Published:Updated:

நயன்தாரா முதல் நந்திதா வரை... 14 ஹீரோயின்களின் அடுத்த புராஜெக்ட் என்ன?

முத்து பகவத்
நயன்தாரா முதல் நந்திதா வரை... 14 ஹீரோயின்களின் அடுத்த புராஜெக்ட் என்ன?
நயன்தாரா முதல் நந்திதா வரை... 14 ஹீரோயின்களின் அடுத்த புராஜெக்ட் என்ன?

பிடிச்சவங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணுங்கிற ஆசை, நிச்சயம் நம்ம மனசுல இருக்கும். அதனால, மனசுக்குப் பிடிச்ச ஹீரோயின்ஸ் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் நடிச்சுட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுப்போமா ஃப்ரெண்ட்ஸ்!  

நயன்தாரா: 

இனி ஹீரோயின் ஓரியன்டட் படங்கள்தான் இவரின் டார்கெட். கடைசியாக வெளியான படம் ‘டோரா’. அடுத்ததாக கோபி இயக்கத்தில் ‘அறம்’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர்காலம்’, மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘வேலைக்காரன்’ போன்ற படங்கள் வெளியாக உள்ளன. `வேலைக்காரன்' ஆகஸ்ட் 25-ம் தேதி ரிலீஸ். தவிர, ‘அறம்’ ரிலீஸுக்குத் தயார். மற்ற படங்களின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. #லவ்லி!

த்ரிஷா: 

நயன்தாராவைப் போலவே ஹீரோயின் சப்ஜெட்களில் கவனம் செலுத்திவருகிறார் த்ரிஷா. சோதனை முயற்சியாக நடித்த ‘நாயகி’ ஏமாற்றிவிட்டாலும், ‘மோகினி’ கைகொடுக்கும் என்பதே த்ரிஷாவின் எண்ணம். கடைசியாக வெளிவந்த ‘கொடி’க்குப் பிறகு,  மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ வெளியாகவிருக்கிறது. சுந்தர் பாலு இயக்கத்தில் ‘கர்ஜனை’, ‘சதுரங்கவேட்டை 2’, ‘1818’, விஜய் சேதுபதியுடன் ‘96’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் த்ரிஷா. #வெயிட்டிங்!

தமன்னா:

`பாகுபலி' வெளியாகும்போது தமன்னாவுக்குக் கிடைத்த வரவேற்பால், பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ், தெலுங்கில் ஐந்து படங்களுக்குமேல் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால், ‘பாகுபலி 2’-வில் இவருக்கான காட்சிகள் அதிகம் இல்லை என்பது வருத்தமே. இருந்தாலும் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’, தெலுங்குப் படமான ‘பெல்லி சுப்புலு’வின் தமிழ் ரீமேக்கான ‘பெண் ஒன்று கண்டேன்’ மற்றும் தமிழில் நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர்காலம்’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்துவருகிறார் தமன்னா. #ஜெய் மகிழ்மதி!

அனுஷ்கா:

`பாகுபலி' சீக்குவலுக்கு நடுவே ‘ருத்ரமாதேவி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘சிங்கம் 3’ போன்ற படங்கள் மட்டுமே நடித்தார். `பாகுபலி 2’-வில் அனுஷ்காவின் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டால், பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. தற்போது தெலுங்கில் ஒரு படம் மட்டும் கமிட்டாகியிருக்கிறார் அனுஷ்கா. மிகப்பெரிய அளவில் யோகா மையம் அமைக்கும் யோசனையிலும் அனுஷ்கா இருப்பதால், அடுத்தடுத்து படங்களில் நடிப்பாரா என்பது சந்தேகமே என்று கிசுகிசுக்கிறது கோலிவுட். #வாவ்!

ஸ்ருதிஹாசன்: 

இந்தியில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக ஸ்ருதி நடித்த ‘பெஹென் ஹோகி தேரி’ ஜூன் 2-ம் தேதி ரிலீஸ். கமல்ஹாசனுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு வெர்ஷன்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார் ஸ்ருதி. தற்போது `சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு இல்லாததால், சுந்தர்.சி-யின் ‘சங்கமித்ரா’ படத்தில் பணியாற்றிவருகிறார். இந்தப் படத்துக்காக வாள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஸ்ருதி. `சங்கமித்ரா’ படத்துக்காக மற்ற படங்களில் நடிப்பதையும் தவிர்த்துவருகிறார். #சபாஷ்!

சமந்தா:

விரைவில் திருமணம் என்பதால், பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்க ஓகே சொல்கிறார் சமந்தா. அட்லி இயக்கத்தில் `விஜய் 61' படத்திலும், விஷாலுடன் ‘இரும்புத்திரை’, தியாகராஜன்குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘அநீதிக் கதைகள்’ மற்றும் ‘சாவித்திரி’ பயோபிக்கில் நடிக்கிறார். தவிர, இரண்டு தெலுங்குப் படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். #கல்யாணப் பொண்ணு!

காஜல் அகர்வால்: 

சிவா இயக்கத்தில் அஜித்துடன் ‘விவேகம்’ படத்தில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் ராணாவுடன் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்திலும், ‘விஜய் 61’ படத்திலும் நடித்துவருகிறார். தற்போது அஜித் பட வேலைகளில் இருப்பதால், விஜய் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் காஜல் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த வருடம் அஜித், விஜய் இருவருடனும் நடிக்கும் ஒரே நடிகை இவரே. #தல-தளபதி!

கீர்த்தி சுரேஷ்:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் முடிந்ததும் தெலுங்கில் பவன் கல்யாண் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், விக்ரமுடன் ‘சாமி 2’-வில் நடிக்கிறார். #வெல்டன்!

ஹன்சிகா: 

இந்த வருடம் ஹன்சிகாவுக்கு `போகன்’ மட்டுமே தமிழில் ரிலீஸானது. தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமாரின் ‘கொடி வீரன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் வேறு படங்கள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம் பக்கம் ஒதுங்கிவிட்டார் ஹன்சிகா. #டேக் கேர் பேபி!

ஸ்ரேயா: 

2001-ம் ஆண்டில் திரையுலகில் நுழைந்த ஸ்ரேயாவுக்கு இது 17-வது வருடம். 2012-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்ரேயாவுக்கு அதிக படங்கள் இல்லை. சமீபத்தில் தெலுங்கில் ரிலீஸான ‘கெளதம புத்திர சதகர்ணி’ படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். தமிழில் கடைசி ஹிட் ‘சிவாஜி’ மற்றும் `குட்டி’ படங்கள்தான். நீண்ட நாள்களுக்குப் பிறகு சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். அடுத்ததாக ‘துருவங்கள் 16’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. #வெல்கம் கண்ணு!

ஐஸ்வர்யா ராஜேஷ்:

தமிழில் ‘கட்டப்பாவ காணோம்’, மலையாளத்தில் ‘சகாவு’ என ஐஸ்வர்யா எப்போதுமே ஹிட் ரேஸில் இருப்பவர். அடுத்தாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. தற்போது விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷுடன் ‘வடசென்னை’ படங்களின் படப்பிடிப்பில் இருக்கிறார் ஐஸ். #ஆசம்!

ரெஜினா: 

அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் செம பிஸி நடிகை ரெஜி. `நெஞ்சம் மறப்பதில்லை’, `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படங்கள் ரிலீஸுக்கு ரெடி. விஷ்ணு விஷாலுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, உதயநிதியுடன் ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ராஜதந்திரம் 2’ மற்றும் தெலுங்கில் ‘நக்‌ஷத்ரம்’ என ஓய்வு இல்லாமல் நடித்துவருகிறார் ரெஜி னா. #லீவ்லெஸ் லேடி!

அஞ்சலி: 

இயக்குநர் ராமின் ‘தரமணி’ மற்றும் ‘பேரன்பு’ இரு படங்களிலும் நடித்து முடித்துவிட்டார் அஞ்சலி. தவிர, ஜெய்யுடன் ‘பலூன்’ படமும் ரிலீஸுக்கு ரெடி. #ஓகே... ஓகே!

நந்திதா: 

குறைவான படங்களே என்றாலும் எல்லாமே பெரிய ஹீரோக்களின் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அரவிந்த் சுவாமியுடன் ‘வணங்காமுடி’, விஜய் சேதுபதியுடன் ‘இடம் பொருள் ஏவல்’. #குமுதா ரொம்ப ஹேப்பி!

முத்து பகவத்

Cinema Reporter