரூபம்-2’ படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இதற்கிடையில் கமல்ஹாசன், ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு இருந்தார். இதனால் கமல்-ஆஸ்கர் இருதரப்புமே ‘விஸ்வரூப’த்தை அப்படியே விட்டுவிட்டு தங்களின் மற்ற வேலைகளில் கவனம் செலுததிக்கொண்டு இருநதனர். 

இந்தநிலையில் கமல் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில்தான் எதிர்பாராத விதமாக தன் வீட்டு மாடியில் இருநது தவறி விழுந்து கால் எலும்பு முறிந்து அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்தார். நல்ல ஓய்வு, முறையான உடற்பயிற்சி... என்று இந்த இடைப்பட்ட நாட்களில் கமல்ஹாசன் பூரணமாக குணமாகி வந்து இருக்கிறார். இந்த கட்டாய ஓய்வு அவரின் மனதுக்கும் உடலுக்கும் எப்படி உதவியாக இருந்ததோ அதேபோல ஒருவகையில் அது ‘விஸ்வரூபம்-2’க்கு உதவி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். 

இந்த இடைப்பட்ட காலத்தில், ‘நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் ஒரு படைப்பை மக்களின் பார்வைக்கு வைக்க தாமதமாவதில் எந்த நியாயமும் இல்லை’ என்பதை உணர்ந்து இரு பக்கமும் உள்ள நிதி, நீதி பற்றிய விஷயங்களை அமர்ந்து பேசலாம் என முடிவு செய்தனர். சமீபத்தில் காலமான கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும் இதையேதான் விரும்பினார். அதைத்தொடர்ந்து நடந்த கமல்ஹாசன்-ஆஸ்கர் ரவிச்சந்திரன் இருவரின் சந்திப்பு பலமுறை தொடர்ந்தது. அதில் பிரச்னைகள் பேசி முடிக்கப்பட்டு ‘விஸ்வரூபம்-2’ படத்துக்கான மீதியுள்ள 10 நாள் படப்பிடிப்பை முடித்து அதை எவ்வளவு சீக்கிரம் வெளியிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிட வேண்டும்’ என்று முடிவு செய்தனர். 

இருவரும் சமரசமானதைத் தொடர்ந்து மீதியுள்ள 10 நாள் படப்பிடிப்புக்கான வேலைகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. ‘சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமி’யில்தான் அந்த 10 நாள்கள் படப்பிடிப்பு எடுக்க வேண்டி உள்ளதாம். அங்கு தற்போது படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி விண்ணப்பித்து உள்ளனர். விரைவில் அந்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

‘விஸ்வரூபம்-2’வில் கிராஃபிக்ஸ் வேலைகள் கொஞ்சம் அதிகம். மீதியுள்ள 10 நாள் படப்பிடிப்பை முடித்து அந்த வீடியோவை கிராஃபிக்ஸுக்கு கொடுத்துவிட்டால் அவர்கள் அந்த வேலைகளை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த இடைவெளியில் ‘சபாஷ் நாயுடு’ படத்துக்கு மீதியுள்ள போர்ஷனுக்கான படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்பது கமலின் திட்டம். 

விபத்து, அண்ணனின் மறைவு... என சமீப நாட்களாக படப்பிடிப்பு பரபரப்பில் இருந்து ஒதுங்கி இருந்த உலக நாயகன் ‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ் நாயுடு’ திரைப்படங்கள், விஜய் டிவியில் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் மெகா நிகழ்ச்சி... என மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட் வருவதால் இவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

யாரென்று தெரிகிறதா... இவன் தீயென்று புரிகிறதா.. தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!