Published:Updated:

பழைய பட தலைப்புகளுக்கு இவ்வளவு கிராக்கி ஏன்? டைட்டில் ரகளைகள்! #VikatanExclusive

முத்து பகவத்
பழைய பட தலைப்புகளுக்கு இவ்வளவு கிராக்கி ஏன்? டைட்டில் ரகளைகள்! #VikatanExclusive
பழைய பட தலைப்புகளுக்கு இவ்வளவு கிராக்கி ஏன்? டைட்டில் ரகளைகள்! #VikatanExclusive

படத்தின் வெற்றியைக் கதையும், திரைக்கதையும் மட்டுமல்ல, டைட்டிலும் கூட முடிவு செய்யலாம். முதல் பார்வையிலேயே ரசிகர்களை நச்சென கவர்ந்திழுப்பது படத்தின் பெயர்தான். அந்த டைட்டில் ஈர்ப்புடன் இருக்கவேண்டியது அவசியம். அந்தமாதிரியான டைட்டில்கள் கிடைப்பதில் தமிழ் சினிமாவிற்குப் பஞ்சம் வந்துவிட்டது. ஏனெனில் சமீபத்தில் வெளியாகும் சில படங்களின் டைட்டில்கள், ஏற்கெனவே வெளியான பழைய ரஜினி, கமல் படத்தின் டைட்டில்களே. 

பழைய பட டைட்டில்களை, இன்றை இயக்குநர்கள் தேடிச்செல்ல சில காரணங்களும் இருக்கின்றன. காரணம்...

2000-களிலிருந்தே பழைய படத்தின் டைட்டிகளைப் பயன்படுத்தும் ஸ்டைல் தொடங்கிவிட்டது. ஆனால் வருடத்திற்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும். 2005-ல் ‘அன்பே வா’, 2006-ல் ‘ஆடுபுலி ஆட்டம்’ என்று சொற்பமாகவே வெளியானது. அப்போது தனுஷின் ‘பொல்லாதவன்’ 2007-ல் வெளியாகிறது. ரஜினி ஹிட் கொடுத்த படம், அதே டைட்டிலில் தனுஷூம் ஹிட் கொடுக்க, ‘டைட்டில் ட்ரெண்ட்’ காட்டுத்தீயாக பரவ ஆரம்பித்தது. அன்று தொடங்கி இன்றுவரையிலும் ‘டைட்டில் ட்ரெண்ட்’ தமிழ் சினிமாவின் பாரம்பரிய வழக்கமாகிவிட்டது.

கதைக்கு ஏற்ற நச் டைட்டில் வேண்டும். அதுவும் தமிழ் வார்த்தையாக இருக்கவேண்டும். ட்ரெண்டியாகவும் இருக்கவேண்டும். ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாகவும் இருக்கவேண்டும் என பல கன்டிஷன்களோடு டைட்டிலை யோசிக்கிறார்கள் இயக்குநர்கள். தமிழில் சிக்கவில்லை என்றால் ஆங்கில டைட்டிலை அறிவித்துவிட்டு, வரிச்சலுகைக்காக பின்னர் தமிழில் பெயர் மாற்றிக்கொள்கிறார்கள். சமீபத்தில் தனுஷின் ‘பவர் பாண்டி’ டைட்டில் ‘ப.பாண்டி’யாக மாறிய கதை இது போலதான். ஆனாலும் ‘ஜோக்கர்’ மாதிரியான படங்கள் தைரியமாக டைட்டிலுக்காக வரிச்சலுகையை நிராகரிக்கவும் செய்கிறது. #க்ரேட்

டைட்டிலுக்காக இவ்வளவு மல்லுக்கட்டுவதை விட, எல்லோருக்கும் தெரிந்த டைட்டிலாக இருந்தால் எளிதில் ரீச்சாகும். வரிச்சலுகையும் எளிதில் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் இன்றைய இயக்குநர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் பழைய பட டைட்டில்கள்தான். கடந்த வருடம் ‘ஜாலி எல்.எல்.பி’ பட ரீமேக்கான, உதயநிதி நடித்த ‘மனிதன்’, ஜீவா நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படங்கள் வெளியாயின. 

அந்த வரிசையில் டைட்டில் ட்ரெண்டில் சிக்கி, பழைய டைட்டிலுடன் இனி வெளியாகவிருக்கும் படங்கள் என்னென்ன.....! 

வேலைக்காரன்: 

ரஜினியின் செம மாஸ் படம். எஸ்.பி.முத்துராமன், ரஜினி, இளையராஜா காம்போவில் பாடலும் படமும் செம ரீச். 1987-ல் வெளியானது. ‘ரெமோ’ கொடுத்த ஹிட்டினைத் தக்கவைக்க சிவகார்த்திகேயனுக்கு ‘வேலைக்காரன்’ டைட்டில் நிச்சயம் கைகொடுக்கும். நயன்தாரா, ஃபகத்ஃபாசில் நடித்துவரும் இப்படத்திற்காக வேலைக்கார குப்பம் என்ற பெயரில் சாலிகிராமத்தில் மினி கிராமத்தையே செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. இறுதிக்கட்டப் பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது. படம் செப்டம்பரில் ரிலீஸ். 

காளி:

1980-ல் ரஜினி நடித்து வெளியான ‘காளி’ பட டைட்டிலில் தற்பொழுது விஜய்ஆண்டனி நடித்துவருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கிவரும் இப்படத்திற்குத் தயாரிப்பும், இசையும் விஜய் ஆண்டனிதான். படத்திற்கான ஷூட்டிங் தற்பொழுது நடந்து வருகிறது. 

வீரா:

ரஜினி, மீனா காம்போவில் 1994-ல் வெளியானது ‘வீரா’. இப்படத்திற்கான டைட்டில் உரிமை பஞ்சு அருணாசலத்திடம் இருந்தது. அவரின் குடும்பத்தாரை அணுகி டைட்டில் உரிமை கேட்க, எந்தமறுப்பும் இன்றி சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். ‘வீரா’ படத்தில் முதலில் கமிட்டானது பாபி சிம்ஹாவும், பால சரவணனும்தான். தேதிகள் பிரச்னையால் ‘கழுகு’ கிருஷ்ணா, கருணாகரன் பின்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படமும் ரெடியாகிவிட்டது. 

டிக்டிக்டிக்: 

பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்து 1981-ல் வெளியானது ‘டிக் டிக் டிக்’. இப்பொழுது அந்த டைட்டிலில் ஜெயம்ரவி நடித்துவருகிறார். ஷக்தி செளந்தர்ராஜன் இயக்கிவரும் விண்வெளிப் படமே அது. விண்வெளி சார்ந்த படம் என்பதால் கடிகாரத்தைக் குறிப்பிடுவதற்காக கமல் பட டைட்டிலை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர். எப்படியும் ஆகஸ்டில் ரிலீஸாகிவிடும்.  

மகளிர் மட்டும்: 

கமல்ஹாசன் தயாரிப்பில் ரேவதி, ஊர்வசி, ரோகினி நடிப்பில் 1994-ல் வெளியான படம் ‘மகளிர் மட்டும்’. தற்பொழுது ஜோதிகாவின் பட டைட்டில். பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துவரும் படத்திற்கு, ‘மகளிர் மட்டும்’ டைட்டில் சரியாக இருக்கும் என தயாரிப்பாளர் ‛2டி’ ராஜசேகர் நேரடியாக கமலை அணுக, சிரித்த முகத்துடன் யெஸ் சொல்லியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் செம ரீச். இந்தமாதமே படமும் ரிலீஸ். 

ரங்கா: 

ரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் 1982-ல் வெளியான படம் ரங்கா. ‘அவசர அடிக்கு ரங்கா’ என்ற பஞ்ச் அந்த நேரத்தில் செம ஃபேமஸ். அதே ‘ரங்கா’ டைட்டிலில் சிபிராஜ், நிகிலா நடித்துவருகின்றனர்.  படத்திற்கான ஷூட்டிங் தற்பொழுது காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் பகுதிகளில் நடந்துவருகிறது. ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிடமுடியாது என்ற மொமன்டில் ஆபத்தான ஏரியாக்களிலும் ஷூட்டிங் எடுத்துக்கொண்டிருக்கிறது படக்குழு.  

சத்யா: 

ரஜினியின் ‘ரங்கா’ மட்டுமல்லாமல், கமலின் ‘சத்யா’ டைட்டிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் சிபிராஜ். ‘சைத்தான்’ இயக்குநர் ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘சத்யா’. தயாரிப்பு சிபிராஜ். ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ( இந்த ரெண்டு படமும் எப்போ ரிலீஸ்?..... யாருக்குத் தெரியும்! )

விஸ்வரூபம் 2 : 

பல படங்களுக்கு தன்னுடைய படத்தின் டைட்டிலை அள்ளிக்கொடுத்த வள்ளல் கமல். ஆனால் இவரின் ‘விஸ்வரூபம்’ பட டைட்டிலில் ஏற்கெனவே சிவாஜி நடித்துவிட்டார். சுஜாதா, ஸ்ரீதேவி நடிப்பில் 1980-களில் வெளியானது சிவாஜியின் ‘விஸ்வரூபம்’. சிவாஜி டைட்டிலில் முதல் பாகம் வெளியாகிவிட்டது. இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் இருக்கிறார் கமல். இந்த வருட இறுதிக்குள் உறுதியாக ரிலீஸ் ரூபம்..ரூபம்..ரூபம்.. பார்ட் 2.

முத்து பகவத்

Cinema Reporter