த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா.. 10 ஹீரோயின்களின் ரிப்போர்ட் கார்டு! | Top Heroines and how many years they being here

வெளியிடப்பட்ட நேரம்: 10:19 (03/05/2017)

கடைசி தொடர்பு:10:33 (03/05/2017)

த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா.. 10 ஹீரோயின்களின் ரிப்போர்ட் கார்டு!

த்ரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல், அனுஷ்கா என தமிழில் அதிகம் கவனத்துக்குரிய நடிகைகள் என்ட்ரி ஆகி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன  என்கிற லிஸ்ட் தான் இது. யார் யார் எத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்கள் எனப் பார்க்கலாமா...

சமந்தா:

அறிமுகமான படம்: விண்ணைத்தாண்டி வருவாயா (2010), ஏ மாய சேசாவே (2010)

 

Samantha

மாடலிங் டூ சினிமா ட்ராவல் சமந்தாவினுடையது. முதல் படமாக ரவிவர்மனின் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்தாலும், முதலில் வெளியானது 'விண்ணைத்தாண்டி வருவாயா' தான். 'விண்ணைத்தாண்டி வருவாயா' அதன் தெலுங்கு பைலிங்குவலான 'ஏ மாய சேசாவே' படமும் ஒரே நாளில் வெளியானது. தமிழ் தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரே நாளில் அறிமுகமானார் சமந்தா. தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி ஹிட் கொடுத்து முன்னணி நடிகையானார் சமந்தா. நிறைய படங்களில் பிஸியாகிவிட்ட சமந்தா சினிமாவுக்கு வந்து ஏழு வருடம் ஆகியிருக்கிறது.

 

ஸ்ருதிஹாசன்:

அறிமுகமான படம்: லக் (இந்தி- 2009)

தமிழில் அறிமுகமான படம்: ஏழாம் அறிவு (2011)

Shruthi

தமிழில் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமான ஸ்ருதிக்கு முதல் படம் 2009ல் இந்தியில் வெளியான 'லக்'. தமிழில் அறிமுகப் படமே நல்ல துவக்கத்தைக் கொடுத்தது. கூடவே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கில் கப்பர் சிங், ரேஸ்குர்ரம் ஆகிய படங்கள் ப்ளாக் பஸ்டராக வெற்றி ஸ்ருதியை தெலுங்கில் ஹிட்டாக்கியது. கூடவே இந்தியிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரமே அடுத்த இந்திப் பட ரிலீஸுக்காக காத்திருக்கும் ஸ்ருதி, ஜூலை 24 வந்ததும், நாயகியாக எட்டாவது ஆண்டை கடக்கிறார்.

ஹன்சிகா:

அறிமுகமான படம்: தேசமுதுரு (தெலுங்கு 2007)

தமிழில் அறிமுகமான படம்: மாப்பிள்ளை (2011)

Hansika

குழந்தை நட்சத்திரமாக 2003லிருந்து நடித்திருந்தாலும், ஹன்சிகாவின் அறிமுகப்படம் பூரி ஜெகன்நாத் இயக்கிய 'தேசமுதுரு'. தமிழில் சுராஜ் இயக்கிய 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு பிரபுதேவா இயக்கியிருந்த எங்கேயும் காதல் படம் மூலம் கவனிக்கப்பட, விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் இணைந்தார். ஹன்சிகா நடித்த பல படங்கள் தமிழ் தெலுங்கில் ஹிட்டடித்தது. விரைவில் மோகன் லால் நடிக்கும் 'வில்லன்' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் ஹன்சிகா நடிகையாகி 10 வருடம் ஆகியிருக்கிறது.

பார்வதி:

அறிமுகமான படம்: அவுட் ஆஃப் சிலபஸ் (மலையாளம் - 2006)

தமிழில் அறிமுகமான படம்: பூ (2008)

Parvathy

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த பார்வதிக்கு, மலையாளத்தில் விஸ்வநாதன் இயக்கிய அவுட் ஆஃப் சிலபஸ் படம் சினிமா அறிமுகம் தந்தது. சசி இயக்கிய 'பூ' படம் மூலம் தமிழில் அறிமுகமானவருக்கு முதல் படத்திலேயே பெரிய கவனம் கிடைத்தது. மலையாளம், தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். மரியான், பெங்களூர் டேஸ், என்னு நின்டே மொய்தீன், சார்லீ, டேக் ஆஃப் எனப் பல படங்களில் தன் நடிப்பை நிரூபித்தவர் சினிமாவிற்கு வந்து 11 வருடம் ஆகியியுள்ளது.

தமன்னா: 

அறிமுகமான படம்: சந்த் சா ரோஷன் செஹ்ரா (இந்தி 2005) 

தமிழில் அறிமுகமான படம்: கேடி (2006)

Tamannaah

2005ல் ஜோதி கிருஷ்ணா இயக்கிய எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமாக இருந்தவர் தமன்னா. அந்தப் படத்தில் த்ரிஷாவின் தோழியாக 13 வயதிலேயே நடிக்கத் தேர்வானார். சில காரணங்களால் அது மிஸ்ஸாக 15 வயதில் 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' படம் மூலம் கதாநாயகியானார். முதல் முறை தவறிப்போன தமிழ் என்ட்ரி மீண்டும் ஜோதி கிருஷ்ணா மூலமே நடந்தது. அவர் இயக்கிய 'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே படத்தில் தான் இலியானாவும் தமிழில் அறிமுகமானார். தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பரபரவென நடித்தவருக்கு வாய்ப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இரு மொழிகளிலும் டாப் ஸ்டார்களுடன் நடித்துவிட்ட தமன்னா, நடிகையாகி 2017 மார்ச் மாதமே, 12 வருடம் கடந்துவிட்டது.

அனுஷ்கா:

அறிமுகமான படம்: சூப்பர் (தெலுங்கு - 2005)

தமிழில் அறிமுகமான படம்: ரெண்டு (2006)

Anushka

யோகா டீச்சர் டூ சினிமா வந்த கதை நாம் அறிந்ததே. பூரி ஜெகன்நாத் இயக்கிய சூப்பர் என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவுக்குள் வந்தவர் அனுஷ்கா. ராஜமௌலி இயக்கிய விக்ரமார்குடு (தமிழில் சிறுத்தை) படம் ஹிட்டாக அனுஷ்கா கவனிக்கப்பட்டார். அவரைத் தமிழில் 'ரெண்டு' படம் மூலம் சுந்தர்.சி அறிமுகம் செய்தார். படம் பெரிய அளவில் பேசப்படாததால் இரண்டு வருடங்களுக்கு தெலுங்கு படங்கள் மட்டும் நடித்தார் அனுஷ்கா. இந்த கேப்பில் தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் பெரிதும் பேசப்பட்டன, குறிப்பாக அருந்ததி படம் ப்ளாக்பஸ்டர் ஹிட். அதன் பிறகு மீண்டும் தமிழ் என்ட்ரி விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படம் மூலம். இதன் பிறகு தமிழிலும் தனக்கான இடத்தைப் பிடித்தார்.   இப்போது விஸ்வரூபமெடுத்து வில்லும் அம்பும் அழகும் திறமையுமாய் பாகுபலி தேவசேனாவாக நம் முன் நிற்கிறார்.  ஜூலை 21-னுடன், நடிகையாக தனது 12வது வருடத்தை கடக்க இருக்கிறார் அனுஷ்கா. 

அஞ்சலி:

அறிமுகமான படம்: போட்டோ (தெலுங்கு - 2005)

தமிழில் அறிமுகமான படம்: கற்றது தமிழ் (2007)

Anjali

மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு 'போட்டோ' என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமா என்ட்ரி கிடைத்தது. ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரின் நடிப்புக்காக அதிகம் பேசப்பட்டார். தொடர்ந்து 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'இறைவி' போன்ற படங்கள் மூலம் தன் நடிப்பை நிரூபித்தார். கூடவே பிற மொழிப் படங்களிலும் நடித்து திறமையை வெளிப்படுத்தினார். செப்டம்பர் மாதம் வந்தால் அஞ்சலி சினிமாவிற்குள் வந்து 12 வருடம் நிறைவாகும். 


காஜல் அகர்வால்: 

அறிமுகமான படம்: குன் ஹோ கயா நா (இந்தி - 2004) 

தமிழில் அறிமுகமான படம்: பழனி (2008)

Kajal

மாஸ் மீடியா படித்த காஜலுக்கு, 'குன் ஹோ கயா நா' படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடிக்க வாய்ப்பு வந்தது.  சினிமாவிற்குள் வந்தார். பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம்' படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்க வேண்டியவர், படம் வெளியாக தாமதமானதால் பேரரசு இயக்கிய 'பழனி' மூலம் அறிமுகமானார். ஆரம்ப படங்கள் சரியாக அமையவில்லை என்றாலும் அதற்குப் பிறகு காஜல் நடித்த பல படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ஹிட்டனது. விஜய், அஜித் என இருவரின் படத்திலும் நடித்துக் கொண்டிருப்பவர் ஆகஸ்ட் 13னுடன், சினிமாவில் தனது 13 வருடத்தை முடித்திருப்பார். 

நயன்தாரா: 

அறிமுகமான படம்: மனசினகரே (மலையாளம் 2003)

தமிழில் அறிமுகமான படம்: ஐயா (2005)

நயன்தாரா

மலையாளத்தில் அப்போது தான் சத்யன் அந்திகாட், ஷாஜி கைலாஷ், ஃபாசில் இயக்கிய மூன்று படங்கள் முடித்திருந்தார் நயன்தாரா. அவரைத் தமிழுக்கு 'ஐயா' படத்திற்காக அழைத்து வந்தார் இயக்குநர் ஹரி. அடுத்த படமே சூப்பர்ஸ்டாருடன் 'சந்திரமுகி'யில் நடித்தார். இடையில் இரண்டு மலையாளப்படம், பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் கஜினி, வி.வி.விநாயக் இயக்கிய லக்‌ஷ்மி படம் மூலம் தெலுங்கு என்ட்ரி. பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பிறகு இரண்டு வருடம் தமிழ் படங்களுக்கு, சின்ன கேப் விட்டவர் இடையில் எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார். அந்த இடைவெளிக்குப் பிறகு ராஜா ராணி மூலம் செம கம்பேக் கொடுத்தார். அப்போது முதல் இப்போது வரை லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள். மலையாளத்தையும் சேர்த்து, டிசம்பர் 25 வரும் போது, நயன்தாராவுக்கு இது நடிகையாக 14வது வருடம்.

த்ரிஷா:

அறிமுகமான படம்: ஜோடி (1999)

Trisha

தமிழ் சினிமாவின் சூப்பர் சீனியர் ஹீரோயின் த்ரிஷா தான். 1999ல் 'மிஸ் மெட்ராஸ்' பெற்ற பிறகு கவனிக்கப்பட்டவர் பிரவீன்காந்த் இயக்கிய 'ஜோடி' படம் மூலம் சின்ன ரோலில் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனார். 'மௌனம் பேசியதே', 'மனசெல்லாம்', ஹரி இயக்கிய 'சாமி', ப்ரியதர்ஷன் இயக்கிய 'லேசா லேசா' என ஆரம்ப காலப்படங்களின் மூலமாகவே தன் வருகையை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தார். விஜய்யுடன் நடித்த 'கில்லி'க்குப் பிறகு இன்னும் எகிறியது த்ரிஷாவின் க்ராஃப். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தார். இந்த டிசம்பர் 13 வந்தால் லீட் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க ஆரம்பித்து 16 ஆண்டுகளைக் கடந்திருப்பார்.


டிரெண்டிங் @ விகடன்