Published:Updated:

“ஏன் தேசிய விருதை ஏற்றுக்கொண்டேன்?” நெகிழ்சியுடன் பேசும் வைரமுத்து!

முத்து பகவத்
“ஏன் தேசிய விருதை ஏற்றுக்கொண்டேன்?” நெகிழ்சியுடன் பேசும் வைரமுத்து!
“ஏன் தேசிய விருதை ஏற்றுக்கொண்டேன்?” நெகிழ்சியுடன் பேசும் வைரமுத்து!

டெல்லியில் நடந்த 64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார்கள் வைரமுத்து, தனஞ்செயன், ராஜுமுருகன், பாடகர் சுந்தரையர் மற்றும் எஸ்.ஆர்.பிரபு. தேசிய விருது பெற்றவர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் வைரமுத்து பேசியதுதான் ஹைலைட்!  சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெற்றிருக்கிறார் கவிப்பேரரசு. தேசிய விருது பற்றியும் தமிழ்த் திரையுலகம் பற்றியும் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்துகொண்டார்.

“கவிதைப் போட்டிக்காக தன்னுடைய கவிதை ஒன்றை அனுப்புகிறான் கவிஞன். ‘நிச்சயம் கவிதை வெற்றிபெறும், குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது கிடைக்கும். நம் வறுமை தீர்ந்துவிடும். இனி வீட்டில் அரிசிக்கோ, உணவுக்கோ பஞ்சமில்லை. வறுமையை வீட்டின் வாசலிலேயே நிறுத்திவிடலாம்' என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு வாரம் கழித்து முடிவு வெளியானது. அந்தக் கவிஞனின் கவிதைக்கு இரண்டாவது பரிசாக நூறு ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அந்த இரண்டாம் பரிசு பெற்ற கவிஞர் மகாகவி பாரதியார். அந்தக் கவிதைதான், 

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே...

முதல் பரிசு பெற்ற கவிதையை இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன். வரலாற்றில் அதற்கான எந்தத் தடயமும் இல்லை. ஆனால் இரண்டாம் பரிசு பெற்ற கவிதையோ, உலகத்தையே ஆள்கிறது; காற்றின் வெளியில் உலாவிக்கொண்டிருக்கிறது;  இயல், இசை,  நாடகம் எனப் பல வடிவங்களில் பரிணமித்துக்கிடக்கிறது. 

இங்கே எது விருது? என்னைப் பொறுத்தவரையில் விருது தருகிறார்கள், பெறுகிறேன் அவ்வளவே. நான் விருதுகளை ஏற்றுக்கொள்வது எனக்காக அல்ல; என்னைச் சார்ந்த தமிழும் தமிழினமும் மகிழ்கிறதே அதற்காகத்தான். ஒவ்வொரு தமிழரும் தங்கள் வீட்டுக்கே தேசிய விருது கிடைத்திருப்பதாக நினைக்கிறார்கள். அந்தப் பெருமையைத்தான் கொண்டாடுகிறேன்'' - நிதானமாகப் பேசுகிறார் கவிஞர் வைரமுத்து.

“கடந்த வருடத்துக்கான தேசிய விருதுக்கு மொத்தம் 434 படங்கள் போட்டியிட்டன. அதில் 86 படங்களே அடுத்தகட்ட தேர்வுக்கு நடுவர்களால் வடிகட்டப்பட்டிருக்கின்றன. அந்த 86 படங்களிலிருந்துதான் அனைத்து பிரிவுகளுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பல மாநிலங்களிலும் ஜூரிகள் உள்ளனர். எல்லா ஜூரிகளும் தங்கள் மண்ணுக்கு விருதுகளைக் கொண்டுசெல்வதற்குத் துடிப்பார்களா மாட்டார்களா? வடக்கே இருப்பவர்களுக்குத் தெற்கு பற்றிய எண்ணம் இருக்கும் என நினைக்கிறீர்களா? இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவுக்கு விருது கிடைத்திருக்கிறது என்றால், தகுதிமிக்க  தமிழ் வென்று வருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். 

விமர்சனங்கள் இரண்டு வகை. ஒன்று கண்ணாடியின் மீது விழும் கல்; மற்றொன்று, கல்லின் மீது விழும் உளி. இந்த இரண்டு விமர்சனங்களுக்குமான மெல்லிய கோட்டை நாங்கள் அறிவோம். எங்களைவிட சிறந்த பல அறிவாளிகளைத் தாண்டிதான் வந்திருக்கிறோம். அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.  தகுதியின் மிகுதி படைத்தவர்களுக்குக் கிட்டாத பெருமை, கொஞ்சம் தகுதி குறைந்த எங்களுக்குக் கிட்டியிருக்கிறது.

கிராமத்தில் என்னுடைய பாடல்களைப் பற்றி விசாரித்தால், ‘என்னப்பா புரியாத மாதிரியே எழுதுறாரு தம்பி, எம்.ஏ படிச்ச திமிரைப் பாட்டில் காட்டுறார்’னுச் சொல்வார்கள். அந்த நேரத்தில்தான் `பாட்ஷா' படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். எங்கே இலக்கியம் வைக்க வேண்டும், எங்கே மக்கள் மொழி வைக்க வேண்டும் என்பதை உழைக்கும் மக்கள்தான் எனக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அவர்கள்தான் நிஜ விமர்சகர்கள். 

நான் கல்லூரியில் படிக்கும்போது,  ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் துணுக்குச்செய்தி ஒன்று வந்துவிட்டாலே பெரிய சந்தோஷம். இன்று ஊடகங்கள் விரிந்தும் சிதறியும் கிடக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி  ஒரே நேரத்தில் எல்லா டிவி-களிலும் வந்தால் மட்டுமே கவனிக்கப்படுகிறார் . ஆனால், ஊடக நண்பர்கள் எங்களைக் கொண்டாடியதற்கு நன்றி. 

தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், தமிழர்கள் பற்றிய எதிர்மறையான செய்திகளே இயற்கையாகவும் செயற்கையாகவும் செய்திகளாக உலாவிக்கொண்டிருக்கும் நேரத்தில், நேர்மறையான சிந்தனையாக ஆறு பேர் தேசிய விருது வாங்கித் திரும்பியிருக்கும் இந்தச் செய்தியைக் கொண்டாடுகிறது தமிழ்ச் சமூகம். 

விஞ்ஞானரீதியில் கலை, இலக்கியம் சினிமா சார்ந்து விமர்சனம் செய்யக்கூடிய புத்தம் புதிய சிந்தனையாளர் தனஞ்செயன். டெல்லியால் இந்தக் கலைவெறியன் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒருசிலரே இந்த மாதிரியான சினிமா எழுத்தாளர்களாக வலம்வருகிறார்கள். அதில் தனஞ்செயன் முக்கியமானவர்.

வாழ்க்கை இரும்பு அடித்துக்கொண்டிருக்கும்போது, கலை பூப்பறித்துக்கொண்டிருக்காது என்ற சிந்தனையில்தான் ‘ஜோக்கர்’ படத்தை எதார்த்தமாகப் படைத்தார் ராஜுமுருகன். இதே மாதிரி இன்னும் பல படங்களை நீங்கள்  இயக்கவேண்டும். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் பாடகர் சுந்தரையருக்கும் வாழ்த்துகள். 

தமிழ்க் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், ஹாலிவுட்டை தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள். சாதிப்பதற்கான அனைத்து தகுதிகளும் தமிழர்களுக்கு உண்டு. இன்னும் ஏராளமான தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெறவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார் வைரமுத்து.

முத்து பகவத்

Cinema Reporter